நிர்வாணம்
Thanks : http://www.serbianaart.com
பொழுது புகுந்த மோனக்கிறுக்கால்
ஒளித்திரள் பட்டுத் தெறித்த
பகலாகத்
துடித்துக் கொண்டிருந்தேன்
நெடுமலையில் ஊறிக் கசிந்த
மணற்த் திட்டினைப்போல்
என்னை விட்டு நழுவிக் கொண்டிருந்தது
நிர்வாணம்
நுரைகுமிழிகளைத் தொட்டுடைக்கும்
விளையாட்டில், பருவம் வென்றது
எப் பணயமுமின்றி
தோற்றோடியது நிர்வாணம்
நெய் தகழியில் உலாத்தும் தும்பியென
நெடுநாட்கள் ஒவ்வொன்றாய்
ஆடையின்மையின் நினைவுகள்
இழுத்துச் சென்றன
நிர்வாணம் என்பது
சட்டெனத் தோன்றி மறையும்
துருவாசன் கோபங்கள்
நில்லாமை அதன் பாவம்
அப்பட்டம் அதன் குற்றம்
வெயிலெறிந்த முட்கதிர்களைப்
பொடித்தனுப்பும் படலம் போல
இடை நழுவா கச்சையொன்று
இன்றென்னை மெய்காத்து நிற்கிறது
அது
காத்தலெனும் தொழிலினூடே
அழித்தலும் செய்துகொண்டிருக்கிறது.
ஆடைத் திணிப்பெனும் ஏகாதிபத்தியத்தில்
இருமனக் குழப்பங்களுக்கிடையே
தங்கித் தவித்து
இறுதி வரையிலும் இழுத்துக் கொண்டிருந்த
நிர்வாணத்தின் இறுதிமூச்சடக்கி
கவிந்து கிடந்த
மணற் தாழியில் அடைத்து
முன்னிருட்டு அகலும் முன்
மூர்க்கமாய் எரிந்துவிட்டேன்
இனியொருப்பொழுதும்
அதைத் தழுவிப்
பொதுவில் செல்லுதலில்லை
எனும் பொருமலுடன்....
Comments
சட்டெனத் தோன்றி மறையும்
துருவாசன் கோபங்கள்
நில்லாமை அதன் பாவம்
அப்பட்டம் அதன் குற்றம்
மேற்க்கண்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. இரண்டு மூன்று மறுவாசிப்பை கோரும் கவிதைப் போல் இருக்கிறது. முடிந்தால் முயற்சிக்கிறேன்.வேறு வழியில்லையெனில் நேரில் தொடர்பு கொள்கிறேன்!!!!!!!.