Go Go கோவா பார்ட் 3
காலை எட்டு மணிக்கு எழுந்து Colva கடற்கரைக்குச் சென்றேன். மற்ற அனைவரும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள். சுமார் அரைமணிநேர உலாவலுக்குப் பிறகு அறைக்குச் சென்று அனைவரையும் எழுப்பி காபி சாப்பிட்டோம். கோல்மார் ரெஸ்டாரெண்ட் காப்பி அவ்வளவு சுவையில்லை ஆனால் 15 ரூபாய். பிறகு ஸ்கூபியைக் குளிக்கச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் Flying Disk விளையாடச் சென்றோம். ஒருமணி நேரம் விளையாடிவிட்டு, அறைக்கு வந்து காலை உணவு ரெஸ்டாரெண்டிலேயே சாப்பிட்டோம். நாங்கள் அனைவரும் தயாராக மணி மதியம் 12.00 ஆகிவிட்டது. இன்றைய திட்டங்கள், நேற்றைய ஆட்டங்கள் எல்லாம் பேசிவிட்டு இன்று முழுக்க நகரங்களில் சுற்றலாம் என முடிவெடுத்தோம். அதன்படி எங்களது
பயணம் Loutolim ல் உள்ள Ancestral Goa - Big Foot க்குச் சென்றோம்.
கோவாவில் பண்டைய மக்கள், போர்ச்சுக்கீசியர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஒரு கிராமத்தை வடிவமைத்து காண்பிக்கிறார்கள். ஆங்கிலத்தில் அது குறித்த விளக்கங்களும் இருக்கின்றன. ஒரு சில போர்ச்சுக்கீசிய வீடுகளும் இருந்தன. பெரும்பாலானா நடைமுறைகள் குறிப்பாக, குளத்தருகே துவைப்பது, மார்க்கெட்டில் காய்விற்பது போன்றவை இன்றும் இந்தியாவில் இருப்பதால் எனக்கு எதுவும் அதிசயமாகத் தெரியவில்லை. பானைகளில் நீர் புழங்குவதெல்லாம் காண்பிக்கப்படுவது சிலசமயம் வெறுப்பாகவும் இருக்கிறது. அதற்குக் காரணம் ரசிக்கவிடாமல் சீக்கிரமாகவே துரத்திவிடுகிறார்கள். எனினும் அது வெளிநாட்டவர்களுக்கானவை என்றறிந்து மனம் தேறினோம்!
கொகொவா பானம்
கொகொவா பழத்தால் ஆனது, இதை அருந்தத் தருகிறார்கள்
அங்கிருந்தே Big Foot க்குச் சென்றோம். திருமாலின் சன்னதியொன்றும் பிக் ஃபூட் எனச் சொல்லப்படும் பாதவடிவிலான இயற்கையாகவே அமைந்துவிட்ட பாறையொன்றும் இருக்கிறது. பூஜை வழிபாடுகள் ஏதுமில்லை ; அங்கே விரித்து வைக்கப்பட்டிருக்கும் சேலையில் நமது பாதங்களைப் பதித்துக் கொள்ளுதலின் பொருட்டு நமது எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கோவிலை விட்டு வெளியே நடந்தோம். மரங்களும் கொடிகளும் செடிகளும் நிறைய காணப்படுகின்றன. ஓரிடத்தில் 108 கள்ளிச் செடிகளும் ஒருசேர ஓரிடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து ஒரு குகைக்குள் நுழைந்தால் “உலகின் மிக கொடூரமான மிருகம்” என்று ஒரு மிருகத்தைக் காண்பிக்கிறார்கள். அது சிறையில் அடைபட்டிருந்தது. நாங்கள் சென்றபொழுது ஐந்தாக இருந்தது. அதை விளக்குவதை விட நீங்கள் பார்ப்பதே நன்று. பிறகு மீராபாய் சிற்பம் ஒன்றைப் பார்த்தோம்.. Maendra Joceline Araujo Alvares என்பவரால் செதுக்கப்பட்ட இது உலகின் நீளமான சிற்பங்களில் ஒன்று. (14 மீ x 5 மீ) மொத்தம் 30 நாளில் செதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.
வெளியேறும் வழியில் ஒரு கடையிருந்தது... இயற்கைப் பொருட்களாலான பொம்மைகள் விற்கப்படுகின்றன. Magic Lamp ஒன்று விற்கப்படுகிறது. இதனடியில் எண்ணை ஊற்றி கவிழ்த்து தீபமேற்றினால் எண்ணை வழிவதேயில்லை..
அந்த கடையில் ஒரு அழகான பெண்ணொருத்தி பொருட்களை விற்பனை செய்துகொண்டிருந்தாள். நாங்கள் கண்களைக் கழற்றிவிட்டு வெளியே வந்தோம். இவற்றைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் தலைக்கு 50.00 ரூபாய், கேமராவுக்கு 25.00 ரூபாய். அருகே மியூசியம், பழங்கால வீடுகள் ஆகியவை இருக்கின்றன. நேரம் கிடைப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.. எனக்கு ஆர்வமில்லாமல் போனது!
Ancestral Goa விலிருந்து Old Goa செல்லும் வழியில் சாந்த துர்கா கோவிலுக்குச் சென்றோம். தென்னிந்திய இந்துக் கோவில்களைப் போல அல்லாமல் போர்ச்சுக்கீசிய முறைப்படி கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலின் முன்பு வெள்ளை நிறத்தினாலான தூணொன்று காணப்படுகிறது. பின்புறம் ஓடுகளால் வேயப்பட்டு காணப்படுகிறது. தென்னிந்திய கோவில்களைப் போல பிரம்மாண்டம் ஏதும் தெரியவில்லை. ஆனால் கோவில் வெகு சுத்தமாகப் பேணப்படுகிறது. டைல்ஸ் மற்றும் மார்பில்களால் கட்டப்பட்டு வித்தியாசமாகவும் இருக்கிறது. இந்துக்கள் மட்டுமல்லாமல் மற்ற மதத்தினரும் வழிபடுவதைப் பார்க்க முடிகிறது. பூஜைகள் ஏதுமில்லை, புகைப்படம் எடுக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. சாந்ததுர்கா மற்றும் லக்*ஷ்மீ நாராயணீ யையும் தரிசித்துவிட்டு 4.00 மணிக்கு Old Goa வந்தடைந்தோம்.
சேவியர் சர்ச் என்றழைக்கப்படும் இந்த கிறிஸ்தவ ஆலயம் கிறித்தவ மதபோதகரான ஃப்ரான்ஸின் சேவியரின் அழியா உடலைக் கொண்டிருக்கிறது. இது UNESCO வின் கீழ் பராமரிப்பில் உள்ளது. சுமார் 500 வருடங்கள் பழைமையான இந்த ஆலயம் பிரம்மாண்டமான ஆன்மீகம் நிறைந்த உணர்வைத் தருகிறது. அந்த ஆலயத்தைப் பார்த்ததுமே மனது குதூகலிக்கிறது. உள்ளமைப்பும் நுணுக்கமான பணிகளும் வியக்கவைக்கின்றன. ஆலயத்தின் வலது பக்கத்தில் சேவியரின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது. நிறைய வெளிநாட்டவர்கள் இங்கே ஆலயத்தைப் பார்க்கக் குவிகிறார்கள்.
நுணுக்கமான கட்டட அமைப்பு இருந்தாலும் ஆலயம் தனியே அல்லாமல் இன்னொரு கட்டிடத்தோடு பிணைக்கப்பட்டிருப்பது அவ்வளவு நன்றாக இல்லை. சர்ச்சை விட்டு வெளியே வந்து அருகேயிருக்கும் மியூசியங்களுக்குச் செல்லாமல் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு Miramar Beach க்குச் செல்ல திட்டமிட்டோம். ஒல்ட் கோவாவிலிருந்து Tiswadi வழியாக மாண்டோவி ஆறைப் பார்த்தவாறே செல்லும் பயணம் சுகமானது. அங்கிருந்து Panajiயை அடைந்து மிராமருக்குச் சென்றோம். அப்போதே மணி ஆறு ஆகியிருந்தது. பனாஜியில் கேசினோக்கள் நிறைந்த கப்பல்கள் நிறைய நிற்கின்றன. அதனோடு 1 மணிநேரம் கப்பலில் பயணிப்பதற்காகவும் (River Cruise) காத்திருக்கும் கூட்டம் நிறைய இருந்தன. பனாஜியில் சாலைகள் சற்று அகலமாகவும் சுத்தமாகவும் ஒரு பெரிய மாநகருக்குள் நுழையும் உணர்வும் ஏற்படுகிறது. Miramar கடற்கரைக்குச் செல்லும் முன் சாப்பிட்டுவிடுவது என்று தோணியது. கடற்கரையை ஒட்டிய ரெஸ்டாரண்ட் ஒன்றில் சாண்ட்விச், பிரட் ஆம்லெட் போன்றவை கணக்கு வழக்கில்லாமல் நுழைந்தது. ஆளாளுக்கு ஒரு டிஷ் சொன்னார்கள். கொசுக்கடியாக இருந்ததால் சிரமமாக இருந்தது..
மிராமர் பீச் மெரினாவை ஞாபகப்படுத்தியது.. மாண்டோவி ஆறு கடலில் கலக்குமிடத்தில் இருப்பது ஒரு சிறப்பு. அன்று தீபாவளி என்பதே மிராமரில் வாணவேடிக்கையைப் பார்க்கும்பொழுதுதான் ஞாபகத்திற்கே வந்தது. நிறைய இந்தியக் குடும்பங்கள் வருகின்றன. கடற்கரை சற்று அகலமாக இருந்ததாலும் மழை தூறியதாலும் கடலைத் தொட்டுப் பார்க்க முடியவில்லை. சற்று தூரம் நடந்த பிறகு திரும்பவும் காருக்கே சென்றுவிட்டோம். Miramar லிருந்து நாங்கள் தங்கியிருந்த Colva வுக்கு இரவு எட்டு மணிக்கெல்லாம் வந்துவிட்டோம். அந்நேரத்திலேயே அறைக்கு வந்து என்னசெய்வது என்று யோசித்து வீதிகளில் ஒரு சுற்று சுற்றினோம். அப்போது கோகுலில் நண்பர்கள் கோவாவிற்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் அவர்களின் திட்டம் என்னென்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டோம். அதன்படி தென் கோவாவில் உள்ள Palolem Beach க்குச் செல்லுவதாக இரவே முடிவெடுத்தோம். வெகு நேரம் சுற்றியலைந்த பிறகு அறைக்கு வந்து மீண்டும் Colva Beachக்குச் சென்றோம். ஸ்கூபி பீர் குடித்துக் கொண்டிருக்க, நாங்கள் மீண்டும் ஒரு நடை நடந்து கொண்டிருந்தோம். இரவு அறைக்குத் திரும்பி ஜெ.பியின் மடிக்கணிணியில் PNR நிலவரம் தெரிந்துகொண்டோம். இன்னும் டிக்கட் கன்ஃபர்ம் ஆகவில்லை... நாங்கள் ஐந்து பேருமே காத்திருப்புப் பட்டியலில் இருந்தோம்... நாங்கள் மட்டும்!! எப்படி ஊருக்குப் போய்ச் சேருவது என்ற குழப்பம் இருந்தது!! குழப்பத்தோடு குழப்பமாக உறங்கிப் போனோம்.
தொடரும்....
Comments
நன்றி
கோவா, கங்கோத்ரினு பதிவுலகமே கலக்குது...
நல்லா இருக்கு உங்க பயணக் கட்டுரை...
neenga kulathaiya? kodurana?
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"