ஓவிக்கா... இந்த கதையைப் படிக்கவேண்டாம் ப்லீஸ்.

”என்னடா, ராக்கி வந்துவிட்டதா?”

“இல்லைக்கா”

“உனக்கு அனுப்பி விட்டேனேடா, முகவரி சரிதானே?”

“சரிதான், ஆனா; எனக்கு வரவில்லையே”

“எல்லாருக்கும் வந்துவிட்டதாமே, உனக்கு மட்டும் ஏனடா வராமல் போயிற்று?”

சதியாக இருக்குமோ?

ஆமாம்... ஓவிக்கா எனக்கு அனுப்பியதாகச் சொன்ன ராக்கி, எனக்கு வந்து சேரவில்லை. அது எந்த காரணத்தினால் தடைபட்டிருந்தது என்று தெரியவில்லை. இம்மாதிரியான
சூழ்நிலையில் ஓவிக்கா எனக்கு எந்த கொரியரில் அனுப்பினார் என்றும் தெரியாததால் விசாரிப்பதற்கு தேவையில்லாமல் போனது. எனக்கு ராக்கி கிடைக்காததால்
அனுப்பியவர் எந்த மனசூழ்நிலையை ஏற்றிருப்பார் என்று புரிந்து கொள்ளமுடியவில்லை. ஏனெனில் இந்தமாதிரி அடுத்தவர் மனநிலையில் இறங்கி ஆராய்ச்சி செய்ய நான்
வளர்ந்திருக்கவில்லை. இந்நேரம் அந்த ராக்கி எங்கேயிருந்திருக்கும்? எனக்காக அதில் ஓவிக்கா என்ன எழுதியிருப்பார்கள்? யாராவது அதை எடுத்து ரக்*ஷாபந்தனுக்குக்
கட்டியிருப்பார்களோ என்று அன்று இரவு முழுக்க கனவுகளைச் சிதைத்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

என் வீடு முகவரியற்ற பூமியில் கிடக்கிறது. எல்லா வீடுகளும் முகவரியற்றுதான் இருந்திருக்கவேண்டும். நமக்குள் நாமே அடையாளப்படுத்தி தனித்துவிடப்படுபவைதானே இந்த
முகவரிகள் எல்லாமே.. சிலருக்கு அண்டைவீட்டு முகவரியே தெரிந்திருப்பதில்லை. தபால் காரனுக்குக் கூட எக்காளமிருக்கிறது. சேரியின் உட்பகுதிகளுக்கு பங்களா தபால்
எதற்குத் தேவையென்று நினைத்திருக்கலாம். ராக்கி எனக்குக் கிடைக்காததன் முழு காரணமும் தபால்காரனை அன்றி வேறு யாரும் ஏற்றுக் கொள்ளமுடியும் என்றூ எனக்குத்
தோன்றவில்லை.

ஓவிக்கா...

ஓவிக்காவை இதற்கு முன்னர் உங்களிடம் சொல்லியிருக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் விளக்கிச் சொல்லவும் முடிவதில்லை. என் நண்பன்
ஒருவன் ஓவிக்காவை சந்திக்கும் பொழுது ஒரு பின்னவீனத்துவக் கவிதை என்று விமர்சனம் கொடுத்திருந்தான். அது எளிதில் விளக்கிச் சொல்லமுடியாதது. ஆனால் நன்கு
உணரக்கூடியது. ஓவிக்காவை நீங்கள் சந்திக்கும்பொழுது குழந்தைத்தனமான சிந்தனை அடங்கிய பெரியவள் என்று சட்டென்று முடிவுகொள்வீர்கள். அது உண்மையாக
இருக்கலாம். ஆனால் அதுமட்டுமே உண்மையல்ல. யூகம். ஆக்ரோஷமும், மென்மையும் கலந்த குழந்தை என்று எனக்குப் பின்னேயிருந்து ஒரு பெண் கூறினார். அவரை
அதன்பின் பார்க்கும்படியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

சரி... ஓவிக்காவை விளக்க முற்பட்டது போதும்.. கதைக்கு வருவோம். ராக்கி கிடைக்காததால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “கிடைக்காதது வருத்தத்தை
அளிப்பதாக இருக்கிறது அக்கா” என்றேன். வருத்தம் என்பது எப்படி உணரப்படுகிறது? வெறும் வார்த்தைகள் அழுவதாலா? தெரியவில்லை.

”வேறு முகவரி இருந்தால் கொடுடா” என்றார் ஓவிக்கா

வேறு ஒரு முகவரி கொடுத்திருந்தேன். முகவரியற்றவனாக இருக்கிறாய் என்றார் ஓவிக்கா. இருக்கலாம். சிலர் முகமே இல்லாமல் இருக்கும்பொழுது நான் எவ்வளவோ
பரவாயில்லை என்றேன். உனக்கு மறுபடியும் போன் செய்கிறேன் என்றபடி அழைப்பை துண்டித்தார் ஓவிக்கா. நீங்கள் நினைக்கலாம் இப்பொழுது மனம் நிறைவாக
இருந்திருக்குமே என்று. இல்லை. மறுபடியும் எனக்கு தபால் கிடைக்காமல் போவது அபசகுனமாக எண்ணினேன். உண்மையில் சகுன நம்பிக்கை எனக்குக் கிடையாது.
ஓவிக்காவுக்கு இருக்கலாம். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் இருவருக்குமான போக்குவரத்து யாரோ ஒருவரின் நப்பாசையாலோ, சலிப்பின் காரணமாகவோ
துண்டித்து விடக்கூடாது அல்லவா.

ரக்*ஷா பந்தனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சிவாண்ணா தமக்கு ராக்கி வந்ததைச் சொல்லியிருந்தார். அது எனக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அதை நிச்சயம்
ஓவிக்காவைத் தவிர வேறு யாரும் அனுப்பியிருக்க முடியாது. ஆனால் சிவாண்ணா செய்த தவறு, அவருக்குக் கிடைத்த ராக்கியை வேறு ஒருவர் அனுப்பியதாகக் கூறிவிட,
ஓவிக்காவுக்கு கோபம் வந்துவிட்டது. என்னைத் தவிர உங்களுக்கு வேறு தங்கைகளா என்று... இந்த தகவல் எனக்கு ஒருவர் மூலம் கூறப்பட்டது. ஓவிக்காவின் கோபம் என்று
அவர் சொன்னார். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. உண்மையில் அது அதீத உரிமை. தன் நிலையினை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு சுய எச்சரிக்கை கூட
எழுந்திருக்கலாம். ஆனால் எனக்கு இந்த சம்பவம் பயத்தை உண்டாக்கிவிட்டது.

”இதுக்கெல்லாம் பயப்படாதே” என்று ஆறுதல் சொன்னார் சிவாண்ணா. ஆனால் உண்மை நிலைமை நீங்கள் புரிந்துகொள்ளும்படி நான் சொல்லவில்லை என்றேன். உண்மை
நிலைமை என்பதே நாம் உருவாக்கும் உருவம், அது பார்வைகளுக்கு ஏற்ப தோற்றமளிப்பது என்றார். எனக்கு அவர் சொன்னது புரியவில்லை. பிறகு, ஓவிக்காவின் ராக்கி
உண்மையில் யாரைச் சென்றடையும் என்றேன். உங்கள் இருவருக்குமிடையிலான சகோதரத்துவத்தை அடையும். அது வாழ்வின் தூயபிம்பம் என்றார். இது எனக்கு
சமாதானமளிக்கும் பதிலாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஓவிக்காவின் ராக்கி எனக்கு இனந்தெரியாத குழப்பத்தை அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது.

ஆமாம்... ஓவிக்கா அனுப்பிய ராக்கியை எனக்குக் கட்டி விடுவது இன்னொரு பெண். எனில் என் முழுமையான அதிகாரமும் பாசமும் உரிமையும் யாரைச் சென்றடையும் என்ற
குழப்பம். எனக்குத் தெரிந்து ஓவிக்காதான் எனக்கு ராக்கியை அறிமுகம் செய்தது என்றே சொல்லலாம். சின்ன வயதிலிருந்தே ஓவிக்கா என் கைகளில் இதுவரை ராக்கியைக்
கட்டியதேயில்லை. அதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் அமைத்துக் கொள்ளவில்லை. ராக்கி இன்னொரு பெண்ணின் மூலமாகத்தான் கட்டிக் கொள்ளப்பட்டது. இது ஒரு
முக்கோண சந்திப்பை எனக்குத் தருவதாக இருந்தது. ஒவ்வொரு மூலையிலும் நான், ஓவிக்கா, மற்றும் இன்னொரு பெண் அமர்ந்து அவரவருக்குண்டான உரிமை குறித்து
பேசவேண்டியதாக இருந்தது. ஆனால் இது குறித்து இருவரும் எந்த பேச்சும் எடுக்கவில்லை.. நான் மட்டுமே புலம்பிக் கொண்டிருந்தேன்.

ஒருவழியாக ராக்கி எனக்கு இன்னொரு முகவரிக்கு வந்து சேர்ந்தது. அதை தபால்காரனிடமிருந்து வாங்கியது ஒரு வங்காளிப் பெண். அவள் வங்காளியாக இருக்கும் என்பது
என் உத்தேசம் என்றாலும் ரக்*ஷாபந்தனைக் கொண்டாடும் வட இந்தியப் பெண். இப்பொழுது புரிந்திருக்குமே எனக்கு ஏற்பட்ட பிரச்சனை என்னவென்று? ராக்கியைப் பற்றி
அவளுக்கு விளக்கிச் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் யார் கட்டுவது என்பதை நான் எப்படி விளக்கமுடியும்? ஓவிக்கா அல்லாமல் இந்த பிரச்சனை தீராது என்பது
தெரிந்தது.

ஆனால் வேறு வழியுமில்லை. அந்த வங்காளிப் பெண்ணே எனக்கு ராக்கி கட்டிவிட்டது குறித்து முதல்முறையாக வருத்தம் ஏற்பட்டது. ராக்கி கொண்டாடப்படுவதற்கென்று
தினமொன்று வருமேயானால் ஏன், ஓவிக்கா வரும் வரை தினத்தை ஒத்திப் போடக்கூடாது? தினங்களின் வருகைக்கு நாம் எதிர்பார்ப்பது போல, நம் வருகைக்கு ஏன்
தினமொன்று எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கக் கூடாது?

ராக்கி அன்று காலையில் எனக்கு போன் வந்தது.

“ஆமாம் கா.. கட்டி கொண்டேன். இரண்டு ராக்கிகள் சிறியதும் பெரியதுமாய்” என்றேன்.

“அப்பாடா.. நிம்மதி. நான் கிடைக்கவில்லையோ என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன் ரைட். ஐ விஷ் யு மை பிரதர்” என்று சிரித்தபடி அழைப்பைத் துண்டித்தார் ஓவிக்கா.

இப்பொழுது எனக்குள்ளான குழப்பத்தை ஓவிக்காவிடம் சொல்லவில்லை. சொல்லாமல் விட்டது கூட ஒரு குற்றமாக இருக்கலாம். ஆனால் பகிர்ந்து கொள்ளவேண்டும். அதற்கு
எனக்கு ஒருவர் மட்டுமே உள்ளார்.

ஓவி உனக்கு அனுப்பியது என்ன என்றார் முதலில்.

அது ராக்கி என்றேன்.

நீ செய்த முதல் தவறு. அதை ராக்கியாக எண்ணியது. ஓவியின் துடுக்கு, அதற்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனம், மிகைந்த அறிவு, நீர்க்கோல அழகு ஆகிய அனைத்தும்
ஒருங்கிணைந்த ஒரு பாசத்தின் பிம்பம் ஒளிந்த கயிறு. அதை நீ கட்டும் பொழுது உனக்குள் அந்த கயிறின் வழியே ஓவி மட்டும்தானே தெரியக்கூடும் என்றார்.

அது எப்படி சாத்தியம்? எங்கோ இருக்கும் ஓவி, ஒரு சாதாரண கயிறில் அடங்குமா

அப்படியல்ல. அது சாதாரண கயிறு என்றால் உன் வீட்டருகே இருக்கும் மளிகைக் கடையில் வாங்கிக் கட்டிக் கொள்வதுதானே? நீ ஏன் ஓவியின் கயிறை எதிர்பார்க்கிறாய்?

என்னால் அந்த கயிறுக்குள் பாசம் பிணைந்திருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளமுடியவில்லை.

இது கடவுளைப் போன்ற இருக்கிறாரா இல்லையா எனும் சர்ச்சை. கடவுள் தூணிலும் இருப்பார், சிறு கல்லிலும் இருப்பார் என்பதற்காக தூணை நீ வணங்கினால் அது கடவுள்
ஆகிவிடாது. அல்லது உடைத்தால் கடவுள் உடைந்து போகாது. ஒரு சிறிய கல் கூட கடவுளின் உருவாக்கம். அதில் நிறைந்திருக்கிறார். ஒருவேளை அந்த கல் உனக்கு
எவ்வழியிலேனும் உதவக் கூடும். நமக்குத் தெரியாத அருவங்களால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ராக்கியில் எப்படி ஓவியைக் காணமுடியும் என்பது உன் அறிவுக்கு
எட்டாததாக இருக்கிறது. அறிவின் வளர்ச்சியில் மனிதனின் மனங்களின் கால்கள் பதிந்திருக்கவேண்டும் மேலும், அந்த வங்காளிப்பெண் ஒரு ப்ராக்ஸி. உனக்குக்
கட்டுவதன்மூலம் ஓவியின் சகோதரத்துவத்தை உனக்கு மாற்றிக் கொடுக்கிறாள். உனக்கு மாற்றிக் கொடுப்பதன் மூலம் அவளும் சகோதரத்துவத்தை வழங்குகிறாள். என்றார்.

அது ஓரளவு சமாதானம் அளிக்கக் கூடியதாக இருந்தது. சுயசமாதானங்கள் தங்களுக்குள் எப்போதும் சண்டையிட்டபடி இருக்கும் அதனால்தான் நான் என்னை நம்புவதாக
இல்லை. இந்த பெங்களூர்காரர் ஏதாவது ஒருவகையில் சமாதானத்தை வழங்கிவிடுவார். என்றாலும் முழுவதுமாக குழப்பம் நீங்கிவிட்டது என்று சொல்லிவிடமுடியாது.

இது குறித்து உனக்கு விளக்குவது சலிப்பைத் தரக்கூடியதாக இருக்கும் என்று நிறுத்திக் கொண்டார்.

உங்களுக்கு ராக்கி வந்துவிட்டதா என்று கேட்டேன்.

எப்போதோ..... .சரி சரி... இதை ஓவியிடம் சொல்லிக் கொண்டு இருக்காதே.. உன்னை தவறாக எண்ணக் கூடும் என்றார்.

எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஓவிக்கா எப்பொழுதும் பதுக்கி வைத்தலை விரும்பமாட்டார். நீங்கள் கூறியது எனக்கு உணரும்படி இருந்தது. என்றாலும்
மனம் தவிக்கிறதே.. ஏதாவது ஒன்றை நான் செய்தாகவேண்டும் என்றேன்.

பேசாமல் கதையாக எழுதிவிடு என்றார்.

இதோ எழுதிவிட்டேன் என்றேன்...

Comments

sakthi said…
கடவுள் தூணிலும் இருப்பார், சிறு கல்லிலும் இருப்பார் என்பதற்காக தூணை நீ வணங்கினால் அது கடவுள்
ஆகிவிடாது. அல்லது உடைத்தால் கடவுள் உடைந்து போகாது. ஒரு சிறிய கல் கூட கடவுளின் உருவாக்கம். அதில் நிறைந்திருக்கிறார். ஒருவேளை அந்த கல் உனக்கு
எவ்வழியிலேனும் உதவக் கூடும். நமக்குத் தெரியாத அருவங்களால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆதவா இவ்வரிகளை ரசித்தேன்
sakthi said…
ஒரு பின்னவீனத்துவக் கவிதை என்று விமர்சனம் கொடுத்திருந்தான். அது எளிதில் விளக்கிச் சொல்லமுடியாதது. ஆனால் நன்கு
உணரக்கூடியது.

ஓ இது தான் பின் நவீனத்திற்கான விளக்கமோ!!!
sakthi said…
வேறு ஒரு முகவரி கொடுத்திருந்தேன். முகவரியற்றவனாக இருக்கிறாய் என்றார் ஓவிக்கா. இருக்கலாம். சிலர் முகமே இல்லாமல் இருக்கும்பொழுது நான் எவ்வளவோ
பரவாயில்லை என்றேன்.

அருமை
ஹேமா said…
ஆதவா...ஒவ்வொரு வரி வரியாகப் படித்தேன்.உண்மையில் பின்நவீனத்துவம்தான் உங்கள் கதை.சின்ன நூலில் ஓவிக்காவின் பாசம் இருக்கிறது என்கிறீர்களா...இல்லை என்கிறீர்களா !
//ஆனால் வேறு வழியுமில்லை. அந்த வங்காளிப் பெண்ணே எனக்கு ராக்கி கட்டிவிட்டது குறித்து முதல்முறையாக வருத்தம் ஏற்பட்டது.//

இந்த வருத்தம் ஒவிக்கா ராக்கி கட்டவில்லை என்பதற்க இல்லை அந்த வங்காளி பெண் கட்டியதற்க..

கதை அருமை
//என் வீடு முகவரியற்ற பூமியில் கிடக்கிறது. எல்லா வீடுகளும் முகவரியற்றுதான் இருந்திருக்கவேண்டும்//

//சிலர் முகமே இல்லாமல் இருக்கும்பொழுது நான் எவ்வளவோ
பரவாயில்லை என்றேன்//

//தினங்களின் வருகைக்கு நாம் எதிர்பார்ப்பது போல, நம் வருகைக்கு ஏன் தினமொன்று எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கக் கூடாது?//

ரசித்த வரிகள் ஆதவா.. இருந்தும் மொத்தமாக வாசிக்கும்போது ஏதோ ஒன்று விடுபட்டு தனியாக இருப்பதைப் போன்ற உணர்வு...
நான் இரசித்த சிலவற்றை மேலே நண்பர் குறிப்பிட்டுள்ளார்

மேலும்

அறிவின் வளர்ச்சியில் மனிதனின் மனங்களின் கால்கள் பதிந்திருக்கவேண்டும் - இவையும்
Anonymous said…
கவிதையாய் ஒரு கதை
ஆதவா said…
சகோதரிகள் சக்திக்கும் ஹேமாவுக்கும் மிக்க நன்றி.

@ சக்தி,
பின்னவீனத்துவத்துக்கு நான் விளக்கம் தரவில்லை. ரசித்து படித்ததற்கு நன்றி

@ ஹேமா..

அந்த சின்ன நூலில் பாசம் இருப்பதாக அந்த கதை நாயகன் ஒருமனதாக ஒத்துக் கொள்கிறானே :)

@ சொல்லரசன்!!

மிக்க நன்றிங்க

கார்த்தி சார்.. இது அனுபவமா சிறுகதையான்னே தெரியலை... இரண்டையும் போட்டு குழப்பிவிட்டதால் அப்படி ஆகிவிட்டதோ என்னவோ?

ஜமால் மற்றும் தமிழரசி ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி!!
உங்க ஆழ்ந்த சிந்தனை உங்க வரிகளில் வெளிப்படுகிறது. வாழ்த்துகள்...!