Go Go கோவா

குன்னூரில் கால் உடைந்ததற்குப் பிறகு வேறு எந்த பயணமும் செல்லவில்லை என்பதால் தீபாவளியில் எப்படியாவது எங்காவது சென்றுவிடவேண்டும் என்று நண்பர்கள் எல்லாரும் மிகவும் முனைப்பாக இருந்தோம்! அவர்களை உங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்துகிறேன்.

  1. ஸ்கூபி, - குன்னூரில் பயணத்தில் உங்களுக்குத் தெரிந்திருக்கும்
  2. கோகுல் - குன்னூரில் இவனது கார்தான் விபத்துக்குள்ளானதும் தெரிந்திருக்கும்
  3. ஆதவா - கால் ஒடிந்தவரை மறந்திருக்க மாட்டீர்கள்
  4. ஜெ.பி - எங்கள் பயணத்தில் முதல்முறையாக கலந்து கொள்ளும் நண்பன்
  5. குட்டி - முதல்முறையாக எங்களோடு..

எங்காவது போகலாம் என்றால் உடனே நண்பர்கள் சொல்வது கோவா பயணம் தான்.. இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே சொல்லிச் சொல்லி, ஒருமுறை என்னால் தடைபட்டு, மறுமுறை ஸ்கூபியால் தடைப்பட்டு, இம்முறை போயே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தோம். கோவா படம் வந்ததிலிருந்தே வீட்டில் உள்ளவர்கள் கோவா பற்றி நன்றாக அல்லாவிடினும் ஓரளவேனும் தெரிந்து வைத்திருந்ததால் அனுமதி கேட்டவுடனே “அங்கல்லாம் தண்ணியடிக்கிறவங்கதான் போவாங்க, உங்களுக்கென்ன ஜோலி?” என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். என்றாலும் எப்படியோ அனுமதி வாங்கி தீபாவளியை கோவாவில் கொண்டாடலாம் என்று தீர்மானித்தோம். முதலிலேயே இரயிலில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டுமென்பதால் மூன்று மாதங்களுக்கு முன்னரேயே கோவா பயண ஆரம்பத்தைத் துவக்கிவிட்டோம். எங்களது திட்டப்படி கோவாவில் காலை போய் சேரவேண்டும் என்று முடிவெடுத்து, திருப்பூரிலிருந்து ஷொரனூர் போய் அங்கிருந்து கோவாவுக்கு முன்பதிவு செய்தோம். திரும்ப வருகைக்கும் முன்பதிவு செய்திருந்தாலும் அது காத்திருப்புப் பட்டியலில்தான் இருந்தது. சரி எப்படியும் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையாக இருந்தோம்!!

கோவா செல்வதற்கு முன்பு :

  • கோவா செல்வதற்கு முன்பு அங்கே என்னென்னல்லாம் பார்க்கமுடியும், என்னன்ன இடம் இருக்கிறது, தங்கும் விடுதி விசாரிப்பு, கோவா வரைபடம் குறித்து பலவாறாக செய்திகளைச் சேகரித்து ஒரு சின்ன புத்தகமே அச்சிட்டோம். அது ஓரளவு பயனுள்ளதாக இருந்தது.
  • ஏற்கனவே போய் வந்தவர்களிடம் சில ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டோம். குறிப்பாக, கோவா கைடுகளையோ, அல்லது சொந்த மொழி பேசி கவருபவரையோ நம்பாமல் இருக்கவேண்டும், சொன்ன விலையிலிருந்து பாதியளவு குறைத்து பொருளோ, அல்லது கடல் விளையாட்டுக்களையோ பேரம் பேசவேண்டும் ; வாடகை கார் அல்லது வண்டி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தெரிந்து கொண்டோம்.
  • இணையத்தில் கூறியுள்ளபடி தங்கும் விடுதி வசதியாக இருக்காது... ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து முன்பதிவு செய்யவேண்டும், அல்லது நாமே நேரடியாக கோவாவிற்குச் சென்றபிறகும் தங்கும்விடுதியின் வசதி பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.
  • கோவாவில் என்ன வகையான ஆடை அணிவது என்ற குழப்பத்திற்கு இடமேயில்ல, டீ சர்ட், ஷார்ட்ஸ், மட்டுமே எல்லா இடங்களுக்கும் போதுமானது, சர்ச், கோவில்களுக்குச் செல்பவர்கள் பேண்ட், சர்ட் போட்டுக் கொள்ளலாம். கடற்கரைகளில் ஷார்ட்ஸ் அல்லது ஜட்டி போதுமானது, பெண்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப உடையணியலாம், கடற்கரைகளில் உலாவும்போது அல்லது விளையாடும்போது உடைகளில் கவனம் இருக்கவேண்டும். கடற்கரைகளில் சுடிதார், அல்லது சேலை ஒத்துவராது. ரொம்ப அதிகமாகவெல்லாம் துணி எடுத்துப் போகவேண்டும் என்ற அவசியமில்லை
  • ஒன்றரை நாள் இரயில் பயணம் என்பதால் கூடுமானவரைக்கும் சாப்பாட்டுச் செலவை மிச்சம் செய்யலாம். நாங்கள் ஐந்து பேரும் ஆளுக்கொரு உணவு பதார்த்தம் செய்து எடுத்துக் கொண்டோம். பிளாஸ்டிக் பெட்டியில் (ஸ்வீட் பாக்ஸ்) அல்லது இலையால் மடித்து தூக்கியெறியும்படியான பொட்டலங்களைக் கொண்டுபோவது நல்லது.
  • கோவா செல்ல சரியான காலம் அக்டோபர் - மார்ச் என்பதால் இடைப்பட்ட காலத்தில் மழை அல்லது குளிர் இருக்கக் கூடும். மழைக்காலத்தில் ரெயின்கோட் எடுத்துக் கொள்வது நல்லது. கோவாவில் என்னதான் மழை பெய்தாலும் உஷ்ணம் அதிகம்... மார்ச்சுக்குப் பிறகு கோவா பயணம் பற்றி எண்ணவே வேண்டாம்.
  • பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நவீன உடையணிந்தே பயணிக்கிறார்கள். கடற்கரைகளில் பிகினியும் பாண்டியும் தான்... ஒரு சில இடத்தில் நிர்வாணமும் உண்டு ; ஆகவே குடும்பத்தோடு செல்ல நினைப்பவர்கள் அதிக கவனத்தோடு இருப்பது நல்லது.
தினம் 1 (03-11-10)

கால ஆறு முப்பதுக்கெல்லாம் ஸ்கூபியின் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். 7.45 க்கு பாலக்காடுக்கு பஸ் கிளம்புமென்பதால் சீக்கிரமே கிளம்பினோம், ஆனால் நாங்கள் செல்வதற்குள் பஸ் கிளம்பிவிட்டது, திரும்பவும் 8.30 க்கு பாலக்காடு பஸ் இருக்குமென்று விசாரித்து பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தோம். ராக்கி எங்களை வழியனுப்ப வந்தான். பாவம் இரண்டு வருடங்களாக அவன் தான் கோவா வரேன் என்று சொல்லிக் கொண்டேயிருந்தான், இம்முறை அவனுக்கு தலைதீபாவளி என்பதால் வரமுடியாமல் போயிற்று. திருப்பூரிலிருந்து பாலக்காடுக்கு கிட்டத்தட்ட 110 கி.மீட்டர்கள். சுமார் 12.00 மணிக்கெல்லாம் பாலக்காடு போய்சேர்ந்தோம். ரயில் மாலை 5.00 மணிக்கு என்பதால் சீக்கிரமாகவே இரயில் நிலையத்திற்குச் சென்றுவிடவேண்டுமென்று முடிவெடுத்தோம். பாலக்காட்டிலிருந்து ஷொரனூருக்கு பஸ் விசாரிக்க, “கொளப்பள்ளி” எனும் ஊரிலிருந்து மூன்று கி.மீட்டர் தொலைவில் ஷொரனூர் இருப்பதாக அறிந்து கொளப்பள்ளி பஸ்ஸில் ஏறினோம். அங்கிருந்து சுமார் 50 கி.மி. பயணம்!!

பாலக்காடிலிருந்து கொளப்பள்ளி வரை கேரள பேருந்து பயணம் இனிமையானதாக இருந்தது. சுற்றிலும் பசுமை நிறைந்து அதில் ஒன்றிரண்டு இடங்களில் முட்டிக் கொண்டிருக்கும் வீடுகளாய் அழகான கட்டமைப்புத் திட்டம். ஒவ்வொரு வீடுகளும் வித்தியாசமாக கவர்ந்திழுப்பதாக இருந்தது. மதியம் 1.30 க்கு கொளப்பள்ளி வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஆட்டோவில் ஷொரனூர் இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். ஷொரனூர் இரயில்நிலையம் திருப்பூர் இரயில் நிலையத்தை விடவும் பெரியது. ஆறு பிளாட்பாரங்கள் இருந்தன.

மாலை ஐந்து மணிக்கு நேத்ராவதி எக்ஸ்பிரஸ் வந்துவிடும் என்பதால் அனைவரும் மதிய உணவை உண்டுவிடலாம் என்று இரயில் நிலையத்தில் உண்ண அமர்ந்தோம். குட்டி, காலையில் சாப்பிடுவதற்கு நூடுல்ஸ் செய்து எடுத்துவந்தான், காலையில் உண்ண நேரமில்லை, ஜெ.பி தக்காளி சாப்பாடு செய்து எடுத்து வந்தான், ஸ்கூபி உருளைக்கிழங்கும் கத்திரிக்காயும் சேர்ந்த பொறியல். சாப்பிட்டு விட்டு ஐந்தாவது பிளாட்பாரத்தில் வந்து அமர்ந்தோம்.

எங்களுக்கு அருகே ஒரு பெண்மணியும் ஒரு சிறுமியும் இருந்தார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்து, “எல்லோரும் கோவா போகிறீர்களா” என்றார்கள். ஆமாம் என்றோம். அவர்களும் கோவாவுக்குத்தான் செல்கிறார்கள். தஞ்சாவூரில் பிறந்து, கோவாவில் வசிக்கிறார்கள். அந்த சிறுமியிடம் நான் பேசினேன். “நித்ய நீலாம்பரி” என்று தன்னுடைய பெயரைச் சொன்னாள். சுமார் 8 அல்லது 9 வயது இருக்கும் மூன்றாவது படிக்கும் அவள் மிக அழகாக இருந்தாள். மூக்கில் மூக்குத்தி குத்தியிருந்தாள். கையில் ஒரு டைரி ஒன்றை வைத்து குறிப்பு எழுதிக் கொண்டிருந்தாள். அந்த டைரியை நான் வாங்கிப் பார்த்தேன் (”படிக்க வேண்டாம் அங்கில்”) அதன் இறுதியில் வெகு அழகான ஓவியங்களை வரைந்திருந்தாள். அதுவும் புதிது புதிதான சிந்தனைகளில்.... அதை நான் பாராட்டியதும் தனது ஓவிய புத்தகத்தைக் காண்பிக்க ஆர்வமானாள். ட்ரேஸ் முறையில் இருந்தாலும் நன்றாக வரையும் திறமை அப்பெண்ணுக்கு இருக்கிறது. கொஞ்ச நேரம் வரைவது குறித்து சில ஆலோசனைகளைக் கூறினேன். ஐந்து மணி வரையிலும் வரைவதும் விளையாடுவதுமாகவே சென்றது... எங்கள் பெயரை வாங்கி குறித்துக் கொண்டாள். எல்லோருடைய பெயரையும் குறிக்கும்பொழுது, குட்டியின் பெயரை SMALL என்று எழுதியது செம காமெடி! அப்பொழுதிலிருந்து அவனை Small Uncle என்றே கூப்பிட ஆரம்பித்தோம். இரயில் வந்ததும் நாங்கள் பிரிந்து கொண்டோம். அவசரத்தில் போன் எண்ணைக் கேட்க மறந்துவிட்டேன். அவர்கள் A/C கோச்சில் செல்வதால் இரயிலில் பார்க்க முடியாமல் போனது... போன் நம்பர் கேட்கமுடியாமல் போனது குறித்து வெகுவாக வருத்தப்பட்டேன்.

இரயிலில் ஜன்னலோரத்தில் நான், கோகுல், அடுத்தடுத்து ஸ்கூபி, ஜெ.பி, குட்டி அமர்ந்திருந்தோம். பயணக்களைப்பு குட்டியை நன்றாக ஓட்டுவதிலிருந்து தெரியாமலேயே போனது. இரவு 9.30 மணி வரை சீட்டு விளையாடினோம். குட்டிக்கு விளையாடத் தெரியாது என்பதால் அவன் செய்யும் காமெடிகளைப் பார்த்துப் பார்த்து வயிறு வலிக்கச் சிரித்துக் கொண்டே போனோம். இரவு குட்டி கொண்டுவந்திருந்த சப்பாத்தி, நான் கொண்டுவந்த புளிசாதம், ஸ்கூபியின் தக்காளித் தொக்கு, மற்றும் புளி ஊறுகாய் ஆகியவை உண்டோம். இரவில் கோவை GRD கல்லூரி புரபசர் ஒருவரின் நட்பு கிடைத்தது. அவரது மனைவி Goa institute of Management ல் புரபசராக (அல்லது மாணவியாக) இருப்பதாகக் கூறினார். கூடியவரையிலும் அவரிடம் கோவா குறித்த தகவல்களைப் பெற்றுக் கொண்டோம். இரவு 12.00 மணிக்கு மங்களூரை எட்டியது இரயில். பின்னர் நேரமாகவே அனைவரும் உறங்கச் சென்றோம்.

போட்டோக்களோடு தொடரும்...

Comments

தொடருங்கள் நன்றாக உள்ளது
ஆகா போட்டோவெல்லாம் அடுத்த பதிவில்தானா? ஒக்கே எக்ஸ்பெக்டிங்.... :-)
இப்படி ஆளாளுக்கு போட்டி போட்டுக்கிட்டு கோவா பயணப்பதிவு எழுதுறீங்களே! உங்களுக்கே நாயமாத் தெரியுதா?
ஆதவா said…
THOPPITHOPPI & LK நன்றி

@ முரளி

அடுத்த பாகம் சீக்கிரமே எழுதி போட்டோவோட போட்டறேன்

@ தலைவர்!

எல்லாம் உங்க வயிறு எரியறதுக்காகத்தான்!!! ஹாஹா
எந்த கடைக்கு போனாலும் கோவா தான்..ம்ம் கலக்குங்க
//ஆதவா - கால் ஒடிந்தவரை மறந்திருக்க மாட்டீர்கள்//

எப்படி எப்பொழுது?

தற்பொழுது நலமா ஆதவா?
Thamira said…
ஏதோ லைவ் கமெண்ட்ரி கேட்பது போல இருக்கிறது, உங்கள் எழுத்து. ஹிஹி..

நன்று. உங்கள் குழுவில்தான் முரளி இருந்தாரா?

நீங்கள் ஐவர் என்கிறார். அவர் ஐவர் + மூவர் என்கிறார். பெயர்க் குழப்பமாக இருக்கிறது. :-))
Thamira said…
ஏதோ லைவ் கமெண்ட்ரி கேட்பது போல இருக்கிறது, உங்கள் எழுத்து. ஹிஹி..

நன்று. உங்கள் குழுவில்தான் முரளி இருந்தாரா?

நீங்கள் ஐவர் என்கிறீர்கள். அவர் ஐவர் + மூவர் என்கிறார். பெயர்க் குழப்பமாக இருக்கிறது. :-))
ஆதவா said…
@ ஞானசேகரன்..
அது நிகழ்ந்து ஒரு வருடங்கள் ஆகிவிட்டன...
தற்போது நலமே!

@ திருநாவுக்கரசு
:)

@ ஆதிமூலகிருஷ்ணன்

முரளி எங்கள் குழுவில் இல்லை, அவரும் நானும் தங்கிய இடம் கிட்டத்தட்ட ஒன்றுதான்... இருப்பினும் சந்திக்க முடியவில்லை!
வருகைக்கு நன்றி
ஆதவன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்:)