2010 - ஒரு பார்வை - 1

எந்த வருடங்களுமில்லாது இந்த வருடத்தில்தான் அதிக சினிமாக்களைப் பார்க்கவேண்டியிருந்தது. நண்பர்கள் யாராவது ஒன்பது மணிக்கு அழைத்து “கிளம்பலாமாடா?” என்றால் அடுத்த அரைமணி நேரத்திற்குள் ஏதாவது ஒரு தியேட்டரில் நின்றுகொண்டிருப்போம். எனது சிந்தனைகளும் நண்பர்களது சிந்தனைகளும் வேறுவேறானவை என்பதால் அதிரடிக் கார மச்சான் படத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் செல்லுவதுண்டு. பெரும்பாலும் படத்தைப் பார்ப்பதைவிட நாங்கள் பேசிக் கொள்வது அதிகமாக இருக்கும்.. ஆனாலும் அதிகம் அழுததுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அப்படி அழுதும் அழுகாமலும் சுமாராகவோ சூப்பராகவோ பார்த்த ஒரு சில படங்களைப் பட்டியலிடலாம்....


10. நான் மகான் அல்ல / பாஸ் எ பாஸ்கரன்





ஒரு சராசரி மனிதன், எதிர்பாராத விதமாக தந்தையை இழந்து அதற்குப் பழி வாங்கும் இந்திய சினிமாக்கள் எழுதிமுடித்த புதிய கதையே நான் மகான் அல்ல. சின்னச் சின்ன காமெடிகள். இப்படத்தின் மிகப்பெரும் பலம். ஒரு சராசரி தமிழ் மசாலா படங்களிலிருந்து கொஞ்சூண்டு தள்ளி வந்த படம். இப்படத்தில் கார்த்தியின் நகைச்சுவை கலந்த நடிப்பு ஓரளவு ரசிக்கும்படியாகவும் ஓரிரு இடங்களில் எரிச்சலூட்டவதாகவும் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் “சுறாவுக்கு எது எவ்வளவோ பரவாயில்லை” என்ற பேச்சு எழுகிறது. இப்படத்தில் கார்த்தியின் தந்தை ஜெயப்பிரகாஷ் வரும் காட்சிகள் அருமையானவை. படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.... இப்போதெல்லாம் தியேட்டரில் இரண்டு மணி நேரமே அமர்ந்து பார்க்க முடிவதில்லை.
பாஸ் எ பாஸ்கரன் படத்தில் வெட்டியாக ஊர் திரியும் அரியர்ஸ் ஆர்யா, உறுப்படியாக ஏதாவது செய்ய முற்பட்டு டுடோரியல் ஆரம்பித்து முன்னேறுவதே கதை. இப்படத்தில் சந்தானத்தைத் தூக்கிவிட்டால் படத்தில் ஒன்றுமேயில்லை. கதையே இல்லாத நகைச்சுவைப் படங்கள்தான் இப்பொழுது ட்ரெண்ட் போலும். கோயம்புத்தூரில் எந்திரன் வந்து போனபிறகும் இப்படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்பொழுது புரிகிறது. குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த காட்சிகளும் இல்லை. எனினும் இப்படத்தை விடவும் மொக்க படங்கள் வருவதால் வேறு வழியின்றி பத்தாவது இடம்.>!!

9. மைனா




கமல் சொன்னார் அழுதேன் என்று, உதயநிதி சொன்னார் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று ஒரு ஹைப் ஆக்கியிருந்தார்களேயொழிய படத்தில் அப்படியான ஒரு காட்சியுமில்லை. நாடகத்தனமான ஓரிரு காட்சிகள், மிகையாகவோ குறைவாகவோ கதாப்பாத்திரங்களின் நடிப்பு என கதை திரைக்கதை ஆகியவை அமைத்த இயக்கமும் சுமார் ரகமே... சிறுவயதிலிருந்தே தான் காதலித்த பெண்ணான அமலாவை திருமணம் செய்ய ஆசைப்படும் முரட்டு விதார்த், சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறைக்குச் செல்ல நேரிட, சிறையிலிருந்து தப்பித்து அமலாவை சந்தித்து இரு காவலர்களின் சிறையில் மலைக்காட்டில் செல்லும் பயணமே மைனா. இப்படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரே விஷயம் என்னவெனில் காவலதிகாரியின் கதையையும் மைனா கதையையும் கொண்டுவந்ததுதான்.. ஆனால் அதை இணைத்தது இயல்பாகத் தெரியவில்லை. திணிப்பாக இருக்கிறது. படம் முழுக்க மலைக்காடுகளில் பயணிப்பதால் கண்கள் முழுக்க குளுமை. ஆனால் வழக்கமாக வரும் படங்களிலிருந்து சற்று தள்ளி வந்திருக்கிறது எனும் அசட்டுத்தனமான சமாதானமே இப்படத்தைப் பற்றி பேச வைக்கிறது.


8. தமிழ்படம்



தமிழில் ஒரு முழுநீள ஸ்பூஃப் திரைப்படம் வந்ததே கிடையாது எனும் குறையைத் தீர்க்க வந்த படம். விஜய் டிவி லொள்ளு சபாவில் சந்தானம் இருந்தவரையிலும் படங்களை கிண்டல் செய்யும் பாணி வெகு பிரசித்தியாக இருந்தது. தமிழ்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். பல படங்களை, அதன் பாத்திரங்களை, காட்சிகளை என பலதரப்பட்ட முறையிலும் மாற்றியமைத்த பாணி மற்ற சினிமாக்கள் இத்தனை கேவலமாக எடுக்கப்பட்டு வருகின்றன என்று வஞ்சப்புகழ்கிறது. சிவா வின் சினிபாதையில் ஒரு முக்கிய திரைப்படம். ஒரு நகைச்சுவைப் படமென்றாலும் மிகுந்த தரமான ஒளிப்பதிவு நீரவ் ஷாவிடமிருந்து கிடைத்தது... இதில் நடித்த நடிகை திஷா பாண்டேவைத்தான் ஆளையே காணோம்..

7. இ.கொ.முரட்டு சிங்கம்



நான் சிறுவனாக இருந்த பொழுது தொலைக்காட்சிகளில் பழைய ஜெய்சங்கர் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அவர் குண்டுகட்டாக ஒரு மரு அல்லது மீசை வைத்துக் கொண்டு தொப்பி அணிந்து அது என்ன கலாச்சார எழவோ என்று தெரியாமலேயே ரசித்திருக்கிறேன். பிறகு உள்நாட்டு ரீதியிலான கலாச்சார மரபிலிருந்து அவை வரவில்லை என்றறிந்த பிறகு அப்படங்களும் வருவது நின்று விட்டிருந்தது. இச்சூழ்நிலையில் இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் ஒரு அசாதாரண தைரியம் என்றே சொல்லலாம். சிம்புதேவனின் இயக்கத்தில் ஏற்கனவே வந்த படங்கள் உண்மையில் நிறைவை அளிப்பதாக இருந்தது. இதுவும் ஓரளவு... ஷோலேபுரம் எனும் ஊரை அடிமையாக்கி ஆட்சி செய்யும் கிழக்குக் கட்டை நாசரிடமிருந்து காப்பாற்ற முரட்டுச் சிங்கம் லாரன்ஸ் வரவழைக்கப்படுவதும் வழக்கம்போல கவ்பாய் கதைகளில் வரும் புதையலைத் தேடுவதுமே கதை. ஓரிரு இடங்களில் குறிப்பாக எம்.எஸ் பாஸ்கர் வரும் இடங்களிலெல்லாம் நகைச்சுவை பறக்கிறது. இப்படம் முழுக்க அவர் தமிழிலேயே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஷுவல் காட்சிகள், உடைகள், கவ்பாய் பாணியிலான பாத்திரங்கள், ஓரிரு நடைமுறை கிண்டல்கள் ஆகியவை பலம்...

6. நந்தலாலா.



ஒரு மிகச்சிறந்த படம் என்பது காட்சிகளின் வழியே பார்வையாளனுக்குக் கதையைச் சொல்லுவது மட்டுமின்றி கதையை உணர்த்தி மனதிற்குள் அசைபோடவைப்பதும் கூட. அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தின் ஆக்கம் சுத்தமாக இருந்தாலொழிய அது சிறந்தபடமாகாது. நந்தலாலா சிறந்த படம் என்பதைக் காட்டிலும் அதனுடைய மூலம் இயக்குனர் மிஷ்கினுடையது அல்ல என்பதே பிரதானமாக இருக்கிறது. தாயைத் தேடிச் செல்லும் மனப்பிரழ்வுற்ற மிஷ்கின் மற்றும் அவரைப் போலவே தாயை நோக்கிச் செல்லும் சிறுவன் இருவரும் சந்திக்கும் மனிதர்கள், நெடிய பயணம் ஆகியவைதான் நந்தலாலா. குறியீடுகள் நிறைந்தது என்று பலர் சொல்லியிருந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் அது என்ன குறியீடு, இது என்ன குறியீடு என்றெல்லாம் யோசிக்காமல் படத்தோடு ஒன்றியிருந்தது ஆறுதல். காமரா காட்சிக்கோணங்கள் இதுவரை வந்த படங்களிலேயே இவருடையது வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருப்பது ஒன்றும் புதிதில்லை. என்றாலும் இது ஒரு காப்பிகேட் என்று அறிந்து கொண்டதிலிருந்தே விருப்பு இல்லாமல் போயிற்று. மூலத்தை மிஞ்சிய நகல் என்று வேண்டுமெனில் சொல்லிக் கொள்ளலாம். அடுத்தபடத்தை முழுக்க உங்களது கற்பனையில் படையுங்கள் மிஷ்கின்.

அடுத்த ஐந்து என்னவாக இருக்கும்???

Comments