How to Train Your Dragon (2010)
Film : How to Train Your Dragon
Direction : Chris Sanders, Dean DeBlois
Studio: DreamWorks Animation
Year : 2010
Language : English
Genre : Animation
நாம் மனிதர்கள்.. ஆனால் சில விஷயங்களுக்கு அப்பாற்பட்டு நாம் எல்லாருமே விலங்குகள் தான்... பல்வேறு விலங்குகளில் நாமும் ஒரு தனி அங்கம்... மனிதன் எனும் அடையாளமே நமது சிந்திக்கும் அறிவினால் ஏற்பட்டது. ஆனாலும் அதைவிட இன்னொரு காரணமும் உண்டு... அது, அன்பு.
நாம் வளர்க்கும் பிராணிகள் நம்மிடம் பதிலுக்கு எதிர்பார்ப்பது அதன் அன்பு.... நாம் அதனிடம் பாசத்தைக் கொட்டுகிறோம்... ஒருவர் மீது ஒருவர் கொட்டும் பாசத்தால் அதனை நம்மால் விலங்கு என்று சொல்லிவிட முடியாமலும் இருக்கிறது. எனக்குத் தெரிந்து என் சித்தி ஒருவர், தான் வளர்த்த நாய் இறந்து போனதற்காக இரண்டு நாட்கள் உண்ணாமல் அழுதழுது கண்கள் வீங்க, ஆச்சரியமாக நான் பார்த்திருக்கிறேன்... என் மாமா ஆசையாக கோழி வளர்த்து அது ஒரு தெருநாயால் கண்முன்னே சாகடிக்கப்பட்டதைப் பார்த்து ஒரு வாரம் சோகமாக இருந்ததை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.. நானே ஒரு கோழி இறந்ததற்கு தொண்டை அடைக்க வருத்தப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் என்னைச் சார்ந்த உதாரணங்கள்... ஆனால் வாழ்வில் நாம் காணும் விலங்கு + மனிதன் உதாரணங்கள் வியப்பில் ஆழ்த்துபவை!!
எந்த ஒரு விலங்கும் குரோதம் கொண்டிருப்பதில்லை. மனிதனைத் தவிர// அவைகள் தற்காப்புக்காகவோ அல்லது உணவிற்காகவோதான் இன்னொரு விலங்கை வீழ்த்தப்பார்க்கின்றன.... ட்ராகன்களும் அப்படித்தான்...................
சரி உங்களுக்கு ஒரு கதை சொல்லுகிறேன்..
முன்னொரு காலத்தில் அட்லாண்டிக்கில் நுண்ணியப் புள்ளியாக இருக்கும் ஒரு தீவொன்றில் ஹிக்கப் என்றொரு சிறுவன் இருந்தான். அந்த தீவுக்கு அடிக்கடி ட்ராகன்கள் வந்து ஆடுகளைக் கவர்ந்து கொண்டு சென்றுவிடும். அதனைத் தடுக்க அந்த தீவு வாசிகள் எல்லாரும் ட்ராகன்களை எதிர்த்து போராடுவார்கள். ஹிக்கப் ரொம்பவும் சிறுவனல்லவா... அவனுக்கு சண்டை போடத் தெரியாது. இருந்தாலும் தன்னோட திறமை எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ஒருமுறை ட்ராகன்கள் தீவை சூறையாடிக் கொண்டிருக்கும் போது யாருக்கும் தெரியாமல் ட்ராகன் இனத்திலேயே யாராலும் பார்த்திராத, திறமை வாய்ந்த மிக வேகம் வாய்ந்த நைட் ஃப்யூரி என்ற ட்ராகனை வீழ்த்தி விடுகிறான். ஆனால் பாவம், அப்போது அவனைப் பாராட்ட யாருமில்லாததாலும் அதே நேரத்தில் சிறுவன் இன்னொரு ட்ராகனிடம் மாட்டிக் கொண்டதாலும் சிறுவனின் தந்தை காப்பாற்றி அவனை எச்சரிக்கிறார்.. சிறுவன் தானும் ஒரு ட்ராகனை வீழ்த்திவிட்டேன் என்று சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை
போர் முடிந்த மறுநாள் ஹிக்கப் அந்த தீவினுள் நொந்தவாறே வெகுதூரம் செல்கிறான். அப்போதுதான் அவனுக்குத் தெரிகிறது நைட் ஃப்யூரி ட்ராகன் ஒன்று தான் எய்த அம்பினால் மாட்டி பரிதாபமாக விழுந்து கிடக்கிறது என்று... அவனுக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி.... எப்படியாவது அதனைக் கொன்று தன்னை நிரூபிக்க வேண்டும் என்று துடித்து, கத்தியால் ஓங்கி குத்தப் போக..... அவனுக்கு ஏதோ ஒன்று தடுக்கிறது... குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் இந்த ட்ராகனை கொல்ல அவனுக்கு மனம் வரவில்லை, உடனே அதை விடுவித்து பறக்க விட்டான்... அதுவும் கட்டவிழ்ந்ததும் ஹிக்கப்பை ஒரு முறை முறைத்துவிட்டு ததக்கா பிதக்கா என்று பறந்து பறந்து சென்றது...
இப்போது அந்த தீவினுள் ட்ராகனைக் கொல்வது எப்படி எனும் பயிற்சி அங்குள்ள பயிற்சியாளரால் வழங்கப்படுகிறது. அதில் ஹிக்கப்பும் அவன் வயதை ஒத்த மற்ற சிறார்களும் பங்கு பெறுகிறார்கள். அப்போது பயிற்சியாளர், ட்ராகன்களின் முதல் வேலை மனிதர்களைக் கொல்வதுதான் என்கிறார். அதைக் கேட்ட ஹிக்கப் அப்படியானால் தன்னை ஏன் நைட் ஃப்யூரி கொல்லவில்லை என்று யோசிக்கிறான்... பயிற்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ட்ராகனை பயிற்சிக்காக சிறையிலிருந்து வெளியேற்றுவார்கள். அதனை வெல்லவேண்டும்... முதல் நாள் ஆஸ்ட்ரிட் எனும் சிறுமி முதன்மை பெறுகிறாள். ஹிக்கப் தோற்றுவிடுகிறான். உடனே நைட் ஃப்யூரியைப் பார்த்த இடத்திற்குப் போய் பார்க்கிறான்.. அங்கே அந்த ட்ராகன் பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்... அப்போதுதான் அவனுக்குத் தெரிகிறது அந்த ட்ராகனின் வாலில் ஒரு பகுதி வெட்டுபட்டிருப்பது... அந்த ட்ராகனிடம் கொஞ்சம் கொஞ்சமாக சினேகம் கொண்டு அறுந்த வாலைப் போல ஒன்று செய்து வந்து, மாட்டுகிறான்... அப்போது அந்த ட்ராகனால் பறக்க முடிகிறது. இடையிடையே ட்ராகன்களின் நிறை குறை ஆகியவற்றை அறிந்து அதை பயிற்சியில் செயல்படுத்தி அனைத்து பயிற்சிகளிலும் முதல் ஆளாக வருகிறான். இதனைக் கண்டு பொறாமை கொள்ளும் ஆஸ்ட்ரிட் இவனுக்கும் நைட் ஃப்யூரிக்கும் உள்ள சினேகத்தை அறிந்து கொள்வதோடு, ட்ராகன்களின் கோட்டையையும் ட்ராகன்கள் எதற்காக ஆடுகளைக் கவர தீவுகளுக்கு வருகின்றன என்ற ரகசியத்தையும் அறிந்து கொள்கிறாள். அதனோடு, ட்ராகன் கோட்டையில் இருக்கும் மிகப்பெரும் ட்ராகனால்தான் மற்ற ட்ராகன்கள் அடிமை வேலையாக அதற்கு உணவு கொண்டுவரும் பொருட்டு தீவுகளைச் சூறையாடுகின்றன என்பதையும் இருவரும் தெரிந்து கொள்கிறார்கள்
இறுதி பயிற்சியில் வைகிங் எனும் நிலையை அடைய ஹிக்கப் அடைத்து வைக்கப்பட்ட ட்ராகனோடு சண்டையிடும் பொழுது, அனைவருக்கும் கேட்கும்படி, ட்ராகன்கள் நாம் நினைப்பது போல அல்ல ; அவைகளைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று ஆயுதத்தைக் கீழே போட்டுவிடுகிறான். இருப்பினும் சண்டைக்கு நின்ற ட்ராகன் அவனைக் கொல்ல வருகிறது... அதாவது அவன் தன்னை துன்புறுத்துவிடுவானோ என்று அஞ்சி கொல்ல வருகிறது. இந்த அமளிதுமளியை எங்கிருந்தோ கேட்கும் நைட்ஃப்யூரி தனது அறுந்த வாலோடு எப்படியோ முயற்சித்து பறந்து வந்து ஹிக்கப்பை காப்பாற்ற முயற்சி செய்கையில் மனிதர்களின் கைக்கு மாட்டிவிடுகிறது. இதுவரையிலும் நைட்ஃப்யூரியைக் கண்டிராத மக்கள் அதனை சிறையில் அடைப்பதோடு மட்டுமில்லாமல் ட்ராகன்களின் கோட்டைக்குச் செல்லும் வழி நைட்ஃப்யூரியை வைத்து அறிந்து அங்கே அதனை அழைத்துச் சென்று ட்ராகன்களோடு போரிட தயாராகுகிறார்கள்.
அந்த போரில் வென்றார்களா?
ஹிக்கப் மற்றும் ஆஸ்ட்ரிட் ஆகியோர் கதியென்ன?
நைட்ஃப்யூரி என்னவாயிற்று?
பெரிய ட்ராகன் கொல்லப்பட்டதா?
போன்ற விபரங்களை How to Train Your Dragon படத்தின் க்ளைமாக்ஸில் ஆனந்தமாகக் கண்டுகளிக்கலாம்!!
பிரிட்டிஷ் எழுத்தாளரான Cressida Cowell எழுதிய சிறுவர் இலக்கியமான How to Train Your Dragon எனும் கதையைத் தழுவியே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவரது கதைகளில் முதல் கதையும் இதுவே, இதுவரை பத்து கதைகள் எழுதியிருக்கிறார்.. பத்தும் திரைப்படம் ஆகும் என்பதற்கு இதன் அடுத்தபாகத்திற்கான வேலைகளே சான்று. படம் 3D யில் வந்திருக்கிறது. எனக்கு அதனை 3Dயில் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. படம் முழுக்க ஒரு சீரியஸ்னஸ் குறைந்து காணப்படுகிறது. Pixar ன் படங்களில் இருக்கும் உணர்வெழுச்சி இதில் மிகவும் குறைந்திருப்பது ஒரு மிகப்பெரிய குறை. பிக்ஸரின் UP படத்தில் வரும் கிழவர் சோகமாக இருந்தால் நாமும் சோகமாகிவிடுவோம். சிரித்தால் நாமும் சந்தோஷப்படுவோம்... Wall-E காதலித்தால் நாமும் காதல்வயப்படுவோம்... ஆனால் ஹிக்கப்பின் வீரம் நமக்கு சிலிர்க்கவில்லை என்பதே உண்மை.
:Trailor:
Comments