காணாமல் போனவன்
வெகுநாட்களுக்குப் பிறகு காணாமல் போனவன் என்ற அடைப் பெயரோடு வீடு திரும்பியிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக வித்தியாசமில்லாத உணர்வுகளோடு பதிவுகளை எழுத ஆரம்பிக்கையில் மறந்துவிட்டதாகவே நினைத்துக் கொண்டிருக்கும் மொழியிச்சை தானாகவே வந்தமர்ந்து கொள்கிறது. ஒருவகையில் எச்சிலெனத் துப்பித்தான் காணாமல் போவதற்கான ஆயத்தங்களை முதலில் மேற்கொண்டிருந்தேன். (விலாவாரியாகச் சொல்லவேண்டுமல்லவா.... வரலாறு மிக முக்கியம்..!!)
பொன்னாத்தாவின் சவலை பாய்ஞ்சிடுச்சு சிறுகதையைப் போன்றே, எழுத்துக்குப் பின்னைய என்னுலகம் குறித்த சிந்தனைகள் இப்பொழுதே (ஒன்றும் சாதித்துவிடாமலேயே) தோன்ற ஆரம்பித்துவிட்டன. தேவையற்ற எண்ணங்கள், மனக்குழப்பத்தின் மையத்தில் நொரண்டிக் கொண்டிருந்தன. எழுத்து, மழை வடிந்தபிறகு காய்ந்திருக்கும் ஈரமண்ணாக மனதின் துளைகளில் நிரம்பியே கிடக்கிறது. வெளிப்பாட்டு வாழ்வு, தோண்டியெடுத்து விடக்கூடாத எச்சரிக்கை உணர்வில் வழிந்து கிடக்கிறது... இதில் நான் எதைவிடுத்து எதைச் செய்ய? பரவலாக நண்பர்களின் அழைப்பு, நெகிழ்ச்சியான நொடிகளை குமிழ்களென உருவாகி, அழைப்பு முடிந்த பிறகு உடைந்து தெறித்தது. பொதுவாகவே நான் யாரிடமும் சொல்லிக் கொண்ட தற்காலிக சமாதானம், வேலைப்பளு என்பதாக இருந்தது. ஆனால் வேலைப்பளு மட்டுமே காரணமல்ல என்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். மிக அதிக வித்தியாசமில்லாமல், கடைகள் (Blogs) திறந்து கிடக்கின்றன. புதிய பொருட்கள் பார்வைக்கு பதியப்பட்டிருக்கின்றன. அவரவர் மனக்கோப்பையில் தவறி விழுந்த எழுத்துக் கனங்களை அவரவர் பருகிக் கொண்டிருக்கின்றனர். மிகக்குறுகிய காலத்தில் நான் சேகரித்துக் கொண்ட நட்புகள் குறுகிய தவிர்ப்பை நிராகரிக்கின்றனர் எனும்பொழுது என்மீதான, எழுத்தின் மீதான அண்மைய கோபங்கள் விலக முற்பட்டு, பெருமையாகவும் இருக்கிறது.
எழுதக் கிடைப்பது அளவில்லாததாக இருக்கிறது. யாருக்கும் எதற்கும் எழுத்து மு(றி)டிந்துவிடப் போவதில்லை. சூழ்ந்திருக்கும் சூழ்நிலையின் இறுக்கம், அளவற்ற எழுத்தின் கழுத்தை முறித்து விடப்பார்க்கிறது. நுகர்நிலையை விட, வாழ்நிலை மதிப்பு மிகுந்தது. பல சமயங்களில் அதுவே மிக முக்கியமானதுமாகிறது.
அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்புசால் நன்றிகள்.
தீபாவளி வரைக்கும் எனக்கு பணிப்பளு இருப்பதால் அவ்வப்போது வந்து போகிறேன். முற்றிலுமாக எழுத முடைப்பட்டு வராமல் போய்விடாமல்... தவிர, நேரம் என் கைக்குள் அகப்படும்பொழுதெல்லாம் நண்பர்களின் வலைத்தளங்களுக்கென நேரத்தை அவிழ்த்துவிடுகிறேன்.
வரும் 27-07-09 முதல் 02-08-09 வரை வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணியாற்றவிருக்கிறேன். அவ்வாரம் முழுக்க நண்பர்கள் அங்கே எட்டிப் பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறேன்!
சுவாரசியமான பதிவர் என எனக்கென மதிப்பளித்து விரு(ந்)தளித்த நண்பர்கள் குடந்தை அன்புமணி மற்றும் விதூஷ் ஆகியோருக்கும் போன் செய்த, மடல் அளித்த, மனதில் நினைத்த நண்பர்கள் அனைவருக்கும் அளவில்லாத நன்றிகள்!!
அன்பின்
ஆதவா
Comments
அந்த கணங்களுக்காக காத்திருக்கிறோம்
அதெல்லாம் போகாது பாஸூ
வலைச்சர வாரத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
காணாமல் போன வரலாற்றை அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் வலைச்சரத்திற்கும், சுவாரஸ்ய பதிவர் விருதுகளுக்கும்.
தொடருங்கள் !!!
அங்கு நிச்சயம் சந்திப்பேன்.
உங்கள் தமிழ் ஆசான் படித்தால் மகிழ்வார். அவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.
--அன்பின்
வித்யா
வாழ்த்துகள் ஆதவா..
மீண்டும் கடையை திறந்ததிற்கு மகிழ்ச்சி..
விரைவில் சந்திப்போம்
ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஆதவா
-ப்ரியமுடன்
சேரல்
அடடே... அடுத்த வலைசர ஆசிரியர் நீங்கள் தானா! மிக்க மகிழ்ச்சி. சிறப்பாக செயல் பட வாழ்த்துக்கள் ஆதவா...
vaanga saar vaanga... -:)
valthukkal
தங்களின் அனைத்து தடைகளும் தூசு என தற்போது கடந்து போயிருக்கும் என நம்புகிறேன்.
மீண்டும் உங்கள் பதிவை கண்டு மிகவும் சந்தோசப்பட்டேன். பணியும் ஒவ்வாமை மனதும் சிறிது சிறிதாக விலகி உங்கள் எழுத்தை எங்களோடு எப்போதும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே என் மிகையான விருப்பம்.
வலைச்சர ஆசிரியராக தேர்ந்தமைக்கு சந்தோசமும் வாழ்த்தும். அங்கு உங்கள் எழுத்தை காண எல்லோரையும் போல் எனக்கும் ஆவலே! விருதுக்கும் என் வாழ்த்துக்கள்.
என்றும்...
நட்புடனும் அன்புடனும்
ஆ.முத்துராமலிங்கம்.
வாழ்த்துக்கள் .
- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
விட்டுவிடாமல் தொடருங்கள் ஆதவா.