ஒரு நாள் ஒரு இரவு - இறுதி

கோகுலும் ஸ்ப்ரிங்கியும் கார்லயே இருக்கோம்னு சொல்லி அடம்பிடிச்சாங்க.. அவங்களை ஒண்ணும் செய்யமுடியலை. சரி, பத்திரமா இருங்கன்னு சொல்லிட்டு நாங்க வண்டியில ஏறினோம். நானும் ஸ்கூபியும் முதல்ல கிளம்பினோம்.

“இங்க காட்டுப்பூனைங்க அதிகம் இருக்கும்.. லைட் அடிச்சா ஓடிப்போயிரும்” மெக்கானிக் சொல்லிட்டே வண்டிய ஓட்டினார்.

”கால்ல இன்னும் வலிக்குதாடா” ன்னு ஸ்கூபி கேட்டான். ஆமாம்னேன். வண்டின்னா கியர் வண்டின்னு நீங்க நினைக்காதீங்க, அந்த வண்டி என்ன மேக்குன்னே தெரியலை, ஊட்டி குன்னூர்காரங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா தயார் பண்ணுவாங்க போல இருக்கு. பழைய தகரடப்பாவுல தெர்மாகோல் அடைச்சு அதில உக்காந்துகிட்டு இழுத்துட்டு போனா ஒரு சவுண்டு வருமே, அந்தமாதிரி சவுண்ட் வந்திச்சு. அந்த இருட்ல ரோடு எங்க இருக்குன்னே தெரியல. வண்டியில லைட்டு மட்டும் இல்லாட்டி அவ்வளவுதான். கண்ணிருந்தும் குருடன்கிறமாத்ரி தடவித் தடவித்தான் போகமுடியும்.

”நீங்கள்லாம் எப்படிங்க இங்க வாழ்றீங்க”

மெக்கானிக் வண்டி ஓட்டறத பார்த்தா ஏறக்குறைய ஒருநாளை பத்து தடவையாவது இந்த பக்கம் வந்துட்டு போறவரா இருக்கணும். ஆள் பார்க்க, எப்படி இருப்பார்னா, களவானி படத்தில வர்ற வில்லன் மாதிரி நெட்டையா கருத்த மூஞ்சி, ஸ்வெட்டரும் குல்லாயிம் போட்டிருந்தார். பேண்டெல்லாம் மசி, ஆயிலு, அவரை ஒட்டிட்டு உக்கார்ந்துட்டு இருந்ததால ஆயில் வாசம் அடிச்சது. காட்டுப்பூனை எங்க முன்னாடி நின்னதும் ஒரு நிமிஷம் ஸ்டன்னாயிட்டோம். அது நெஜமாவே பூனைதான். கருத்து இருந்துச்சு, கொஞ்சம் பெரிய சைஸ். புலி மாதிரி உர்ர்ருனு இல்லை. பார்த்தா எடுத்து கொஞ்சிக்கலாம்.

“சிலசமயம் பாய்ஞ்சு வந்து கடிக்கும்”

மெக்கானிக் வேற அடிக்கடி பயமுறுத்திட்டே இருந்தார். ஒரு ரெண்டு நிமிஷம் நாங்க வேற எதையும் பாக்கலை. அப்படியே காட்டுராணி மாதிரி அந்த பூனை எங்களை பாத்துகிட்டே நடந்தது. அப்படியே வெலவெலத்திருச்சு. என் வாழ்க்கையில இந்த சைஸ்ல பூனையை பார்த்ததே இல்லை. அதுவும் எங்களை பார்த்துட்டே நடந்ததால வெறும் கண்ணு மட்டும்தான் தெரிஞ்சது. அதில இருந்து வெளிச்சம் வராமாதிரி இருந்திச்சு. நல்லவேளை அப்படியே போயிருச்சு.

குன்னூர் வந்ததுக்கு அப்பறம் கார்ல இருக்கிற கோகுலுக்கும் ஸ்ப்ரிங்கிக்கும் டிபன் வாங்கிட்டு மெக்கானிக்கை அனுப்பி வெச்சோம். அவர் திரும்பி வரப்போ ராக்கியை கூட்டிட்டு வந்தார். எங்களூக்கு ஒரே பயம் என்னன்னா, காட்டுல கோகுலும் ஸ்ப்ரிங்கியும் தனியா விட்டுட்டு வந்திட்டோம். அவங்கப்பாவுக்கு இந்த மேட்டர் தெரிஞ்சதுன்னா எங்களை சும்மா பிச்சு பிச்சு போட்டிருவார். லாட்ஜுக்கு வந்ததுக்கப்பறமா தூக்கமே இல்ல. என்னோட கால் வீங்கியிருந்துச்சு. கோகுல் பேக்ல விக்ஸ் இருந்துச்சு, அதை கொஞ்சம் தேச்சுகிட்டேன்.

நைட் 12 மணி.

ஸ்கூபிக்கு போன் வந்துச்சு. பண்ணினது கோகுலோட அப்பா.. என்னாச்சின்னு விசாரிச்சாரு. ஆக்ஸிடண்ட்.. கார்ல ஓடிட்டிருந்த சக்கரத்தைக் காணோம். மெக்கானிக்கை கூப்பிட்டு ரெடி பண்ண முடியல. நாளைக்குத்தான்.

“கோகுல் எங்க?”

............................ என்னன்னு சொல்றது?

“கோகுலும் ஸ்ப்ரிங்கியும் சாப்பிட போயிருக்காங்க அங்கில், வந்ததும் கூப்பிட சொல்றேன்”

“இல்ல. நான் இப்பவே பொறப்பட்டு வரேன். ஏதோ பெரிய பிரச்சனையை நீங்க மறைக்கறீங்க”

”இல்லைங்க அங்கில்”

”நோ வே, ஐ’ல்பீ தேர் விதின் 2”

அய்யய்யோ.... அப்பா வந்து புள்ளைய கேட்டா என்னன்னு சொல்ல? காட்டுல தனியா இருக்கான்னு சொல்றதா? ஸ்கூபி என்னைக் கூப்பிட்டான், ரெண்டு பேரும் ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்துக்கிட்டோம். வாடகை ஐநூறு ரூவா. ட்ரைவர் பேசிகிட்டே வந்தாரு. அதே ஆக்ஸிடண்ட் கதை. இதோட பத்து தடவை கேட்டாச்சு, நானும் பத்துதடவை சொல்லியாச்சு. வளைஞ்சு வளைஞ்சு வெளிச்சம் போச்சு.. அவரும் ஆரம்பிச்சாரு.

”தனியா விட்டுட்டு வந்தீங்கன்னா ஏதாச்சும் மிருகம் காரை கவுத்தி விட்றும். அந்தமாதிரி நெறயா நடந்திருக்கு..”

”கோகுலுக்கு வீஸிங் வேற இருக்கு”

“ஏண்டா, இதை இவ்வளவு நேரம் கழிச்சாடா சொல்லுவீங்க?:”

“அட, அவந்தாண்டா அடம்புடிச்சுட்டு, கார்லயே இருக்கேன், வரமாட்டேன்னான், குன்னூருக்கு மத்தியானம் வந்தான்ல, அப்பவே அவங்கப்பாகிட்ட பேசியிருந்தான்னா அவரும் பிரச்சனையில்லைன்னு நெனச்சிருப்பாரு, இவன் பேசவேயில்லயாம். நைட் ஆகியும் பசங்க வராததால எல்லாருக்கும் போன் அடிச்சிருக்காரு, எல்லாமே நாட் ரீச்சபில். டென்ஷனாயிட்டாரு.”

இவன் வேற வயத்தில புளியை கரைக்கிறான்... எனக்கு ஆல்ரெடி கரைச்சாச்சு. தொண்டையெல்லாம் அடஞ்சுட்டு பேச்சே வரலை. தூக்கமும் வரல. அரைமணி நேரத்தில ஸ்பாட்டுக்கு வந்தாச்சு. காருக்கு கொஞ்சம் முன்னாடியே ஜீப்பை நிறுத்தினாரு ட்ரைவர். தெருவிளக்கு மங்கலா எரிஞ்சுட்டு இருந்துச்சு. காருக்குள்ள பசங்க ரெண்டு பேரும் இருந்தாங்க. நாங்க வந்ததைப் பார்த்ததும் இறங்கி வருவாங்கன்னு நெனச்சோம்.. ம்ஹூம்... வரல.. அய்யய்யோ என்னாச்சுன்னு தெரியலையே. ஸ்கூபிதான் சத்தம் போட்டுட்டே உள்ள போனான். கார் கண்ணாடி ஏத்தியிருந்தது. உள்ள என்ன இருக்கும்னு தெரியாத சன் கிளாஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்துச்சு. ரெண்டு தட்டு தட்டினான். திறக்கல. நானும் இழுத்துட்டு இழுத்துட்டு நடந்து வந்தேன். சத்தம் போட்டு போட்டு பார்த்தோம்.

“ கோகுல்!!!, டேய்.... எந்திரிங்கடா”
அஞ்சு நிமிசம் ஆச்சு... திறக்கவேயில்ல.

பயம்.. பயம்... பயம்....

ஏற்கனவே காட்டுப்பூனை எங்களுக்கு முன்னாடி நின்னு பேதியாச்சு, இப்ப இவனுங்க வேற காணோம்.. கோகுலோட அப்பாவுக்கு என்ன பதில் சொல்றது?

காட்டுலதான் இருந்தான், பூனை அடிச்சிருச்சோ என்னவோ?; யானை இந்த சைடு வருமா? ரெண்டு பேரையும் தூக்கிட்டு போயிருக்கும்னு நெனைக்கிறேன். காட்டுவாசிங்ககிட்ட மாட்டியிருப்பானோ? நரமாமிசம் திங்கறவங்க இருக்காய்ங்களா?

ஒரு கதவு மட்டும் திறந்து மெல்ல ஸ்ப்ரிங்கி எட்டிப் பார்த்தான். அப்பறம் கோகுலும் வெளியே வந்தான். அப்பாடா.... உசுரு போயி உசுரு வந்துச்சு. (அப்ப, உசுரே போகுதேன்னு பாட்டு வரல, வந்திருந்தா அதைத்தான் பாடியிருக்கணும்)

“ஏண்டா வந்துட்டீங்க”

“உங்க டாடி கூப்பிட்டாருடா, அவரு நைட்டே குன்னூர் வராராம், உன்னைக் கேட்டாரு, சாப்பிட போயிருக்கிறதா சொல்லி அட்ஜஸ்ட் பண்ணியிருக்கேன்.”

“ஏண்டா சத்தம் போட்டோம்ல, கதவை திறக்க வேண்டியதுதானே?”

“நாங்க உள்ள படுத்துகிட்டு இருந்தோம்டா, திடீர்னு ஜீப் சத்தம். வண்டிக்கு பக்கத்தில நிக்கிறாப்ல இருந்துச்சு. எவனோ ஃபாரெஸ்ட் ஆபிஸருங்கதான் வந்திருக்காங்கன்னு எந்திரிக்கல.”

“பயமா போச்சுடா”

“நீ ஏண்டா இந்த காலோட வந்தே, ரெஸ்ட் எடுத்துட்டு இருக்க வேண்டியதுதானெ?

“பரவாயில்ல,”

“டாடி என்ன சொன்னாரு?”

“வந்திட்டிருக்காராம், கொஞ்ச நேரத்தில உன்னை பேசச்சொன்னாரு, குன்னூர் போயி டவர் கிடைச்சதும் மொதல்ல பேசு,”

”அவரு சொன்னா மாதிரியே வந்துடுவாரே”

காரை விட்டுட்டு ஜீப்ல எல்லோரும் கிளம்பினோம். குளிர் காத்து வேற ஜில்லுனு மூஞ்சில அடிச்சது. வண்டியை இப்படி அநாதயா விட்டுட்டு வந்ததே இல்ல,

“இனிமே ராக்கிய முன்னாடி உக்காரவெச்சு வண்டி ஓட்டவே கூடாது, வெயிட்டு தாங்காது”

“நாளைக்கு ரெடி ஆயிடும்ல டா”

“ஆயிடும். மதியத்துக்குள்ள கிளம்பிடலாம்”

“அப்ப கோத்தகிரி”

“xxxxxxxxxxxxx"

”இன்னொருதடவை பாத்துக்கலாம்”

“இதே அம்பாஸிடர்லயா... நான் வரலை சாமி”

”சாரிடா மாப்ள, ட்ரிப்புக்கு வந்துட்டு இந்தமாதிரி ஆயிடுச்சு”

”டேய்... சேசே.. விட்றா, இதுவும் ஒரு திக் திக் அனுபவம்தானே,... எதுவும் நடக்காம இருந்திருந்தா, இந்த ட்ரிப்பை நாம மறந்திருப்போம். ஆனா இப்ப மறக்க முடியாதில்ல..

“ம்..ம்”

வண்டி ஸ்பீடா போச்சு, ஜீப்காரருக்கு சரியான எக்ஸ்பீரியன்ஸ். நல்லா திருப்பி, வளைச்சு வண்டி ஓட்டிட்டே போனாரு. கொஞ்சம் கூட பயமே இல்லாம எப்படித்தான் ஓட்டுறாங்களோ? எப்படியோ உசுருக்கு பிரச்சனை இல்லாமல் போச்சே, அதுக்கே சந்தோஷப்படனும், எப்படியும் வண்டி செலவு இருபதை தாண்டிரும், ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு செலவ ஷேர் பண்ணிக்கலாம். ரெண்டு மூணு கி.மீட்டர் தாண்டி வந்திருப்போம். திடீர்னு வண்டியை ஸ்லோ பண்ணினாரு ட்ரைவர். என்னாச்சுன்னு எட்டிப்பார்த்தொம்....

ஒரு காட்டுப்பூனை பாய்ஞ்சது....

Comments

ஆதவன் ...........படித்துவிட்டு வருகிறேன்
sakthi said…
எப்படியோ நல்லபடியா வந்து சேர்ந்ததுல சந்தோஷம் ஆதவ்