சாளரங்களினிடையே ஒரு காதல்
மிதமான பனியில் காலைப்பொழுதில் தென்னங் கீற்றின் சலசலப்பினால் ஏற்படும் காற்று, சாளரங்கள் வழியே உள்நுழைய, சுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித எண்ணங்கள் தோன்றுவதை நம்மால் ஒத்துக் கொள்ளாமல் இருக்கமுடியாது. அத்தனை சுகம், அத்தனை சுவாரசியம் அதில் அடங்கியிருக்கிறது.,, சாளரங்களின் துளை வழியே ஒவ்வொரு காதலும் தன் கணைகளை வீசிக் கொண்டு இருக்கிறது. அது பனி ஊடுறுவி நிலம் துளைப்பது போல சாளரங்களடிக் காதலரிடையே கலந்து உறவாடுகிறது,
ஒரு மழைக்காலத்தில் உருவானதுதான் செல்வாவின் காதல், என் வீட்டுக்கு எதிரே உள்ள ஒரு மாடியில் மேற்பகுதியில் வாடகைக்கு இருந்தவர். தென் தமிழகத்துக் காரர். அவரது பேச்சு, வட்டாரத்திச் சுண்டி இழுத்து வருவதால் அவருடன் பேசுவதே தனி சுகமாக இருக்கும். வேலைக்காக திருப்பூர் வந்தவர், தனியே தங்கியிருந்தார். அவரது அறை புத்தகங்களால் ஆனது, ஒவ்வொரு செங்கற்களுக்கிடையே ஒரு புத்தகம் தன்னை நெருக்கிக் கொண்டு நின்றிருக்கும், அப்படியொரு புத்தகப் பிரியர். எனக்கு ஓய்வு நேரம் அல்லது வேலையில்லாத பொழுதுகளை அவரது மாடியில்தான் போக்குவேன். புத்தகங்கள் இரைந்து கிடப்பதால், அவர் தற்சமயம் என்ன புத்தகம் படிக்கிறார் என்ற குழப்பம் எனக்கு நேரிடும். கிழக்கு திசையில் இருக்கும் சாளரம் தான் அவரது காதலுக்கான அச்சாணியாக இருந்தது. அது எந்நேரம் திறந்த நிலையிலேயே இருக்கும். அவர் அதை மூடி எந்நாளும் நான் பார்த்ததில்லை. ஐந்தாறு கம்பிகள் செறுகப்பட்டு கண்ணாடி போர்த்தியிருக்கும் அச்சாளரம் அப்படியொன்றும் அலங்காரத்திற்கு உகந்ததாக இல்லை. எப்பொழுதும் கண்ணாடிகள் வெளிப்புறம் திறக்கப்பட்டு இருக்கும்.
சாளரத்தினடி உள்ள மேசையில் முட்டியை ஊன்றியவாறே அவர் புத்தகத்தில் தன்னை இழுத்து நிறைத்திருப்பார். அவரது கண்கள் புத்தகத்தினடி செல்கிறதா அல்லது அந்த சாளரத்தில் அமர்ந்திருக்கிறதா என்ற சந்தேகம் எனக்குள் வலுக்கும். மேகம் இருண்டு மழை பெய்தால் சாரல் தெரிக்காதபடி சாளரத்தின் வெளியே சிமெண்ட் கூரை வேய்ந்திருந்தார்கள். வலுத்து மழைபெய்தால் மட்டுமே சாளரக்கண்ணாடிகள் நீர் ஒழுக்கிக் கொண்டு அழும்.. கூடவே செல்வாவும் அழுவார். அவரது அந்த மழைச் சோகம் என்னை நெடுநாட்கள் உறுத்திக் கொண்டிருந்ததன் விளைவுதான் அவர் சாளரங்கள் வழி காதலை நுழைத்து காதல் பெற்றார் என்ற விபரம் அறிந்து கொள்ள ஏதுவாயிற்று.
சாளரங்களின் வழி உள்நுழையும் காற்றினுள் எதிர் வீட்டு காதலியின் காதல் உள்ளடங்கி நெளிந்து கொண்டிருக்கும் என்பதை அறிந்து கொண்ட பிறகு, செல்வா, சாளரத்தினடி அமரும்பொழுதெல்லாம் நான் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்.. அவர் காற்றை சுவாசிக்கும் பொழுதெல்லாம் அவரது ரோமங்கள் எழுந்தாடுவதை பலநாட்கள் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள், எதிரெதிர் சாளரங்கள் உள்ள வீடுகளில், காதல் முளைத்தால், அருகருகே மேசை இருக்கும், மேசையின் மீதோ, அல்லது சாளரத்தின் வெளிப்புறத்திலோ ஒரு பூந்தொட்டியும் இருக்கலாம். செல்வா சற்று வித்தியாசமான பிறவி, அவர் தனக்குப் பிடித்தமான புத்தகங்களை அடுக்கி, அதன் மேல் கண்ணாடிக் குடுவையொன்றில் செயற்கை ரோஜா செடியை நட்டு வைத்திருந்தார். அச்செடியின் மேலே ஆங்கிலத்தில் காதல் என்று எழுதியிருந்தது. மேற்புறத்திலிருந்து குண்டு ஒளிஉமிழ் தொங்கிக் கொண்டு இரவு நேரத்தில் மஞ்சள் நிற வெளிச்சத்தை கக்குவதற்காக காத்திருக்கும். செல்வாவின் அறைக்கு அவ்வளவாக இரவில் சென்றது கிடையாது.
செல்வாவின் காதலியை இதுவரையிலும் நான் பார்த்ததில்லை. பார்க்கவேண்டும் என்று முயற்சித்ததுமில்லை, அல்லது அவர் எனக்குக் காண்பிக்கவேண்டும் என்ற ஆர்வப்பட்டதுமில்லை. அவர் தன்னை புத்தகத்தில் நுழைக்கும் பொழுது, நான் பேசுவதையோ, கேட்பதையோ அவ்வளவாக உணரமாட்டார். நானாக சென்று ஏதேனும் தமிழ் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் எனது வாசிப்பின் வட்டம் திகில் நாவல்கள், ராணி, குமுதம், விகடன் என்று சுற்றிக் கொண்டிருந்தது. செல்வாவோ, நன்கு படித்திருந்தமையால் ஆங்கில புத்தகங்களை அதிகம் நிறைத்திருந்தார். எனக்குப் பலமுறை அவரிடம் கேட்கவேண்டும் என்ற தோணுதல் இருந்தாலும் அவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தினுள் என்னை நுழைப்பது அவ்வளவு சரியா என்ற நோக்கில் எந்த கேள்வியும் கேட்காமலேயே நகர்ந்து கொள்வேன்.
நாட்கள் பிரிந்து சென்றன. நாங்கள் வீட்டைக் வெறுமையாக்கி, புதுமனைக்குப் புகுந்தோம். செல்வாவின் சாளரத்தை இறுதியாக எட்டிப் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவரது மாடிக்குச் சென்றேன். வழமைபோல எனக்கு வரவேற்பு இருந்தது.. செல்வா சமைத்துக் கொண்டிருந்தார். அவரது சாளரக் கதவு மூடியிருந்தது. சாளரக் கம்பிகளின் வழியே காதல் வெளிப்புறச் சுவரில் மோதி விழுந்திருக்கலாம். அவரிடம், "ஏன் இன்னைக்கு ஜன்னல் மூடியிருக்கு" என்றேன். அவர் சிரித்தார். அந்த சிரிப்பில் பல உள்ளர்த்தங்கள் இருந்தன. அவரது காதல் தோல்வியில் முடிந்திருக்கலாம். அல்லது அது ஒருபக்க காதலாக மலர்ந்து மடிந்திருக்கலாம் என்ற எண்ணம் என்னுள் உதித்தது. என் அம்மா கீழிருந்து அழைத்தமையால் பிறிதொருநாள் பேசிக் கொள்ளலாம் என்ற உறுதியில் அவரிடம் விடைபெற்றேன்.
செல்வாவை அன்றுதான் கடைசியாகப் பார்த்தது என்று சொல்லமுடியாது. ஒரு புழுதிக்காலத்தில் நன்கு சவரம் செய்யப்பட்ட முகத்தோடு அவரைப் ஒருநாள் பார்க்க நேர்ந்தது. என்னை அடையாளம் காணமுடியாதவராகவோ, அல்லது மறந்து போனவராகவோ நகர்ந்து சென்றார். அவரின் அந்நடத்தை எனக்கு வியப்பைக் காட்டினாலும், நானாகவே சென்று அவரிடம் குசலம் விசாரித்தேன்.. அவர் தயங்கினாலும் அதைப் புரிந்து கொள்ள முடியாதவனாக தேநீர் கடைக்கு அழைத்துச் சென்றேன். அவரின் கால்கள் இழுத்து வரப்பட்டது போன்று என் மந்திர வார்த்தைகளுக்கு மயங்கி நடந்து வந்தது. ஆவலாக, அவரிடம் சாளரக் காதல் பற்றி கேட்டேன். முன்னொருமுறை கேட்டதைப் போன்றே புன்னகை ஒன்றை உதிர்த்தார். 'சும்மா சொல்லுங்க' என்று ஆர்வத்தில் உசுப்பினேன்.... அவர் புன்னகை ஒன்றையே பதிலாக சொல்லிவிட்டு என்னை விட்டு நீங்கினார். அவர் அடுத்த நாள் ஊருக்குப் போவதாகச் சொன்னார்.
வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதே இல்லை. நானும் செல்வாவின் எதிர் சாளரத்து வீட்டில் யார் இருந்திருப்பார்கள் என்று இதுநாள் வரை நான் ஏன் யோசிக்கவில்லை? எனது மட்டிய புத்தி செல்வாவை இறுதியாகச் சந்தித்தபொழுதும் நினைக்கவுமில்லை.. நான் பெருத்த ஏமாற்றத்தோடு புதுவீட்டுக்குத் திரும்பினேன்..
எனது புதுமனை மற்றெம்மனையைக் காட்டிலும் வித்தியாசமானது. மேற்புறத்தில் மாடி இருந்ததால் வெயில்கால ஆரம்பங்களில் சித்திரைக் குளிரை அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியது. என் மஞ்சத்தின் அருகே எவருமில்லை, வானம் மட்டுமே என்னுடன் பேசத் தயாராக தன்னை மினுக்கிக் கொண்டிருந்தது. சாளரங்கள் உண்டாக்கிய சுவாரசியம் இன்னும் தீராத நிலையில், நட்சத்திரங்கள் சாளரத் துளைகளாக மாறின. வானம் சாளரமானது. சட்டென்று கண்மூடினேன். ஒரு நொடியில் செல்வாவும் முகம் தெரியாத அவரின் காதலியும் சாளரச் சட்டத்தினுள் வந்து போனார்கள்.
Comments
பிறகு வருகிறேன்.
நல்ல தமிழ்
"ஐரோப்பாவில் கல்யாணத் தோல்விகள் அதிகமாம்
நம் ஊரில் தான் காதல் தோல்விகள் அதிகம்"
செல்வாவின் சாளரத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு சென்று விட்டீர்கள்.
மனம் கனக்கிறது.
ரசித்தேன்..
ஆயிரம் அர்த்தங்கள்..
//மேற்புறத்திலிருந்து குண்டு ஒளிஉமிழ் தொங்கிக் கொண்டு இரவு நேரத்தில் மஞ்சள் நிற வெளிச்சத்தை கக்குவதற்காக காத்திருக்கும்.//
//குண்டு ஒளிஉமிழ்//
அழகான சொற்பதம் பயன் படுத்தியிருக்கிறீர்கள்...
ஹா...மிகவும் ரசித்தேன்...ஆனால்...இதை வாசிக்கும் போது ஏதோ ஒரு சோகம் தொற்றிக்கொள்கிறது...
முடித்திருக்கும் விதம் ஒரு கனமான வெறுமையை சொல்கிறது...எழுத்து நடை அருமை ஆதவன்...
கதை என்று உரைநடையில் எழுதினாலும் உங்களுக்குள் இருக்கும் கவிஞன் முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்து விடுகிறான் நண்பா..
அருமை.. இதுபோல் எத்தனையோ தொலைந்து போன காதல்களை சாளரங்கள் மட்டுமே அறியும்.. கதையின் முடிவில் வெளிப்படா மென்சோகம் நெஞ்சைத் தொட்டது நண்பா..
பெண்களைப் பெத்தவங்களே... நோட் பண்ணுங்கப்பா....
உண்மைதான்.
***********************
இரண்டு நாளுக்கு முன்னதாக பதிவிட்டதாக இருக்கி்ற்தே்(!?) என்ன நடக்குது!
அசத்தல்
///
இது கலக்கல்
வாசிக்க நன்றாக உள்ளது...
:-)
குழறி அழும் சத்தம் கேட்கும் ஆனால் கேட்காது.உணர்வோடு எழுதியிருக்கிறீர்கள்.
செல்வாவினால் உங்கள் பாதிப்பு.
சாளரம் இல்லா இடத்தில் உங்கள் மஞ்சம்.என்றாலும் கவனம்.
தேவதைகளுக்கு சாளரம் தேவையே இல்லை.
சுவாசிக்கும் ஒவ்வொறுக்கும் எழும் எண்ணங்கள் ...
ஆஹா! இந்த வார்த்தைகளை வாசிக்கும் போதே நேசத்துடம் சுவாசத்தின் வாசம் வீசுதே!
திகதி மாறியது எப்படி என்று தெரியவில்லை!!!! ப்ளாக்கர் என்னை ஏமாற்றிவிட்டதா??? ஹி ஹி...
அனைவருக்கும் நன்றி நண்பர்களே!
ஹி ஹி ஹி
/கணைகளை,புழுதிக்காலத்தில்,வலுக்கும்,
ரோமங்கள் ,குசலம் //
பொய்தானே?
//அல்லது அவர் எனக்குக் காண்பிக்கவேண்டும் என்ற ஆர்வப்பட்டதுமில்லை//
ஒருவேளை உங்களைப்பற்றி நல்லா தெரிந்து வைத்திருப்பாரோ!!
ஹி ஹி ஹி
இது பல நாட்களுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவம்.. எனது அனுபவம்.!!!!\\
அட அப்படியா!
அருமை ஆதவா!
அருமை ஆதவா!
ஆதவா சில கேள்விகளுக்கு விடைகளுமில்லை...சில விடைகளுக்கு இவ் உலகில் கேள்விகளுமில்லை...
கனத்த பதிவு.....சோகம் கலந்த சொல்லாடல்??/
உங்கள் மொழில் நடையில் தமிழின் புதிய பரிமாணத்தை பார்க்கமுடிகிறது.
வாழ்த்துக்கள் !!!