பதிவுலகில் நான் - தொடர்பதிவு
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆதவா.
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உண்மை பெயரை அறிதல் உண்மையில் ஒரு பொருட்டே அல்ல. பெயர் என்பது ஒரு உயிர் மூடிய மெய்யின் தனித்துவ அடையாளம் தானே. இதில் உண்மையான பெயர் என்பதற்கு அர்த்தமில்லை. பதிவில் தோன்றும் பெயர், தன்னிச்சையாக வந்தது; அசல் பெயரின் மறுசொல்லாக அது இருந்தது. வேறு வலுவான காரணங்கள் ஏதுமில்லை.
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
வலையுலகில் தமிழ் இயங்குவதே அறியாமல்தான் எழுத வந்தேன். அறிமுகப்படுத்த யாருமற்ற சூழ்நிலையில் ஒரு அங்கீகார தாகத்திற்காகத்தான் இணைய உலகம் எனக்கு திறந்து கிடந்தது. ஆனால் அங்கீகார தாகம் எவ்வளவு பெரிய சுயபோதை? அது வலையுலகில் நிகழ்ந்து வருகிறது. மதுப்புட்டிகள் ஒன்றையொன்று ச்சியர்ஸ் என்று கத்தும்பொழுது அதைப் பொருட்படுத்தாமல் குடிப்பவன் தள்ளி வைக்கப்படுகிறான். குழுவமைத்தல் அந்த குழுவுக்குள் நிலவியிருத்தல் போன்றவை தனக்குக்கீழான வட்டத்திற்குள் சுற்றுவதைப் போன்றது.
வலையுலகில் அப்படித்தான் 2006லிருந்து 2008 வரை இருவருடங்கள் கழிந்தன. பிறகு தமிழ்மணம் எனும் வலைக்குழுமம் மூலமாக மற்றவர்களுக்கு படைப்பை எடுத்துச் செல்ல இயலும் என்றறிந்து 2009 ஆம் வருட ஆரம்ப மாதங்களில் எழுதி வந்தேன். ஆயினும் அன்றும் சரி, இன்றும் சரி, முன்பே எழுதிய எழுத்துக்கள்தான் வலையேற்றம் செய்தன. சிற்சில விதிவிலக்குகள்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலம் ஆக ஒரேயொரு பதிவு போதும். பொதுவாக வாசகர்கள் காமம் சூழ்ந்த எழுத்துக்கள், ஜாலியான அரட்டைகள், குழும நண்பர்கள், வெகுஜன படைப்புகள் மற்றும் ஏற்கனவே பிரபலமாகி எழுதி வருபவர்கள் என்று ஒவ்வொரு குறுவட்டத்தையும் சுற்றி வருகிறார்கள். இதில் இறுக்கமான எழுத்துக்களும், ஆய்வு செய்து மனதிலேற்றவேண்டிய கலைப்படைப்புகளும் நேரமின்மையின் சலிப்பு காரணமாக ஒதுக்கப்படுகின்றன. நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியாது. பிரபலம் ஆவது என் நோக்கல்ல. நல்ல படைப்புகளைத் தரவேண்டும் என்பதே எனது நோக்கமும்.. இறுக்கமான எழுத்துக்களிலும் வெகுஜன எழுத்துக்களிலும் அனுபவங்களை எழுதியிருக்கிறேன். அது, வாசகர்களை ஒன்றின்பால் கவரவைத்து இழுத்து மற்றதைப் படிக்க வைக்கவேண்டும் எனும்
யுக்தி. அது எத்தனை தூரம் சாத்தியம் என்று தெரியாது!
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
சொந்த விஷயங்களைத் தொடாமல் எழுதியவர்கள் என் வாசிப்பு வரையிலும் கண்டதேயில்லை. அனுபவங்களின் விளைவாக படைப்புகள் உருவாகின்றன. ஏதேனும் ஒரு நுண்ணிய செயலனுபவத்தின் வாயிலாகவும் ஒரு படைப்பு வரலாம். என்றாலும் எனக்குரிய எல்லையைத் தாண்டாமல்தான் சொந்தானுபவங்களை வலைக்கு விரிக்கிறேன். எனினும் விளைவுகள் இதுவரை கண்டதேயில்லை.. சொன்ன விஷயங்கள் சொந்தமானதா என்ற குழப்பங்களை எழுத்தில் காட்டியிருப்பதால் இருக்கக் கூடும். இதோ, இப்பொழுது எழுதிக் கொண்டிருப்பது கூட சொந்தப் அனுபவம் தான் இல்லையா?
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
எனக்கு அவசியமானது எனது தொழில். தனித்தே இருக்கப்பட்டதாலோ என்னவோ, பேசுவதற்கு கவிதைகள் பயன்பட்டன. எனக்கு கவிதையின் மூலம் பணம் சேர்க்கவோ, புகழ்பெறவோ, சிறுகதைகளின் மூலம் வாசக மனதில் அமர்ந்து கொள்ளவே விருப்பம் ஏற்பட்டதேயில்லை. தொழில் என்பது வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் பாதை. அதில் சிறுசிறு இளைப்பாரல்களே படைப்புகள். என்னையறிந்தவர்கள், நான் அதிகம் எந்த கூட்டத்திற்கும் கலந்து கொள்ளாதவன் என்றே சொல்லுவார்கள். இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இந்த வலைமூலம் அதைச் செய்யவில்லை! செய்யமுற்பட்டும் அது தவறானது என்று ஒதுங்கிக் கொண்டேன்.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்றுதான். இன்னொன்று மறைவில் இருக்கிறது. அது சோதனைக்களமாக உபயோகப்படுத்தி வருகிறேன். என் வலைத்தளம் கண்டவர்கள் அநேகமாக நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு நான் எனக்குத் தெரிந்தவரையில் உழைக்க வேண்டியிருந்தது. மேலும் எனக்கு மிகவும் பிடித்த அடர்சிவப்பு வர்ணத்தை வலையில் கொடுக்கவும் விரும்பினேன். இவற்றையெல்லாம் இன்னொரு தளத்தில் சோதித்து பிறகே இதில் அமல்படுத்துவேன். இன்னொரு தளம் ஆரம்பிப்பது குறித்து ஆலோசித்தும் வருகிறேன். அது பெரும்பாலும் குழும தளமாக இருக்கலாம்.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
முதலில் மற்ற பதிவர்களை முழுமையாக வாசிப்பதேயில்லை. அனைவரும் நன்றாக எழுதுகிறார்கள். பெரும்பாலும் குறைகளற்ற விமர்சனங்கள்தான் எல்லோராலும் வழங்கப்படுகின்றன. உண்மையில் பின்னூட்டங்கள் என்பது பாராட்டுப் பொத்தான்களாகவே இருக்கின்றன. அதை நானும்தான் செய்துவருகிறேன். ஏனெனில் அதற்கு காரணங்களும் உண்டு. இந்த சூழ்நிலையில் எல்லோரும் ஒரேமாதிரியாகத்தான் தெரிகிறார்கள். இதில் கோபமோ, பொறாமையோ அல்லது வேறெந்த உணர்வும் ஏற்பட்டதில்லை.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
2006 லிருந்தே தமிழ்மன்றம்.காமில் (இன்று வரையிலும்) எழுதி வருவதால் எனக்கு அங்கே பாராட்டியவர்கள் அல்லது திட்டியவர்கள்தான் அதிகம். அது ஒரு களமாக இருந்தது. சிறப்பான விமர்சனங்கள் கொடுக்கப்பட்டது. கவிதைகள் தட்டப்பட்டன. உருவங்களை மாற்றிக் கொடுத்தார்கள். சற்று மந்த நிலை அவ்வப்போது ஏற்பட்டாலும் ஒற்றை வரியில் “நல்லா இருக்குங்க” என்று நான் கூட சொன்னதே கிடையாது. வலையுலகம் போன்றே முதிர்ச்சி பெறாத இயக்கம் தான் என்றாலும் பல முதிர்ச்சி பெற்றவர்கள் சூழ, எனக்கொரு சோதனைக் களமாக இருந்தது... வலையுலகில் முதல் பாராட்டு என்பது, இன்று புதிதாக வரும் ஒவ்வொருவரும் தெரிவிக்கும் பாராட்டு கூட முதல் பாராட்டுதானே!!
10) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
ஓரிரு பதிவுகளில் என்னை மதிப்பிடாதீர்கள்.. என்னை மாத்திரமல்ல, எல்லோரையுமே!
தொடர்பதிவுக்கு அழைத்த முரளி அவர்களுக்கு நன்றி!
Comments
10 - நல்லா சொன்னீங்க ஆதவா
அதனால என்ன நல்லா தான் எழுதியிருக்கீங்க!
ஆம் சகோ
உண்மையான பதில்கள்
அன்புடன்
ஆதவா
///
நானும் முதலில் அங்குதான் பார்த்தேன்
ithe standarad-ai unga pathivil maintain pannunga, unga uyaram knnukku therikirathu.
vaalthukkal :-)
அமைதியான பதில்கள்
நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.
அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)
தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.
வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..
அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...