மனதுக்குள் ஒரு விவாகரத்து.


"விஷாக்! இன்னிக்கு நமக்கு டைவர்ஸ். கோர்ட்டுக்கு வந்துடு. ஏதாவது காரணம் சொல்லாத. "

"ம்ம்ம்.. கண்டிப்பா! உன்னோட லட்சியத்துக்கு என்னைக்கும் தடையா இருக்க மாட்டேன்."

போனைத் துண்டித்துவிட்டான் விஷாக்.

இன்று இருவருக்கு விவாகரத்து ஆகப் போகும் தினம்.. மகளிர் தினமும் கூட. கிட்டத்தட்ட இரு வருடங்கள் பிரிந்து
வாழ்கிறார்கள். பிரிந்து வாழ்ந்தாலும் நண்பர்களாக தொடருகிறார்கள். சில சொல்லப்படாத கருத்துக்களுக்கு பிரிந்து
வாழ்கிறார்கள் என்றால் அது இக்காலத்தில் ஆச்சரியமல்ல.

விஷாக் ஒரு கிறிஸ்டியன். இன்ஃபோசிஸ் இல் வேலை செய்யும் மென்பொருள் வல்லுனன். தொழிலுக்கு ஏற்ற மென்மை
கலந்தவன்/ ஜார்ஜ் வெலிங்டன் என்ற உண்மையான பெயரை தன் காதலி லட்சுமிக்காக மாற்றிக்கொண்டான்.
இருப்பினும் அவன் பெயரில் ஒரு கிறிஸ்துவ நெடி அடிக்கும்./
லட்சுமி ஐயர் வீட்டுப் பெண். காதல் திருமணமே சிறந்தது என்று விஷாக்கை மணந்தவள். பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி
மதுரையில் ஒரு சர்சில் நடந்த திருமணம். சென்னையில் வேலை கிடைத்துவிட்டதால் அங்கு சென்று குடும்பம்
தள்ளினார்கள்.

சென்னையில் இருந்தபோதுதான் பிரச்சனையே ஆரம்பம். ஓயாமல் வேலை வேலை என்று சுற்றிக்கொண்டு
இருந்தமையாலும் சகஜமாக பழகும் பெண்களை லட்சுமி விரும்பாததாலும் சற்று இடைவெளி அதிகமானது இருவரும்
உறங்கும் அறையில். காதல் இருவருக்கும் உண்டு. காட்டிக் கொள்ளத்தான் மறுக்கிறார்கள்.

கோர்ட் வீதியில் காரை நிறுத்தி இறங்கினான் விஷாக். கார் ஓட்டுனர் அதனை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்திவிட்டு
ஹாயாக அமர்ந்திருக்கையில் ஒரு டாக்ஸியில் வந்து இறங்கினாள் லட்சுமி.

"லட்சு! பிளீஸ் இன்னிக்கும் ஒன்னும் கெட்டுப் போகல. நல்லா யோசிச்சுப் பாரு. என்ன தப்பு பண்ணினேன்னு விவாகரத்து
வரைக்கும் போயிட்ட?"

"பிளீஸ் லிசன் விஷு! நாம ஃப்ரெண்டாவே இருப்போம். பழைய புராணத்தைப் புரட்டாத. உனக்கு எத்தனை தடவை
சொல்லி இருக்கேன். இந்த மாதிரி திரும்பத் திரும்பக் கேட்காதேன்னு.

"சாரி லட்சு! ஒவ்வொருதடவையும் இதை சொல்லும்போது நீ திரும்பி எனக்கு கிடைக்கமாட்டாயா ன்னு ஒரு ஆசை..
இந்த ரெண்டு வருசத்தில நாம அழுததுதான் மிச்சம்,. "

"யுவா என்ன பண்றான்?"

"அவனுக்கென்ன ஸ்கூலுக்கு போயிட்டு வருவான். நான் அவனை கண்டுக்கறதே இல்ல." ஒரு தாய் பாத்துகற மாதிரி
வருமா?"

" ம்ம் சரிசரி.. நம்ம கேஸ் வரதுக்கு இன்னும் ரெண்டு மணிநேரமாகும். வக்கீல்ட இப்பத்தான் பேசினேன். கன்பாஃர்மா
இன்னிக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்துருவாரு.. "

" லட்சு! கடைசியா சொல்றேன். எல்லாத்துக்கும் யோசனை பண்ணு! "

லட்சுமி முறைத்தாள் அவனைப் பார்த்து. அவளுக்கும் ஏக்கம்தான். முதன்முதலில் விவாகரத்து நோட்டீஸ் விட்டது
இவள்தான் என்றாலும் அந்த காரணத்திற்காகவே பலநாட்கள் அழுதிருக்கிறாள். அதோடு பையன் யுவாவை பிரிந்த
சோகமும் கூட..
யுவா அப்பா செல்லம். அதனாலேயே அப்பாவிடம் இருந்துவிட்டான். இருந்தாலும் அவனுக்குள்ளும் பாசம் எட்டும்போது
அன்னையை அவ்வப்போது பார்ப்பான்.

"என்னங்க லட்சுமி மேடம்! இன்னிக்கு குளோஸ் பண்ணிடலாமே!" வக்கீல் தாமோதரன் இடைச்செருகலாக வந்தார்.

" சார்! இன்னிக்கு முடிச்சுடுங்க." லட்சுமி

" என்ன சார்! நீங்க பதில் சொல்ல மாட்டேங்குரீங்க? ரெண்டு பேரும் நோட்டீஸ் அனுப்பி கண்டபடி பேசிக்குவீங்கன்னு
எதிர்பார்த்தா இப்படி அன்யோன்யமாக இருக்கீங்களே!? திரும்பவும் யோசியுங்க மேடம்..."

" தாமோதரன் சார்! ரெண்டு வருஷமா யோசிக்காத ஒன்னை ரெண்டு மணிநேரத்தில யோசிச்சு பிரயோசனமில்லை.. லட்சு
திரும்பவும் எனக்கு கிடைப்பாள்னு நெனச்சேன். ஆனா ..."

"தோ பாருங்க விஷு... ரிலேக்ஸ். எல்லாம் நல்லதுக்கே!

மண் கறைகள் படிந்த அந்த கோர்ட் வளாகத்தில் அவர்கள் பெயர் அழைத்ததும் சென்றனர் இருவரும்.. கூட வக்கீலும்.
நம் எண்ணங்களிலிருந்து எத்தனை தூரம் தள்ளிப் போகிறோம்? பெண்ணின் மனது வலியதுதான். இருந்தாலும் எல்லா
விஷயங்களிலும் இருந்தால் என்னாவது? ஒதுக்கும்போது வலிக்கும் இதயத்தை எடுத்து அழுதிட இருவருக்கும்
துணிவில்லை.. ஆனால் பாழாய் போன மனம் மட்டும் லட்சுமிக்கு திரும்பவும் சேர மறுக்கிறது.

" விஷாக்! நீங்க உங்களோட மனைவியை விட்டு பிரிய விருப்பப்படுறீங்களா? உங்கள் முழு மனசு இதுக்கு ஒத்துக்குதா? "
நீதிபதி கனம் நிறைந்த குரலில் கேட்டார்.

" யெஸ்! " ஒரே வார்த்தையில் கண்களில் வெளிவந்த நீரை மறைத்து சொன்னான்.

" லட்சுமி! நீங்க?"

" முழுமனசோட சம்மதிக்கிறேன்.. எனக்கும் சரி அவருக்கும் சரி சேர்ந்துவாழ இஷ்டமில்லை.. "

" இருவரின் முழுமனதின் படியும், சுய நினைவோடும் இருவருக்கும் உண்டான பந்தத்தை இந்த நீதிமன்றம் பிரிக்கிறது.
சட்டப்படி இனி இருவரும் தனி மனிதர்கள். இவர்களின் குழந்தை யுவா அவர் தாயின் அரவணைப்பில் 18 வயதுவரையில்
வளர்க்கப் படும் என்றும் கூறி உத்தரவிடுகிறது."

மெல்ல வளாகத்தை விட்டு இருவரும் நீங்குகையில் இருவருக்கும் மனது காணாமல் போயிருந்தது. காதலை விட
பிரிதலில்தான் வலி அதிகம்./ அவளுடைய தொண்டை அடைபட்டுக் கிடந்தது. அவனுக்கு இதயமே நின்று போய்க்
கிடந்தது.

காரில் ஏறுகையில் அவளை அழைத்தான்.

"லட்சு! கங்க்ராட்ஸ்! நீ நெனச்சதை சாதிச்சுட்ட.. எப்படியும் பிரிஞ்சுடுவோம்னு தெரிஞ்சும் உனக்காக மகளிர்
தினத்துக்காக ஒரு ரோஸ் வாங்கிட்டு வந்தேன்.. பிளீஸ் வாங்கிக்கோ!"

அவள் மெளனமாக நின்று கொண்டிருந்தாள். அவன் ரோஸ்கள் அடங்கிய ஒரு பொக்கேயை எடுத்துக் கொடுத்தான்.
கண்ணிர் சிந்த அவள் பெற்றுக்கொண்டாள்.

" பை லட்சு! என்னை காண்டாக்ட் பண்ணு அடிக்கடி. நீ பேசற அந்த வார்த்தைகளுக்காகவே நான் உசுரோட
இருப்பேன். யுவா வை உன்னோட வீட்ல கொண்டு வந்து நைட் விட்டுடுவேன். பை மா! "

இதயங்களின் அழுகை மனதுக்குத் தெரியாமல் போய்விட்டது. இருவரின் மனரத்தினால் இதயங்கள்
உருகிக்கொண்டுதான் இருக்கிறது. லட்சுமி ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அவளால் அடக்க
முடியாத அழுகை அப்போது பீறிட்டு, தன் அறைக்குள் சத்தமாகவே அழுதாள். அவன் கொடுத்த அந்த பொக்கேவை
பிரித்தாள்.. அழகிய ரோஜாக்கள் அடங்கிய கொத்து. நறுமணம் மூக்கைத் துளைத்தது. இடையில் ஒரு கடிதம்
சொறுகப்பட்டிருந்தது.

"அன்பு லட்சுவுக்கு..
உனக்கு நான் எழுதும் கடைசி காதல் கடிதம். என்னோடு வாழ்ந்த நாட்களில் நான் சொர்க்கத்தில்தான் இருந்தேன்
என்பதை நீ அறிவாய்.. நீ எங்கு இருந்தாய் என்பதை நான் அறியேன். காதல் ஒரு வரப்பிரசாதம், அதில் நீ ஒரு சாதம்
என்று அடிக்கடி என்னிடம் சொல்வாய். உண்டு மயங்கிய என்னை நீ ஜீரணக்கோளாறு என்று ஒதுக்கலாமா? உனக்காக
நான் எழுதிய கடிதம் கூட அழுகிறதைப் பார் லட்சு. யுவா உனக்காக பிராத்தனை செய்கிறான். அவனுக்கு அறிவு எட்டும்
காலம் வெகுதூரமில்லை/ குழந்தையை முன்னிட்டாவது நீ கைசேர்வாய் என்று நினைத்தேன். ஆனால் உன் ஆன்மாவில்
நான் மிகப்பெரும் துரோகி ஆகிவிட்டேன்.
யுவாவை உன்னிடம் விட்டபிறகு நான் அமெரிக்கா செல்ல இருக்கிறேன். இங்கிருந்தால் உன் ஞாபகத்தில் நான் இறந்தே
போவேன். எனக்கு வாழ ஆசை உண்டு// இறப்பென்றால் அது உன் மடியில்தான். உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு மகளிர்தினத்தன்று எனக்கு கொடுத்த முத்தம்... உன்னிடமிருந்து நான் வாங்கிய
கடைசி முத்தம். அன்றைய நிகழ்வுகளை நினைத்துப்பார். உன் கணவன் என்றாவது தவறாக நடந்திருக்கமுடியுமா?
பெண்கள் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறீர்கள் என்று பெருமை பொங்க சொன்னவள் நீ!
என்ன சொன்னாலும் உன் பாறை மனது கரையாது. உன் நினைவுகளாலும் உன்னை மட்டுமல்ல நான் நேசித்த இந்த
நாட்டையே பிரியப் போகிறேன்..
யுவாவை நல்லபடியாக படிக்கவை.. அவனும் நல்ல நிலைக்கு வரவேண்டும்.. நீ ஒத்துக்கொள்வாயோ மாட்டாயோ யுவாவின்
பெயரில் பேங்கில் பணம் போட்டிருக்கிறேன். அவன் படிப்பு செலவுக்கு உதவும்..

மற்றது...........

கண்ணீர் தவிர வேறெதுவும் மிச்சமில்லை..

உன் அன்பு முன்னாள் கணவன் (துரதிர்ஸ்டசாலி)

விஷாக்.

கடிதம் படித்ததும் கண்களில் வியர்வைகள் சொட்டியது. ஏற்கனவே அழுதவள் தற்போது இன்னும் அழுதாள்.. கண்களைத்
துடைத்துவிட்டு போன் செய்யப்போனாள்.. அவளின் பார்வை அந்த எழுத்துக்களின் மேலேதான் இருந்தது.
அவள் வயிறு மீண்டும் ஒரு சிசுவுக்காக ஏங்கிய காலம் மீண்டும் வந்துவிட்டது போலும்.. காலியாக்கப்பட்ட இதயம்
மீண்டும் நிரப்பப்படும் என்று நம்பிக்கையில் போன் செய்தாள்.. காலண்டரைப் பார்த்தாள். மார்ச் 8 மகளிர்தினம். மீண்டும்
ஒருமுறை அவனுக்கு முத்தமிட மனம் துடித்தது.

அவன் ஹலோ என்றான். அக்கணமே அவள் உயிர் அவனோடு கலந்துவிட்டது..

Comments