Go Go கோவா 2
ரொம்ப நேரமும் தூங்கமுடியவில்லை, அதிகாலை 3.45 க்கு ஸ்கூபி எங்களை எழுப்பி விட்டான். நான் பிறகு எல்லாரையும் எழுப்பினேன். அதிகாலை 6.30 க்கு மடகோவா (Madgaon) போய்ச் சேர்ந்தது... இரயில் பயணத்தின் போது கர்நாடக மற்றும் கோவாவின் இயற்கையை வெகுவாக ரசித்து ஆளாளுக்கு கமெண்ட் அடித்தோம். இயற்கையின் நிர்வாணத்தைப் பார்க்கும்பொழுது மனதில் சந்தோசம் பெருகுகிறது, விடியலின்போது லேசாகத் தூறிய மழை இதமாக இருந்தது.. மலைகளின் முனையில் பனிமேகங்கள் தொட்டுச் செல்வதையும் மரங்களின் கிளைவழியாக இறங்கி வரும் நீர் ஜன்னலில் பட்டு சிலிர்த்ததையும் ரசித்தோம். குகைப்பாதைகள் சிலவற்றில் இரயில் நுழைந்ததும் ஜன்னல்வழியே குகையிலிருந்து வெளிவருவதை எட்டிப் பார்க்க முயன்றோம். ஆனால் முடியவில்லை!!
மடகோவா இரயில் நிலையத்தில் இறங்கியதும் GRD புரபசருக்கு விடைகொடுத்துவிட்டு, வெளியே வந்தோம். புதிதாக இறங்கி வருபவர்களைக் கண்டதும் டாக்ஸி ஓட்டுனர்கள் நூறு ரூபாய்க்கு டாக்ஸி வரும், குறைந்த வாடகையுள்ள விடுதியைக் காண்பிக்கிறேன் என்று நச்சரிப்பார்கள். நாம் முன்கூட்டியே விடுதியை முன்பதிவு செய்திருந்தாலோ அல்லது விடுதியின் முகவரி தெரிந்திருந்தாலோ நமக்குக் கவலையே இல்லை. எதுவும் செய்யாதவர்கள் தெரியாதவர்கள் தனியார் டாக்ஸியை அணுகவேண்டாம். அரசு “Prepaid Taxi” விடுகிறது. நாம் இடத்தின் பெயரைச் சொன்னால் அதற்கேற்ப கட்டணம் உண்டு. நாங்கள் முன்பே விசாரித்த விடுதிக்குச் சென்று பார்த்தோம். அங்கே வசதி சரியில்லை என்பதால் அந்த டாக்ஸி ஓட்டுனரிடம் Beach Resort ஏதாவது குறைந்த வாடகையில் கிடைக்குமாவென விசாரித்தோம். அந்த டாக்ஸி ஓட்டுனருக்கு ஆங்கிலம் தெரியாது. எங்களுக்கு ஹிந்தி தெரியாது என்றாலும் ஜெ.பி ஓரளவு ஹிந்தி பேசுவான் (பட்லர் ஹிந்தி என்று கிண்டல் செய்தோம்) கோவாவில் மொழி பரி மாற்றத்திற்கு ஹிந்தி அவசியம் தேவை... என்றாலும் மிக்க அவசியமில்லை, ஆங்கிலம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அந்த ஓட்டுனர் Colmar எனும் ரெசார்டுக்கு அழைத்துச் சென்றான் (அதற்குத் தனியே 250 ருபாய் வசூலித்துக் கொண்டான்) Colva Beach க்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கும் Colmar ல் இரண்டு பேர் தங்கக்கூடிய (ஒன்றிணைந்த) காட்டேஜ் நன்றாக இருந்தது. காலை ஒன்பது மணிக்கே ஹோட்டலுக்கு வந்து சேர்ந்துவிட்டோம். 12.00 Noon Check out என்றாலும் நாங்கள் தங்கவேண்டிய இரண்டு நாட்களுக்கு மட்டுமே பணம் செலுத்தினோம். இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம், ஒன்றிற்கு வாடகை ரூபாய் 1200.00
அறைக்கு எதிரே நீச்சல் குளம் இருந்தது. சுற்றிலும் தோட்டம், ரெஸார்ட்டை விட்டு வெளியே வந்தால் கடற்கரை... கோவாவில் கடற்கரையோரமாக அறை எடுத்துக் கொள்ளுவது சிறந்தது.. குறிப்பாக கடலில் விளையாட நினைப்பவர்களுக்கு.. நான் அறைக்குச் சென்றதும் குளிக்க ஆரம்பித்துவிட்டேன். மற்ற அனைவரும் கடற்கரைக்குச் சென்று Flying Disk விளையாடினார்கள். சுமார் 10.30 க்கு எல்லோரும் தயாராகி, நாங்கள் கொண்டு வந்திருந்த மீத சாப்பாட்டை சாப்பிட்டோம். புளிசாதம் என்பதால் கெடாது. கோவா வரும் வரையிலான சாப்பாட்டுச் செலவை வெகுவாக குறைத்துவிட்டிருந்தோம். சிறிது நேரம் கோல்வா கடற்கரையில் உலாவினேன். நன்கு வெண்மையான சூடான மணல், நீளமான கடற்கரை, தென்னைமரமும் ரெஸார்டுகளும் லைஃப் கார்டுகளும் நிறைந்திருந்தன. ஓரளவு சுத்தமாகவே இருந்தது.
அடுத்தடுத்து எங்கே செல்வது என்று திட்டம் தயார் செய்தோம். கோவா சுற்றுப்பிரயாணத் திட்டத்தை நானே முன்னின்று வகுத்தேன். அன்றன்று எங்கே செல்வது என்பது முடிவானது. இரண்டு நாள் டூருக்கான ஏற்பாடுகளை நாளொன்றுக்கு சுமார் 150.00 ரூபாய் செலவில் கோவா சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்து தரும் என்று கேட்டறிந்தோம், என்றாலும் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து செல்வது என்று முடிவானது. அதன்படி Santro காரை நாளொன்றுக்கு 1200 ரூபாய் வாடகைக்கு ஏற்பாடு செய்தோம். மோட்டார் வண்டியென்றால் நாளொன்றுக்கு 250லிருந்து கிடைக்கும். முதலில் நேராக மடகோவா சென்று பெட்ரோல் அடித்துவிட்டு Ashvem Beach க்குச் செல்வதாக முடிவானோம். கோவா சாலைகள் குறுகலாக இருப்பினும் அற்புதமாக இருக்கிறது. அங்கங்கே செல்லவேண்டிய இடத்திற்கான குறியீடு பலகைகள் நமக்கு பெரும்பாலும் உதவுகின்றன. Google Maps இருந்தால் இன்னும் வசதி, நாங்கள் பெரும்பாலும் Google Maps வழியாகவே அந்தந்த இடங்களைச் சென்றடைந்தோம். Ashvem Beach தூரம் அதிகம் என்பதால் முதலில் நன்கு கேள்விப்பட்ட பாகாவுக்கு (Baga Beach) சென்றோம். NH 17 கோவாவில் செல்கிறது. இதன் வழியேதான் வடக்கு கோவா பீச்சுகளுக்குச் செல்லமுடியும். Baga செல்வதற்கு கிட்டத்தட்ட 60 கி.மீட்டர் Colva விலிருந்து பயணிக்கவேண்டி வரும்; Calangute லிருந்து Baga வரை வெளிநாட்டினரின் நடமாட்டம் அதிகம் இருக்கிறது.
பாகாவில் எதிர்பார்த்த கூட்டமில்லை, கடற்கரையை ஒட்டியுள்ள Brittos ரெஸ்டாரெண்டுக்கு அடுத்து நிறைய மசாஜ் செண்டர்கள், டாட்டு போட்டுவிடுபவர்கள், நீர் விளையாட்டுக்கு ஆள்பிடிப்பவர்கள், ஆகியவற்றைப் பார்க்கலாம். பீச் பெட்டுகளில் பெரும்பாலும் வெளிநாட்டவர் பிகினி ஆடைகளில் படுத்துக் கொண்டு ஏதாவது ஒரு கதை புத்தகத்தைப் படித்துக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பார்கள். பாகா வெள்ளை மணல் பீச். கடலில் அதிக ஆழமோ அலையோ இருப்பதில்லை, அரபிக்கடல் மிகவும் உப்புக் கரித்தது.பீச் முழுக்க விளையாட்டுக்களால் நிரம்பியிருக்கிறது. அதற்கென ஆள்பிடிப்பவர்கள் ஒவ்வொரு விளையாட்டையும் ஐநூறிலிருந்து ஆயிரத்தைநூறு வரையும் சொல்லுகிறார்கள். நாம் பேரம் பேசாவிடில் அவ்வளவுதான்... நாங்கள் மாருதி 800 என்பவரிடம் பேரம் பேசினோம்... நான்கு விளையாட்டுகளுக்கு தலைக்கு 750 ரூபாய் பேசினோம்.
பேசி முடிவானதும் முதலில் Pumbing Ride க்குத் தயாரானோம். ரைடுக்குச் செல்லும் எல்லாருக்குமே Life Jacket போட்டுவிடுகிறார்கள். இரண்டிரண்டு பேராக வாட்டர் பலூனில் அமர்ந்து போட்டில் வேகமாக இழுத்துச் சென்றார்கள். அலைகளில் ஏறி இறங்கி முகத்தில் நீர் அடிக்க செல்வதே குஷியான அனுபவம்தான். அடுத்து Banana Ride சென்றோம். வாழைப்பழம் போன்ற நீளமான வாட்டர் பலூனில் அமரவைத்து வெகுதூரம் கடலுக்குக் கூட்டி சென்று அதிலிருந்து தள்ளி விடுகிறார்கள். நன்கு மூழ்கி எழுந்த பிறகு மீண்டும் அங்கிருந்து வாழைப்பழ வாட்டர்பலூனில் ஏறி கரைக்குக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். கடலின் நடுவில் நீச்சல் தெரியாமல் மிதப்பதே எனக்கு மிகவும் புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. மூன்றாவது Water Scooter Ride. கடலின் பாதிவரைக்கும் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று கொஞ்ச தூரம் நம்மை ஓட்டவைப்பார்கள். கடலில் ஸ்கூட்டர் ஓட்டுவதும் புதுமையான அனுபவம்தான்.. நான்காவதாக Para Sailing. படகில் முதலில் அழைத்துச் சென்று பாராசூட் கப்பல்களில் நம்மை சேர்ப்பார்கள். அந்த கப்பல் இன்னும் கொஞ்சம் தூரம் சென்று ஒவ்வொருவரையும் தனித்தனியாகவோ அல்லது இரண்டிரண்டு பேராகவோ பாராசூட்டில் பறக்கவிடுவார்கள். ஐந்து முதல் பத்து நிமிடம் வரை பாராசூட்டில் பறந்து மொத்த பாகா பீச்சையும் பார்க்கலாம்... கீழே எட்டிப் பார்த்தால் பாதங்கள் குறுகுறுக்கும். இன்னொரு பக்கம் எல்லையில்லாமல் கடல்.. மொத்தத்தில் பறந்த பொழுது எல்லாவற்றையும் மறந்திருந்தேன். பாராசெய்ல் கப்பலில் எங்களுக்கெதிரே போலந்து நாட்டு தம்பதிகள் இருந்தனர். நாங்கள் பேசி கிண்டலடிப்பதையும் போட்டோ எடுத்து ஆராவரிப்பதையும் வெகுவாக ரசித்தார்கள். பாராசூட்டில் பறக்கும் பொழுதே லேசாக தூறல்விட்ட மழை, கப்பல் படகை அடையும் பொழுது நன்கு பெய்தது. நாங்கள் கப்பலிலிருந்து படகுக்குச் செல்லும்பொழுது படகிலிருந்து மூன்று வடிவான பெண்கள் கப்பலுக்குச் சென்றனர்... கொடுமை... பாகாவில் பெரும்பாலும் வெளிநாட்டினர் அதிகம் இருக்கிறார்கள். குழந்தைகள் ஓரளவு வருகிறார்கள். பலர் விளையாடுவதில் ஆர்வத்தைக் காட்டுவதைவிட, பீச் பெட்டில் படுத்திருப்பதையே விரும்புகிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் அனைவருமே பிகினி, பாண்டி, லிங்கரி போன்ற Beachwear களோடுதான் சுற்றுகிறார்கள். ஒரு சில உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளும் கூட. இந்தியாவைப் பற்றியும் இந்திய மக்களைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்துவைத்துக் கொண்டேதான் வருகிறார்கள். விளையாட்டுகளுக்கோ, அல்லது பொருள் வாங்குவதற்கோ யாரும் சொன்னவிலைக்கு படியமாட்டார்கள், நன்கு பேரம் பேசுகிறார்கள். அதைவிட விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மழை விட்டபாடில்லை, நேரே காருக்குச் சென்றோம். பாகா அருகே Shower ல் குளிக்க இடமில்லை, அதனால் தலைதுவட்டிவிட்டு அப்படியே அருகேயிருந்த Anjuna Beachக்குச் செல்ல முடிவெடுத்தோம். அப்போதே மணி 4.30 ஆகியிருந்தது. அஞ்சுனாவுக்கு அருகே உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டோம். Tuna Fish என்றொரு உணவு வகையை சுவைத்துப் பார்த்தோம். மிக நன்றாக இருந்தது. அது மட்டுமே 300 ரூபாய். அனைவரும் சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டோம். அருமையான சுவை, நம்மூரில் கிடைக்கும் அதே விலைதான். (ரூ 120.00)
மாலை ஐந்து மணிக்கு அஞ்சுனா பீச்சை அடைந்தோம். அது ராக்கி பீச் என்றும் கூறப்படுகிறது. அதற்கேற்ப பாறைகள் மட்டுமே கரைகளாக இருக்கிறது. பாகா பீச்சில் விளையாடியதில் ஓரளவு களைப்பு இருந்தாலும் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கப் போகிறோம் என்று தெரிந்து ஓரளவு உற்சாகமானோம். பாறை கடற்கரையான Anjunaa வில் விளையாடுவதற்கான
எந்தவொரு விஷயமும் கிடையாது! வாய் அரைக்கும் பண்டங்களின் விலையும் அதிகம். ஒரு சுட்ட சோளம் 20.00 ரூபாய். அதுவும் பேரம் பேசியிருந்தால் 10.00 ரூபாய்க்கே கிடைத்திருக்குமென்பது எங்களுக்கு அடுத்தவர்கள் வாங்கும்போதுதான் தெரிந்தது. சுமார் 6.30 மணிக்கு அஸ்தமனம் முடிந்தபிறகு அங்கிருந்து கிளம்பினோம்.
நேராக Calangute - Baga சாலையில் வந்து நின்றோம். பாகா பீச்சுக்கு மீண்டும் இரவு வந்து சிறிது தூரம் நடந்தோம். ரம்மியமான விளக்கொளியில் கடற்கரை முழுக்க அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் வெகு அதிகம். இரவில் ஏதாவது ஒரு Pub க்குச் செல்லவேண்டும் என்பது திட்டம். எங்களுக்கு கார் வாடகைக்குக் கொடுத்த எட்வின் என்பவரைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறிய Fire Lounge எனும் Pub க்குப் பேசினோம், அங்கிருந்து ஒரு நபர் எங்களை அழைத்துச் சென்றார்கள். நாங்கள் சுமார் 8.00 மணிக்கே வந்துவிட்டதால் Pub, 10.00 மணிக்கு மேல்தான் கூட்டம் அதிகமாக வரும் என்றார். மேலும் அவர் பேசியதில் எங்களுக்கு நம்பிக்கையுமில்லை. ஆகவே நானும் ஸ்கூபியும் ஜெ.பியும் கொஞ்சநேரம் வீதிகளில் நடப்பது என்று முடிவு செய்து நடந்து கொண்டிருந்தோம். இரவு நேரங்களில் இப்படி நடப்பவர்களைக் கண்டதுமே அவர்கள் பப்” தேடித்தான் அலைகிறார்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள் சிலர். அவர்களாகவே வந்து Pubக்குப் போகவேண்டுமா என்று கேட்டுவிடுகிறார்கள். நாங்கள் அணுகுவதற்கு முன் ஒருசிலர் எங்களை அணுகினார்கள். முடிவாக ஒரு Pubக்குப் போவது என்று எல்லோரும் காரில் கிளம்பினோம். அப்போதே மணி 10 ஆகிவிட்டது. கோகுல் ”தலைவலிக்கிறது, நீங்கள் போய்வாருங்கள்” என்று சொன்னான். நாங்கள் வற்புறுத்தினாலும் அவன் வரமாட்டான் என்பதால் அவனைத் தவிர மற்ற அனைவரும் உள்ளே நுழைந்தோம். மூன்றுவிதமான கட்டணங்கள் இருந்தன.
Rs. 500 க்கு 4 Drinks Token
Rs. 400 க்கு 2 Drinks Token
Rs 300 க்கு Without Drink
இதில் நானும் குட்டியும் 400 ரூபாயிலும் ஸ்கூபியும் ஜெ.பியும் 500 ரூபாயிலும் நுழைந்தோம். எங்கள் நால்வரில் ஸ்கூபிக்கு மட்டுமே பீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. மற்ற அனைவரும் குளிர்பானங்கள்தான். என்றாலும் அங்கே என்ன நடக்கிறது என்ற ஆவல் இருந்தது. கையில் முத்திரை குத்தி அனுப்பி வைத்தனர். உள்ளே நிறைய பேர் ஹிந்தி அல்லது ஆங்கிலப்பாடல்களுக்குத் தனக்குத் தெரிந்த முறையில் ஆடிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் சரக்கடிப்பவர்களாகவே இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. நாங்கள் சென்றிந்த பொழுது ஒன்றிரண்டு பெண்களும் ஆடுவதற்கு வந்திருந்தார்கள். கூட்டம் வருகை அதிகமாக அதிகமாக நிறைய பெண்களைப் பார்க்க முடிந்தது, எல்லோரும் அவரவருக்குத் தெரிந்த முறையில் ஆடினோம். எனக்கு நடனமாடி பழக்கமில்லையென்பதால் கூச்சம் அதிகமாக இருந்தது. ஒரு ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டு மற்றவர்கள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சில பெண்கள் நன்கு குடித்துவிட்டு ஆடுவதும் பின் மட்டையாவதும் நான் பார்த்திராத ஒன்று. சுமார் இரண்டு மணி நேரத்தில் வெளியே வந்துவிட்டோம். ஸ்கூபி மட்டும் குளிர்பானம், பீர், மற்றும் காக்டெயில் உட்பட 6 டோக்கன்களை பயன்படுத்தினான். நாங்கள் கோக் மற்றும் ஸ்ப்ரைட் ஆகியவற்றைக் குடித்தோம். சரக்கு சப்ளை செய்வது பெண்களாக இருந்தார்கள். வெளியே நன்கு மழை பெய்து கொண்டிருந்தது. கோகுலை எழுப்பிவிட்டு, அறைக்குச் செல்ல காரில் ஏறினோம். வரும் வழியில் ஒரு போலீஸிடம் வழிகேட்டு அவன் தவறான பாதையைச் சுட்டிக் காட்ட, நாங்கள் Vasco நோக்கி சென்று கொண்டிருந்தோம். எனக்கு தவறுதலான பாதையாகத் தெரியவே, திரும்பவும் சுற்றி வந்து Colva சென்றோம். அப்பொழுது அதிகாலை 3.00 மணி ஆகியிருந்தது. Colva அருகேயிருந்த ஒரு ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் செல்லுவோம் என்று குட்டி சொல்ல, சாப்பிடச் சென்றோம். அந்த நேரத்திலேயும் கூட்டம் இருந்தது. பெரும்பாலும் வெளிநாட்டவரே. அந்த ரெஸ்டாரெண்டில் சரக்குகளை அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். கோவாவில் டீ கிடைக்காத இடம் கூட பலவுண்டு, ஆனால் சரக்கு கிடைக்காத இடமேயில்லை, ஒரு பெட்டிக் கடையில் கூட சரக்கு விற்கிறார்கள். பெண்கள் கூச்சப்படாமல் சரக்கு விற்கிறார்கள். Teacher's, Royal Stag, Fosters, Black Label, King Fisher, என எல்லாவகையான பிராண்டுகளும் கிடைக்கிறது. ரெஸ்டாரெண்ட் விளக்குகளை கூடையால் மூடியவாறு அலங்கரித்து வசீகரிக்கச் செய்கிறார்கள். கோகுல் சாப்பிட மறுத்துவிட்டதாலும் வேறெந்த உணவுமில்லையென்பதாலும் பிரியாணியே பரிமாறச் சொன்னோம். நீண்ட நேரமானதால் ஜெ.பி காருக்குச் சென்று படுத்துக் கொண்டான். நாங்கள் மூவரும் சாப்பிட்டு முடித்தபிறகு எங்களுக்குப் பின்னேயிருந்த ஒரு வெளிநாட்டுக் குழுவொன்று கிதார் இசைத்து பாடலொன்றை அழகாகப் பாடினார்கள். கேட்பதற்கு இனிமையாக இருந்தது. சுமார் 4.00 மணிக்கு அறைக்கு வந்து படுத்தோம். நல்ல தூக்கம்....
தொடரும்.....
Comments
தொடருங்கள் !
தெருவில் கிடாரும் புல்லாங்குழலும் வாசிப்பவர்கள் அதிகம் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டு நிறைய தேடினேன், யூ ஆர் லக்கி.