நாகேஷ்- ஒரு சகாப்தம்.




ஆயிரம் விளக்குகள் ஏந்திய தாமரை... சுடர்விட்டு இறைநிலை எய்தியது....

நாகேஷ்....

இந்த பெயரைக் கேட்டாலே பலருக்கு பற்கள் தெரியும்.. அத்தனை குளுமை, அத்தனை இனிமை..

குண்டுராவ் என்றால் எந்தத் தமிழருக்கும் தெரியவாய்ப்பில்லை.. பெயரில் மட்டுமே குண்டு என்ற வைத்துக் கொண்டு ஒல்லியான உருவத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர். ஆயிரம் படங்களைத் தாண்டிய அபூர்வ சிகாமணி, இவரைக் கண்டால் மட்டுமல்ல, பெயரைக் கேட்டாலே குபீரென்று சிரிக்கும் பல நகைச்சுவை விரும்பிகளில் நானும் ஒருவன்.

ஒருமுறை இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் ஒரு பேட்டியில், " ஒரு காட்சி நாகேஷால் நடிக்க வேண்டும் என்றால், அது ஒரு ஷாட்டோடே முடிந்துவிடும் " என்று பெருமையாக சொல்லியிருக்கிறார்... அதைப் போன்றே, பாலச்சந்தருடன் காரில் பயணிக்கும் பொழுதெல்லாம் மிக வேகமாகச் செல்லுவாராம். ஏன் வேகமாகச் செல்லுகிறீர்கள் என்று கேட்டதற்கு நாகேஷ், "நீ பயப்படாதே, நான் இந்தியாவிலேயே ஒரு சிறந்த இயக்குனரை வெச்சுத்தான் ஓட்டறேன்.. வாழ்க்கையோட அர்த்தத்தை நல்லா தெரிஞ்சு வெச்சுருக்கேன்" என்றாராம்.. இவர்கள் இருவரும் நடிப்புலகில் முத்திரை பதிக்காததற்கு முன்பிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது..

நீங்கள் திருவிளையாடல் பார்த்திருப்பீர்கள்.. பெரும்பாலும் நாகேஷ் படம் முழுக்க வருவார். ஆனால் இப்படத்தில் இவருக்கென்று தனிப்பகுதி உண்டு.. தருமி எனும் வேடம். சிவனாக நடித்த சிவாஜியின் நடிப்பையே ஓரம் கட்டிவிடும் அளவுக்கு அப்படியொரு நடிப்பு.. எந்த நடிகர்திலகங்களும் எப்படிவேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் மக்களிடம் சிரிப்பை வரவழைக்கும் உத்தி யாரிடம் உண்டோ, அவரே சிறந்த நடிகர் என்று சொல்லலாம்.. தருமி கேள்வி கேட்கும் காட்சி, ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதும் பலபேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதில் அவர் கேட்டுக்கொண்டே முதுகை வளைத்து செல்வார் பாருங்கள்..... இனியொரு நாகேஷ் பிறந்துதான் வரவேண்டும்..

காதலிக்க நேரமில்லை, யில் பாலய்யாவோடு இணைந்து நடிக்கும் அந்த திகில் காட்சிகள்... ஒருமுறை இக்காட்சியைக் கண்டு கொண்டே தண்ணீர் குடித்த எனக்கு, குபீர் நகைச்சுவையால் பொறை ஏறி மூக்கை அடைத்துக் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. அப்படத்தில் அவர் ஒரு புகைப்படம் கூட எடுக்கமாட்டார்.....

ஒரு ஸ்வீட்டஸ்ட் வில்லன்.... தில்லானா மோகனாம்பாளைச் சொல்லலாம்.. அந்த பாகவதர் கெட்டப், ரசிக்க வைக்கும் வில்லத்தனம்.... வைத்தி என்று பெயரை வைத்துக் கொண்டு மாமா வேலை பார்க்கும் குறுவில்லன்.. ஏன், அபூர்வ சகோதரர்களில் அவர் தன் வில்லத்தனமான நடிப்பை அப்பட்டமாகக் காண்பிக்கவில்லையா....

வயது எழுபதைத் தாண்டியாயிற்று, இனி என்ன நகைச்சுவை உணர்வைக் கிளப்ப இந்த கிழவனால் முடியும் என்று நினைக்கலாம். ஆனால், கமலும் நாகேஷும் இணைந்த கலவை இருக்கிறதே, அது இனிவரும் நகைச்சுவைக் கலைஞர்களால் முடியுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.. பஞ்சதந்திரத்தில் அவர் நடித்த காட்சிகள் அத்தனையும், டாப்..... அந்த கிழட்டு முகத்தில் தோன்றும் சிரிப்பே, அமைதி குடிகொண்டிருக்கும் கோவிலைப் போன்று இருக்கிறதா இல்லையா...

செய்கை காமெடி என்று சொல்வார்கள், அதாவது ஸ்லாப்ஸ்டிக் (Slapstick) அந்தவகை காமெடியில் இவரை அடித்துக் கொள்ள இந்தியாவிலேயே ஆளில்லை. மகளிர் மட்டும் எனும் படத்தில் பிணமாகவே நடித்திருப்பார்... என்னைக் கேட்டால், அப்படியொரு காட்சி தமிழ் திரைப்பட உலகில் வேறு எவரும் நடித்திராத நடிக்க முடியாத காட்சி..

சரி, நாகேஷ் என்ன, நகைச்சுவையாளர் மட்டும்தானா?

ரிதம், மின்னலே, அபூர்வராகங்கள், தீபம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம் போன்ற படங்களில் இவரது குணச்சித்திர நடிப்பையும் காணலாம்.. என் நாகேஷ் நடித்த பழைய படங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் சொல்லுவார், "இவருக்கு மட்டும் கொஞ்சம் நல்ல முகவெட்டு இருந்திருந்தா, சிவாஜியே காணாம போயிருப்பாரு" என்று.. உண்மைதான்.. சிவாஜி போன்ற ஒரு நடிப்புத் திறமைமிக்க கலைஞனோடு நாகேஷை ஒப்பிடுவதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் அருமையாக நடனமும் ஆடுவார்.

சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், நவக்கிரகம், அனுபவி ராஜா அனுபவி, நீர்க்குமிழி, சோப்பு சீப்பு கண்ணாடி, போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தன் திறமையை நிரூபித்தவர்... இதில் சுவாரசியம் என்னவென்றால், அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்... அதிலும், சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் போன்றவற்றில் தோல்வியைத் தாங்காமல் துடிக்கும் நடிப்பை முகத்திலேயே நிறுத்தியிருப்பார்.எதிர்நீச்சலில், தன்மானத்தைக் காப்பாற்றவும், அதேசமயம் வயிற்றை நிரப்பவும் அல்லல்படும் ஒருவனி நிலையை மிகத் துல்லியமாக முகபாவனைகளில் வெளிப்படுத்தியிருப்பார்..

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. ஆனால் அவரது படங்களில் நகைச்சுவை ஏற்படுத்தாத ஒரு படத்தை குறிப்பிட்டு சொல்லுங்கள்..... முடியாது.... அதேபோன்று, நாகேஷைப் போன்ற ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களே இன்று மிகக் குறைவு..

எம்.ஜி.ஆரோடு இணைந்து பல படங்களைச் செய்த சாதனை இவருக்கு உண்டு. வயதான காலத்தில் கமல் இவருக்கு அளித்த வாய்ப்பும் மறக்க முடியாது... கமலின் கடைசி படத்தில் கூட நாகேஷ் இருக்கிறார்...

தன் சொந்த வாழ்வில் பல இன்னல்களைக் கடந்தவர், கலப்புத் திருமணம் செய்த புரட்சியாளர்... சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற வதந்தி பரவியது.. அந்த வதந்தி இன்று உண்மையாகி, அவரின் ரசிகர்களை ஊமையாக்கிவிட்டது...

எப்படி, ஜனவரி 30 தியாகிகளின் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறதோ, அதே போல, ஜனவரி 31 நகைச்சுவையாளர் திருநாளாகக் கொண்டாடப்படவேண்டும்..

Comments

நல்ல பதிவு.. தமிழ் திரையுலகம் ஒரு நல்ல நடிகனை.. மனிதனை... இழந்து விட்டது..
இந்த பதிவுகளை படித்துவிட்டாவது ச்ம்பந்தப்பட்டவர்கள் நாகேஷ்க்கு பத்ம விருதை போஸ்த்மஸ் ஆகவாவது வழங்க வேண்டும்.
சகாதேவன்
geevanathy said…
////ஒரு ஸ்வீட்டஸ்ட் வில்லன்.... தில்லானா மோகனாம்பாளைச் சொல்லலாம்.. அந்த பாகவதர் கெட்டப், ரசிக்க வைக்கும் வில்லத்தனம்.... வைத்தி என்று பெயரை வைத்துக் கொண்டு மாமா வேலை பார்க்கும் குறுவில்லன்.. ////

அருமையான நடிகர் இறுதிவரை தனக்குரிய அங்கிகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் அவர்மனதில் இருந்திருக்குமென்பதுதான் நெருடல்....
Anonymous said…
வாழும்வரை சிரிக்கவைத்தவர்... அழவைத்து சென்றிருக்கிறார்
அமுதா said…
நல்ல பதிவு