கடவுளைக் கொல்லுதல்



உதிர்தலில் வாடாத மரங்களின்
பெருமூச்சைக் கடந்து செல்லும்
நதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்

ஒரு பூனையின் சாதுர்யமாக
கடவுளின் இல்லத்திற்குள் நுழைந்து
அவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன்

அவரின் பாதங்களில்
பிரார்த்தனைச் சீட்டுக்கள் விழுகின்றன
ஒவ்வொரு சீட்டினுள்ளும்
கடவுளின் உஷ்ணத்தில் பிறந்து
சூடு தாளாமல் இறந்து போன
யாரோ ஒருவர் இருக்கிறார்
வெகு சிலர் எனது இருப்பை
கடவுளுக்குத் தெரியப்படுத்த முயலுகிறார்கள்
அவர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறார்

என் கோணிப்பை நிறைத்திருக்கும்
விஷத்திலிருந்து இரு சொட்டுக்களை
அவரது வாயில் ஊற்றுகிறேன்
அவை வழுக்கிச் சென்று
மரண முடிச்சைத் தேடுகின்றன

கடவுள் திமிருகிறார்
கண்கள் பிதுங்குகின்றன
சிறிது நேரம் மனிதர்கள் பிறப்பது நிற்கிறது
மூச்சு அடங்குகிறது
கடவுள் இறந்து போகிறார்

கடவுளின் இல்லம் விட்டு நகர்கையில்
எனது வாயிலிருந்து இருபற்கள்
நீட்டி முளைத்து நிற்கின்றன
ஒரு பிசாசின் உருவமாக

Comments

Unknown said…
ஆதவா நல்லாயிருக்கு. படம் சூப்பர்.
//கடவுளின் இல்லம் விட்டு நகர்கையில்
எனது வாயிலிருந்து இருபற்கள்
நீட்டி முளைத்து நிற்கின்றன
ஒரு பிசாசின் உருவமாக//

இதன் விளக்கம்தான் கொஞ்சம் ஏற்கொள்ளமுடியவில்லை...

மொத்தத்தில் நன்றாக இருக்கு ஆதவா..
உமா said…
//உதிர்தலில் வாடாத மரங்களின்
பெருமூச்சைக் கடந்து செல்லும்
நதியின் சலனமாக கடவுள் //

அருமையா இருக்கு.

அருமையான வார்த்தையாடல் , கொஞ்சம் பயமுறுத்துகிறது என்னை.
வெகு நாட்களாக எதிர்பார்த்து இருந்த கவிதை.. அடிக்கடி இது பற்றி என்னிடம் சொல்லி இருக்கீங்க.. கடவுள் பற்றிய உங்க கருத்து கவிதையின் முடிவில்.. நல்லா இருக்கு நண்பா..
ஆகா, இத படிச்சப்புறம் ,இன்னைக்கு ஏண்டா பதிவு போட்டோம் னுஆயிடுச்சு., உங்கள் வரிகள் நன்கு ஆழமாக உள்ளன., நம்மளையும் படிச்சி கருத்து சொல்லுங்க.,
கடவுள் பற்றிய உங்கள் பார்வை என்னோடு ஒத்துப்போகவில்லை...

கண் வேறென்றால் பார்வையும் வேறுதானே...

உங்கள் தமிழ் ரசிக்க வைத்தது ...
அடுத்தவர்களிடம் கொண்டு போய் சேர்க்க ஓட்டும் போட்டாச்சு...
தலைப்பு வித்தியாசம்...பின் நவீன எழுத்துக்களில் கற்பனை மின்னுகிறது ஆதவன்...

முதல் பத்தியில் கடவுள் உறங்குவதை சொன்ன விதம் அருமை...

ஆனால், கடவுள் என்பவர் பசி உறக்கம் இச்சை இன்னபிற மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்க வேண்டும் இல்லையா ஆதவன்...?
அடுத்து வரும் அனைத்தும் கற்பனைச் சரம்
முடித்திருக்கும் விதம் கற்பனைகளின் உச்சம்...

கவிதையென்று மட்டும் பார்த்தால் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அருமையான கவிதை ஆதவன்...

நேரம் கிடைக்கும் போது நண்பர்
சரவண குமார் எழுதிய
இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்

http://msaravanakumar.blogspot.com/2009/02/blog-post_12.html
//அவரின் பாதங்களில்
பிரார்த்தனைச் சீட்டுக்கள் விழுகின்றன//

கற்பனையின் உச்சம்.

//என் கோணிப்பை நிறைத்திருக்கும்
விஷத்திலிருந்து இரு சொட்டுக்களை
அவரது வாயில் ஊற்றுகிறேன்
//

சிந்தனைக்கு அப்பாற்பட்ட உள்ளுறை பொருள்.

//கடவுள் திமிருகிறார்
கண்கள் பிதுங்குகின்றன
சிறிது நேரம் மனிதர்கள் பிறப்பது நிற்கிறது//

ஆதவன் டச்.

//கடவுளின் இல்லம் விட்டு நகர்கையில்
எனது வாயிலிருந்து இருபற்கள்
நீட்டி முளைத்து நிற்கின்றன
ஒரு பிசாசின் உருவமாக//

ஒரு முழு பின்நவீனத்துவ கவிதைக்கான அனைத்து சாராம்சங்களும்
நிறைந்து முழுமையடைந்து விட்டது.

வெகுநாட்க‌ளுக்கு பிற‌கு மீண்டும் ஆத‌வ‌ன்.
நல்லாருக்கு அண்ணா...
படம் கலக்கல்...
:)))
நல்லா இருக்கு ஆதவா.
பலமுறை படித்தேன். வித்தியாசமான கற்பனை.
வார்த்தைப் பின்னலுடன் குறியீடாக கவிதை சொல்ல வரும் கருத்து எனக்கு உடன்பாடில்லை.

எனது புரிதலுக்கு உட்பட்டது இந்த விமர்சனம்.
மற்றபடி கவிதையும், மொழியும் செல்லும் விதம் அபாரம்.

நான் ‘கடவுளைச் சுமந்தவன்‘.
நீங்கள் ‘கடவுளைக் கொள்ளுதல்‘

என்ன ஒரு தற்செயல் ஒற்றுமை.

வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
படித்தேன் ரசித்தேன்...
முதல் மூன்று வரிகளைப் படிக்க படிக்க இன்பம். அதன் மொழியும்( கவிதை முழுக்கவே மொழி, பிரமாதம்)இசைக்கு இசைந்த ரிதமும் காரணம். நல்லாயிருக்குது ஆதவா.
//உதிர்தலில் வாடாத மரங்களின்
பெருமூச்சைக் கடந்து செல்லும்
நதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்//

-:)

நா கேவலமா திட்டி, செருப்பால மட்டும் தான் அடிச்சேன்,,, நீ கொன்னேபுட்டியே...


http://paarvaigalpalavitham.blogspot.com/2009/03/blog-post_31.html
கடவுளைப் படைத்ததும் மனிதன்.
அழிப்பதும் மனிதன்.

பற்கள் முளைக்காவிட்டாலும், கவிதை அருமை நண்பரே!
கடவுளைப் படைத்ததும் மனிதன்.
அழிப்பதும் மனிதன்.

பற்கள் முளைக்காவிட்டாலும், கவிதை அருமை நண்பரே!
ஏகப்பட்ட படிமங்கள். யோசித்து பார்த்தால், நிறைய அர்த்தங்கள் கிடக்கின்றன. உரசிய கந்தகத்திலிருந்து பற்றிக்கொள்ளும் நெருப்பு போல தனது இருப்பினை எங்கெங்கும் பரவிச்செல்கிறது உங்கள் வார்த்தைகள். குறிப்பாக நீரின் சலனமும், முளைக்கும் பற்களும். வாழ்த்துக்கள் சார்!

படம் வெகு அருமை. எதில் வரைந்தது?
மிக அருமையானக் கவிதை இது.
வார்த்தைகளின் படிமங்கள் ஆழமாகச் செல்லும். என்னை மிகவும் ஈர்த்துச் சென்றக் கவிதை. எப்போது இக்கவிதையை பதிவிடுவீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன்!!

பிரமாதமான கவிதை ஆதவா.
thamizhparavai said…
வார்த்தைகள் நல்லாயிருக்கு..
கவிதைக்குள் என்னால் போகமுடியவில்லை.நேரமிருந்தால் ஒரு மெயில் தட்டுகிறீர்களா இம்முகவரிக்கு....
thamizhparavai@gmail.com
ஆதவா said…
மிக்க நன்றிங்க ரவிஷங்கர்..... படம் மட்டும்தான் நல்லாயிருக்கா??

நன்றிங்க ஞானசேகரன்... பார்வைகள் பலவிதம்... அதனால சிலருக்கு ஏற்க கஷ்டமாகவும், சிலருக்கு ஈஸியாகவும் இருக்கும்..

மிக்க நன்றிங்க உமா.. பயமில்லாமல் அடுத்த கவிதை தர முயற்சிக்கிறேன்.

நன்றிங்க கார்த்திகைப் பாண்டியன்... கடவுள் எனும் ஒரு பிம்பம் பற்றிய விமர்சனம்தான் அது!! எப்பவுமே நான் அதிலிருந்து விலகிக்க மாட்டேன்.

வாங்க தேனீ-சுந்தர்.. மிக்க நன்றி.. உங்களை படிக்கிறேன்.

நன்றிங்க கடைக்குட்டி.. உங்கள் கருத்து ஏற்கக்கூடியது..
ஆதவா said…
நன்றீங்க புதியவன். கடவுள் எனும் பிம்பத்தைக் குறித்த கவிதைய் அது.. ஒருசிலருக்கு அந்த பிம்பம் நிஜமாகலாம்.. என்னைப் போன்றவருக்கு அது போலியாகவே இன்னும் இருக்கிறது.

சரவணகுமார் எழுதிய கவிதையை முன்பே படித்திருக்கிறேன்.. கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில்தான் இக்கவிதையையும் எழுதினேன்.

நன்றிங்க அ.மு.செய்யது. கவிதை என்ன வகை என்பது தெரியாது. ஆனால் புரியும்படி இருந்ததில் மிகுந்த சந்தோஷம்.. மிக்க நன்றிங்க.

நன்றிங்க வழிப்போக்கன், மண்குதிரை, நாகேந்திர பாரதி, அன்புமணி
ஆதவா said…
நன்றிங்க அகநாழிகை... கருத்து மாறுபாடு எல்லோருக்கும் இருப்பதுதானே.. நான் ஏற்றுக் கொள்கிறேன். நானும் கவனிக்கவில்லை, அந்த தற்செயல் ஒற்றுமை

நன்றீங்க வேத்தியன்... கவிதையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?

நன்றிங்க ச.முத்துவேல் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதே இக்கவிதையின் தரம் நன்கு இருப்பதைக் காட்டுகிறது.

பித்தன் சார். கொல்வதைக் காட்டிலும் திட்டி கேவலமாகப் பேசுவதே ரணம் மிகுந்தது... மிக்க நன்றிங்க சார்.

மிக்க நன்றிங்க மாதவராஜ்,
நன்றிங்க வெங்கிராஜா.. உங்கள் பின்னூட்டம் ரசிக்க வைக்கிறது. படம் என்னுடையதல்ல. இணணயத்தில் கிடைத்தது.

நன்றிங்க முத்துராமலிங்கம். நவீன விருட்சத்தில் வெளியாகியிருந்ததைப் படித்திருப்பீர்கல் என்று நினைக்கிறேன்.. மிக்க நன்றிங்க.

நன்றிங்க தமிழ்பறவவ. உங்களுக்கு நான் மடலிடுகிறேன்.
Unknown said…
அண்ணே!

குடந்தை அன்புமணி வலையும்,முத்துராமலிங்க வலையும்
ஒரு வாரமா திறக்க முடியல. மால்வேர்ன்னு ஒரு
வைரஸ் அறிவிப்பு வருதுண்ணே.

அவங்ககிட்ட சொல்லுங்களேன்!

உங்களால் முடிகிறதா?
Unknown said…
நன்றி ஆதவா.(மால்வேர் வைரஸ் பற்றிய பின்னூட்டம்)
ஆதவா... வார்த்தை பிரயோகம், பின் நவீனத்துவம், அழகான(?) பயமுறுத்தும் ஓவியம் எல்லாம் சரி. ஆனால் கடவுளை பற்றிய தங்கள் கருத்து எனக்கு புரியவில்லை. உண்மையாகவே இத்தகு கவிதைகள் எனக்கு புரிவதேயில்லை. அத்தனை அறிவில்லை... விளக்குங்களேன் ப்ளீஸ்!
ஆதவா...

வித்தியாசமான சிந்தனை

மக்களைப்படைத்த கடவுளையே அவர்கள் படும் துன்பம் தாங்காமள் விஷம்கொடுத்து கொல்லும் உங்க கற்பனா சக்தி அற்புதம்

//கடவுளின் உஷ்ணத்தில் பிறந்து
சூடு தாளாமல் இறந்து போன
யாரோ ஒருவர் இருக்கிறார்
//

அவரவர் செய்த பாவத்தை அழகா சொல்லிருக்கீங்க (எனக்கு தெரிந்தவரை இதுதான், உள்ளர்த்தம் என்னவோ ஆதவனுக்கே வெளிச்சம்)

//அவை வழுக்கிச் சென்று
மரண முடிச்சைத் தேடுகின்றன
//

இது வித்தியாசமான வரி.. பிரமித்தேன்..

//வாயிலிருந்து இருபற்கள்
நீட்டி முளைத்து நிற்கின்றன
ஒரு பிசாசின் உருவமாக
//

கடவுளையே கொல்லும் எம‌ன்...
வித்தியாச‌மான க‌ற்ப‌னை.


ப‌டித்தேன்
ர‌சித்தேன்
விய‌ந்தேன்...
Anonymous said…
கற்பனைக்கு எல்லையில்லை அறிவோம்....ஆனால் அது கடவுளையும் விட்டு வைக்கவில்லை அறிந்தோம்....வார்த்தை விளையாட்டால் வரையப்பட்ட ஓவியம்....இந்த வகையில் படைப்புகள் தொடர்ந்தால் நாளை இவைகள் காவியம்.....அறுசுவைக்கு மேல் தான் சொற்ச்சுவை...உணர்ந்தேன்....
வாழ்த்துக்கள்..ஆதவனே....
sakthi said…
கடவுள் திமிருகிறார்
கண்கள் பிதுங்குகின்றன
சிறிது நேரம் மனிதர்கள் பிறப்பது நிற்கிறது
மூச்சு அடங்குகிறது
கடவுள் இறந்து போகிறார்

அருமையா இருக்கு ஆதவா

வாழ்த்துக்கள்.
எனக்கு கவிதை மிகவும் பிடித்திருக்கிறது ஆதவா.
அமுதா said…
அருமையான சொல்லாடல். வாழ்த்துகள்
ஆதவா said…
<<<<< அனைவருக்கும் என் நன்றி!!! >>>>>