Bi-mong (Bad Dream)
Direction | Kim Ki-duk |
Starring | Joe Odagiri, Lee Na-young |
Year | 2008 |
Language | Korean |
Genre : | Mystery, Romance,Drama |
கனவுகள் இடும் ரகசியங்களின் முடிச்சுக்களை எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை, கனவுகள் மர்மமானவை, அதன் தொடக்கநிலையும் முடிவற்றே முடியும் முடிவுநிலையும் யாராலும் புரிந்து கொள்ள முடியாதவை. சமகால பிண்ணனிகளைப் பின்னி வரும் உறக்கத்தின் விழிப்புநிலைக்கும் விழிப்பின் உறக்கநிலைக்குமான தொடர்பு, எங்கேனும் பேசப்படுகிறதா? இயக்குனர் கிம் கி டுக்கின் Bad Dream கனவுகளின் வெளிப்பாட்டு தொடர்புநிலையையும் அதனால் விளையும் விளைவுகளையும் குறித்து அதற்கேயுரிய மொழியில் பேசுகிறது.
நீங்கள் கனவு காணும் அதே நேரம் அதே கனவு நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்? கனவின் போக்கு என்பது எந்த திசையிலும் திரும்பவியலாதது. உங்களின் வாழ்வுக்கு பாதிப்பு உண்டாக்குவதாக இருந்தால் அல்லது உங்களையே நாளை கொல்வதாக இருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும்? இப்படியொரு சிக்கலான கேள்விக்கு பதிலளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர்.
ஜின் (Jin) இன் கனவுகள் அவனின் முன்னாள் காதலியை எளிதில் மறக்கமுடியாத சம்பவங்களின் முரண்பாடான தொகுப்புகளால் நிறைந்திருக்கிறது. ஆனால் இதில் ரன் (Ran) க்கு நடக்கின்ற சம்பவங்களில் நேரடியான தொடர்பு இருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஜின் தனது பழைய காதலியை காரில் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறான். இடையே திடீரென இன்னொரு கார் வந்துவிட, சுதாரித்து திருப்பி அங்கிருந்து ஜின் மீண்டும் காரில் பின் தொடர்கிறான். ஆனால் ஒரு வயதானவன் இடையில் வர, அவனை இடிக்கும் சமயத்தில் திடுக்கென கனவிலிருந்து வெளியே வருகிறான். அவன் இடித்த இடம், துரத்திய கார் என எல்லாமே அச்சமயங்களில் நிகழ்ந்தவை. போலீஸால் அதை நிகழ்த்தியது ரன் என்று கண்டுபிடிக்கப்பட, தன் கனவுக்கும் நனவுக்கும் தொடர்பு இருப்பதாக அறிந்த ஜின் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். குழப்பத்தை அறிந்த போலீஸார் அவனது சொற்களை மறுக்கிறார்கள்.
ஜின்னின் கனவுகள் தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ள ரன்னுக்குத் தொடர்பு இருப்பது தெரியவர, ரன் தனது பழைய காதலனின் வீட்டுக்குச் சென்று வருவதும், சண்டையிடுவது, முத்தம் தருவதும், உடலைப் பகிர்வதுமாக கனவுகளும் நனவுகள் செல்கின்றன. ஒரு சமயத்தில் கனவு என்பது உறக்கத்தின் விழிப்புநிலை ஆகவே, விழிப்பிலேயே இருந்துவிட்டால் உறக்கமில்லை யாகவே கனவுமில்லை என்று முடிவெடுக்கிறார்கள். தூங்காமலிருக்க முயற்சிக்கிறார்கள். மனிதனின் வாழ்வில் கட்டுப்படுத்த இயலாத விஷயங்களில் தூக்கமும் ஒன்று. தூங்குதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை எளிதில் அறுத்துவிட முடியாது. இருவரும் கையில் விலங்கிட்டு படுத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை ரன் தூக்கத்தில் நடப்பதாக இருந்தால் ஜின்னின் கையைவிட்டுப் போய்விடமுடியாது. ஆனால் பெரும்பாலும் இது நடத்தைக்குதவாதது என்றும் புரிந்து கொள்கிறார்கள்.
ஜின்னின் கனவில் இப்பொழுது ரன்னின் காதலனைக் கொல்வதாகக் கனவு வருகிறது. இவர்களின் முடிச்சின் படி ரன் நிஜமாகவே அவளின் பழைய காதலனைக் கொன்றுவிடுகிறாள். அதற்காக சிறைத்தண்டனையும் பெற்றுவிடுகிறாள். தனது கனவுதான் ரன்னின் வாழ்க்கையை இவ்வாறாகப் புரட்டியிருக்கிறது என்பதறிந்த ஜின் விபரீத முடிவுகளை நாடுகிறான். ரன்னும், சிறையிலிருந்தபடியே விபரீதங்களைச் சந்திக்க முடிவெடுக்கிறாள். இறுதியில் என்னவாயிருப்பார்கள்?
இந்த படம் முழுக்க விபரீதகளத்தில் தொடர்புகளைப் பற்றி சொல்கிறது. ஜின் மற்றும் ரன் ஆகிய இரு முகமறியா மனிதர்களின் தொடர்பு கனவுகளின் வழியே நீண்டு, தங்களின் பழைய காதலின் நினைவுகளால் சிக்கலான முறையில் இணைகிறார்கள். இருவருக்குமிடையேயுள்ள உறவு அவர்களையறியாமலேயே (காதல்?) வளர்கிறது. ஜின்னின் பழைய காதலியின் போட்டோக்களைக் கிழித்துப் போடுவதிலிருந்தும் “என்னவானாலும் சரி, நான் உன்னை வெறுக்கமாட்டேன்” என்று ரன் சொல்வதிலிருந்தும் இருவருக்குமிடையேயான நட்பை மிகச்சரியாகப் புரிந்து கொள்ளலாம். முடிவுக்காட்சிகள் ஒரு கவிதையைப் போல உணருகிறேன். படம் பார்த்த யாருடனாவது பகிர்ந்து கொள்ளலாம். ஜின்னின் கனவுகளை ஸ்லோ மோஷனில் காண்பித்திருக்கிறார்கள். ஓரிடத்தில் ஜின் மற்றும் ரன் ஆகிய இருவரோடு அவர்களின் பழைய காதலர்கள் சண்டையிடும் காட்சி கனவுகளின் கூறுகளை மிகச்சரியாகப் பயன்படுத்திய காட்சி. அதிலிருந்தே ஜின்னுக்கும் ரன்னுக்குமான உறவு எப்படி பிணைந்திருக்கிறது என்பதை இயக்குனர் காட்டிவிடுகிறார்.
3 Iron படத்தில் ஒரு தம்பதியினர் வீட்டிற்குள் கதாநாயகனும் நாயகியும் சென்று இரவில் உறங்குவார்கள். அதே வீதி (அதே வீடும்?) காட்டப்படுகிறது. அது ரன்னின் காதலனின் வீடு. இப்பொழுது இப்படத்தில் எழும் கேள்வி என்னவெனில் ஜின் மற்றும் ரன் ஆகிய இருவரில் தவறு செய்பவர்கள் யாராக இருப்பார்கள் என்பதே..
ஜின் ஆக நடித்திருக்கும் ஜப்பானிய நடிகர் Joe Odagiri மற்றும் ரன் ஆக நடித்திருக்கும் நடிகை Lee Na-young ஆகிய இருவரைத் தவிர படத்தில் வேறு எவருமில்லை. அபாரம் என்று சொல்லமுடியாவிட்டாலும் தேவையான நடிப்பு இருவரிடமிருந்தும் கிடைக்கிறது.
இது ஒரு வித்தியாசமான சர்ரியல் வாழ்க்கையைக் குறிக்கும் கதைத்தளம்தான் என்றாலும் இதே கதையை ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் கொஞ்சம் பிரம்மாண்டமாக எடுத்திருப்பார்கள். கிம் உளவியல் ரீதியாக எடுக்கப் பார்த்திருக்கிறார். எனினும் கனவுகளை மையமாக்கி நடக்கும் நிகழ்வுகளைக் கொண்ட Final Destination கதை வகையறாவைச் சார்ந்திருப்பதால் கிம் கி டுக்கின் இப்படம் மனதளவில் புதியபடமாக ஒட்ட மறுக்கிறது. தவிர அவரது பழைய படங்களில் இருக்கும் நுணுக்கமும், அடர்த்தியும் இதில் குறைவு. பழைய படங்களில் வசனங்கள் குறைவாக இருக்கும், ஆனால் இதில் அப்படி எதிர்பார்க்க முடியாது.
Comments
தங்களின் விமர்சனம் வழமை போல சுவாரசியம்.