ஜூஜூ (Zoo Zoo) முட்டையழகிகள்
மொழுமொழுவென்று மொழுகிப் பூசப்பட்ட நன்கு பெருத்த முட்டை வடிவிலான முகம், அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரு கண்கள். கண்களில் ஆண் பெண் இன வித்தியாசம் காட்டுவதற்கென புருவங்கள், காதுகளும் மூக்கும் கிடையாது, விதவிதமாக உணர்வுகளை மாற்றும் வாய், புசுபுசுவென உப்பிய வயிறு, கரும்பைப் போன்று ஒடிசலான கைகளும் கால்களும், மெத்து மெத்தென்று பஞ்சு கால்கள்...
ஜூஜூ (Zoo Zoo)முட்டையழகிகள்தான் இப்பொழுது எல்லோருடைய மானசீக கதாநாயகிகள். பொதுவாக கார்ட்டூன் பொம்மைகளின் உணர்ச்சிகள் அதன் வாயின் உருமாற்றத்தில்தான் வெளிப்படும், ஜூஜூவும் அதற்கு விலக்கல்ல, விதவிதமான உணர்ச்சிகளைத் தாங்கி ஒரு தரமான அனிமேஷன் காட்சியைப் போன்றே நம்பத்தகுந்தவாறு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அசாதாரண யுக்தியும் மாற்றுவகையிலான சிந்தனைக் கோணமும்தான் படைப்புகளைத் தரம் பிரிக்கின்றன. அவ்வகையில் வோடஃபோனின் ஜூஜூ முற்றிலும் மாற்று சிந்தனையோடு வெளிவந்தவைகள், வோடஃபோனின் அடையாளமாகவே மாறிவிட்ட இந்த முட்டையழகிகள்தான் இன்று விரும்பிப் பார்த்து ரசிக்கப்படும் அழகிகள்.
ஜூஜூ விளம்பரங்களில் பின்நவீனத்துவ விளம்பரபாணி கடைபிடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். Value Added Services என்றழைக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகளைப் பற்றிய நகைக்கத் தகுந்த, குழந்தைத்தனமிக்க, குறும்பான காட்சிகளில் இந்த முட்டையழகிகள் நடித்திருக்கிறார்கள். Call Filter எனும் ஒரு விளம்பரத்தில் காதலர்கள் இருவர் மெய்மறந்து (ஒரு ரெஸ்டாரெண்டில் என்று நினைக்கிறேன்) காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு ஜூஜூ ஒரு பெட்டியொன்றைத் தூக்கிக் கொண்டு, (போன் செய்வதாக,) அவர்களிருக்கும் இடத்திற்கு வருகிறது. ஆண் ஜூஜூவுக்கு இது பிடிக்கவில்லை. முதல்முறை துரத்தி விடுகிறார். இரண்டாம் முறை குத்திவிடுகிறார். இக்காட்சி, தேவையில்லாத போன் அழைப்புகளைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கிறது. இதைப்போன்றே Call Divert விளம்பரம், பிஸியாக பென்ச்சில் அமர்ந்து கொண்டு படித்துக் கொண்டிருக்கும் ஒரு ஜூஜூவைப் பார்க்க இன்னொரு ஜூஜூ வருகிறது. பிஸியான ஜூஜூ கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்க்கிறது. பிறகு பென்ச்சில் இருந்து இறங்கி, வந்த ஜூஜூவை திருப்பி விடுகிறது. அது இன்னொரு இடத்திற்குப் போய் நிற்கிறது.. (அந்த இடத்தில் வேறோர் ஜூஜூ இருந்திருக்க வேண்டும்.) இது கால் டைவர்ட்டுக்கு எடுக்கப்பட்ட காட்சி.. இதைப் போன்றே ஒவ்வொரு காட்சிகளிலும் ஒருவித பின்நவீனத்துவம் கலந்திருக்கும். பெரும்பாலான விளம்பரங்களில் ஆண், பெண் இருவரின் காதலை ஒத்து காட்சிகள் நகருகின்றன. அதில் இரு காதலுக்கிடையே ஏதாவது ஒரு இடையூறு வந்துவிடுகிறது. அதை ஆண் ஜூஜூ சமாளித்துவிடுகிறது. இந்த சமாளிப்பு வோடஃபோன் மதிப்புக்கூட்டப்பட்ட சேவையாக விளம்பரப்படுத்தப்படுகிறது.
இவைகளனைத்தும் கம்ப்யூட்டர் அனிமேஷன்கள் அல்ல, பெண்களும் குழந்தைகளும் என்பது முன்பே அறிந்த விஷயம். ஒரு சேவையை கார்ட்டூன் முறையில் விமர்சிக்க அல்லது விபரப்படுத்த அசாதாரண மூளை தேவை. இதை இயக்கியிருக்கும் O&M மற்றும் நிர்வாணா விளம்பர நிறுவனங்கள் மிகச்சிறந்த விளம்பர நிறுவனங்கள் என்பதில் ஐயமில்லை.
இந்த முட்டையழகிகளின் உருமாற்றமே அலாதியான சிந்தனையுடையது. உடல் மற்றும் தலை என்று இருபாகங்களாகப் பிரித்து உடலெங்கும் பஞ்சு போன்ற வெண்மை நிறத்திலான ஃபோம் (Foam) பொறுத்தி, ஜூஜூவின் உடலை அமைத்திருக்கிறார்கள். கைகள், கால்கள் நன்கு ஒல்லியாக இருக்கும்படியாகவும், அதற்கேற்ப நடிகர்களையும் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் இவ்வகையமைப்பிற்குப் பொருந்தி வருவார்கள். எல்லா ஜூஜூக்களின் வயிறு உப்பியவாறு ஃபோம் பொருத்தப்பட்டு கார்ட்டூனிசம் முறையில் இருக்கின்றன. இவையனைத்தும் கசங்கிவிடாத கனமான துணியினால் தயாரிக்கப்பட்டது. ரிங்டோன்ஸ் எனும் விளம்பரத்தில் துணி பொருத்தப்பட்டிருப்பதையும், ஜூஜூ நடந்து முதலையைத் தாண்டும்பொழுது மடங்குவதையும் காணலாம். ஜூஜூவின் தலைப்பாகம் மட்டும் தனி. அதில் கண்கள் வாய் வரையப்பட்டு ஆண்பெண் இன பேதம் பிரிக்க புருவங்களைப் பொருத்தி ஜூஜூவை முழுமையாக்குகிறார்கள். தலைப்பாகத்தின் மொழுமொழு தன்மைக்கு தெர்மோபிலாஸ்டிக் மூலம் அதை வடிவமைத்திருக்கிறார்கள். நன்கு சூடாக்கினால், இளகியும், குளிர்வித்தால் கெட்டியும் ஆகிவிடும் இந்தவகை பிலாஸ்டிக்களினால் பலவகையிலான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஜூஜூவின் தலை மனித தலையைவிடவும் பெரியது. இதைக் காட்சிப்படுத்தும் பொழுது மனித தலையைக் காட்டிலும் சிறியதாகத் தெரியும்படி செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு உணர்வுகளுக்கு ஏற்றவாறு தலையை மாற்றிவிடுகின்றனர். தலையை மாற்றுமிடத்தில் காட்சிகள் நறுக்கப்பட்டுவிடுகின்றன. இவற்றின் எந்த பாதிப்பும் தெரியாதவாறு துல்லியமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஜூஜூக்களின் ஒலி எதனோடு ஒப்பிடமுடியாதவாறு புதுமையாக இருக்கிறது. என் நண்பர் ஒருவர், உடைந்த ரெக்கார்டின் ஒலியை ஒத்தவாறு இருப்பதாகக் கூறினார். அவர்களது மொழி, தனித்துவமாக இருக்கிறது. குழந்தைத்தனமானது என்றும்கூட சொல்லலாம்.
வீடியோவின் வேக அளவு அதிகமாகவும் ஃப்ரேம்களைக் குறைத்தும் எடுக்கும் பொழுது, காட்சிகளின் அசைவு கார்ட்டூனின் அசைவைப் போன்றே பதிவாகும். ஜூஜூவை படம்பிடிக்கும் பொழுது 20 fps ஃப்ரேம் ரேட்டின்படியும் அதிவேகத்திலும் எடுத்திருக்கின்றனர். உண்மையில் வேஷம் பொருத்தப்பட்ட அந்த முட்டையழகிகளின் நடிப்போடு, காமிராவின் தந்திரமும் இணைந்திருக்கிறது.
விளம்பரக்காட்சிகளின் பின்புல இடங்கள், ரெஸ்டாரெண்ட், கிரிக்கெட் மைதானம், சுவர், அறை என்று எல்லா இடங்களிலும் கசப்பின் வர்ணமான சாம்பல் (Neutral Greys) நிறம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், சில விளம்பரங்களில் பாரீஸ் டவர், எகிப்து பிரமிடுகள், லிபர்டி சிலை ஆகிய யாவும் முட்டையழகிகளின் உலகத்தில் எப்படி இருக்குமோ அப்படியானதொரு தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மேஜைகள், நாற்காலிகள், தூண்கள், என எல்லா பொருட்களும் ஜூஜூ உலகில் நம்மை மிதக்க விடுகின்றன. பொதுவாக எல்லா விளம்பரங்களிலும் மரங்களையும் கட்டிடங்களையும் மேகங்களைப் போன்றே அமைத்து வைத்திருப்பதைக் காணலாம். தரைத்தளம் யாவும் பூசப்பட்டிருக்கும் மிதமான க்ரே வர்ணம் முட்டையழகிகளின் பிசகில்லாத தோற்றத்தையும் சரியான வெளிச்சத்தையும் கொடுத்திருக்கிறது. முட்டையழகிகளின் உபரிபொருட்கள் (Accessories) யாவற்றையும் வர்ணத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆக மொத்தம், எந்தவொரு இடத்திலும் ஜூஜூ உலகத்திலிருந்து நம்மைப் பிரித்துவிடாதபடி கவனமாக கையாண்டிருக்கிறார்கள். ஜூஜூக்களை விடுத்து அடுத்து நாம் ரசிப்பது, ஜூஜூக்களின் கார், மற்றும் பச்சை நிற முதலை. இன்னும் என்னென்ன என்பது நினைவிலில்லை. இந்த விளம்பரத்தை நிர்வாணா விளம்பர நிறுவனம் தென்னாப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனில் படம்பிடித்துள்ளது.
புதிய சிந்தனை, மக்களை எளிதில் கவரும் பாணி, சிறந்த சேவை, என்று வோடஃபோன் முன்னேறிவருவதற்கு இவ்விளம்பரங்கள் பெருமளவில் உதவியிருக்கிறது என்றால் அது மிகையல்ல... சென்ற ஆண்டு பக் நாய்களை வைத்து படமெடுத்ததில் PETA (People for Ethical Treatment for Animals) நிறுவனம் கடுப்பில் இருந்தது. இந்த ஆண்டு அதே நிறுவனம் வோடஃபோனுக்கு கிளிட்ர் பாக்ஸ் (Glitter Box) விருதினைத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அன்புடன்
ஆதவா
Comments
பல விடயங்கள் அறிந்துக்கொள்ள முடிந்தது ஆதவா. மிக்க நன்றி...
எப்பவுமே எந்த ஒரு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தாலும் விளம்பரம் வருகையில் சேனல் மாற்றி விடுவோம் ஆனால் இந்த ஜூஜூ விளம்பத்தை பார்க்கவே ஐபிஎல் கிரிக்கெட் இடைவிளம்பரங்களை காண காத்திருந்தவர்கள் நிரையபேர் இருப்பார்கள் அந்த அளவுக்கு ஒரு வசீகரம். அப்படி என்பதைவிட மிகுந்த நகைச்சசுவையில் நம்மை ஈர்த்து விட்டது.
இதில் என்னை மிகவும் ஈர்த்தது அதனின் குரல், சிரிப்பு மற்றும் உடல் மொழி அவ்வளவு சிறப்பாக செய்திருப்பார்கள் அவைகளின் ஒவ்வொரு அசைவுகளும் சிரிப்பை வாரி இறைத்துவிடுகின்றது.
நல்ல பதிவு
இங்கு கொடுத்திருக்கும் படங்கள் அருமை...இது உங்கள் கைவண்ணமா ஆதவன்...?
நல்ல கட்டுரை...
விரிவாகவும் தெளிவாகவும் இருந்தது...
ஆமாம்..
சரியாக சொல்லியுள்ளீர்கள்...
:-)
மிக்க நன்றிங்க ஆ.முத்துராமலிங்கம். நீங்கள் சொன்னதுபோல, விளம்பரம் பார்க்கவேண்டுமென்று தூண்டியதாக இவ்விளம்பரங்களைக் கொள்ளலாம்.. உங்கள் விமர்சனத்திற்கு நன்றிங்க,. பாராட்டுக்கும் நன்றி
நன்றிங்க தேவன் சார்.
வாங்க ஜமால்.. படிச்சிட்டு இருக்கீங்களா??
நன்றிங்க புதியவன். கீழ்காணும் சுட்டியில் விளம்பரத்தைப் பாருங்கள். முதல் விளம்பரமே உங்களுக்குப் பிடிக்கும்.. இந்த படங்களையெல்லாம் வீடியோவைப் பார்த்து நானே வரைந்தது.
http://www.youtube.com/user/vodafoneipl
நன்றிங்க மாதவராஜ்!!!!
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
நிறைய புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வோடோவா!
படங்களும் Corel Draw-வில் நல்லா வந்துருக்குங்க...இந்த மாதிரி இன்னும் நிறைய வரையலாம் போல..
Good sharing !!!!
என்னை அதிகம் கவர்ந்தது ரோமிங் கால்.... உலக அதிசயத்தை சுற்றிப்பார்க்கபோகும்போது அந்த டான்ஸ்.. கலக்கல்
இதை முதன்முதலில் எல்லோருடைய கருத்தும் இது ஒரு அனிமேஷன் என்பதே. பிறகு அதைப்பற்றி நிறைய கட்டுரைகள்.. அதை யெல்லாம் மிஞ்சும் வகையின் இந்த பதிவு ஒரு வித்தியாசம்... நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஆதவா
பதிவு பயனுள்ளதாய் இருந்தது..
கலக்கி இருக்கீங்க...
வீடியோ ஒன்றையும் போட்டு காட்டி இருந்தால் இன்னும் அழகாக இருக்கும்...
:)))
நிறைய புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
நட்புடன் ஜமால்
மச்சான் சுரேஷ்
அ.மு.செய்யது,
அபுஅஃப்ஸர்
ராஜேஷ்வரி,
ராம்.CM
வெங்கிராஜா (இல்லை நண்பரே... பொதுவாக, நான் ஓவியம் வரைவதில்லை (முதல்ல வரையத் தெரியாது) கணிணி முறையில் ஓரளவு வரைந்தாலும் ஃபைன் ஆர்ட்ஸ் அளவுக்கு முன்னேறவில்லை... நமக்கு எழுதவே நேரமில்லை )
சொல்லரசன்
கார்த்திகைப்பாண்டியன்
வழிப்போக்கன்
பிரவின்ஸ்கா
எல்லோருக்கும் நன்றி!!
என்னையும் மிகவும் வசீகரித்த விளம்பரம்... எதனையும் நேரடியாக சொல்லாமல்.. இப்படி மறைமுகமாக சொல்வது மிகவும் சுவார்சியமாகவே இருக்கும்.. இங்கும் இப்படியான பல அருமையான விளம்பரங்கள் அசத்துகின்றன.. (பொதுவாக எல்லாம் மறைமுகமாக ஒளிந்திருக்கும் செய்திகளே!)
பின்நவீனத்துவம் என்று சொல்லுவதை விட indirect reference என்று சொல்லலாம். விளம்பரங்கள் அப்படித்தான் indirect reference இருக்கும்.