இறுதி நொடியில்....

உலரவைத்த நெருப்பின் வாசனை
ஊடுறுவித் துளைத்து
ஓலங்களின் ஜலங்களால்
ஊசிப் போகிறது நாசி

அற்றை நாளில் அடிபணிந்து
ஒடிந்துபோய் ஓய்ந்து
அற்ற எலும்புகளின் ஓசை
சுவீகாரமாய் கேட்கிறது காது

மடித்து வைத்த உள் நாக்கில்
மரித்துப் போன பொய்மை ரணங்களையும்
அவலக் கிணறுகளையும்
அதட்டி ருசி பார்க்கிறது நாக்கு

அடமானம் வைக்கப்பட்ட
வைராக்கியத்தைத் திரும்பப் பெறாமலே
செத்தொழிகிறது
செதிலடைந்து பாழ்போன கண்கள்

சொல்லப் படாமல் அதக்கிய
அந்தரங்கங்களை நிழலாடிச் சொல்கிறது
கனவின் ரூபத்தில் கோலோச்சும்
மந்தார மனது

கரிசல் மண் துகள்களுக்குள்
தங்கம் தேடிய யாக்கை
பரிதவித்துக் கிடப்பதைக்
கவனிக்கிறது அனுதாபங்கள்

உலகறியும் தவறுகளுக்கு
உடந்தையிறா கால்,கைகளும்
இற்றுப் போய் அமிழ்கிறது
ஊற்றிய இருதுளி மரண திரவத்தில்..

இன்னும் ஓரிரு நிமிடங்கள் தான்
அக்னி தின்று ஏப்பம் விடும்
இவனின் அனைத்து ரகசியங்களையும்.....

Comments