Volver - விமர்சனம்

volver_p
Directed Pedro Almodóvar
Starring    Penélope Cruz, Carmen Maura, Lola Dueñas, Blanca Portillo, Yohana Cobo, Chus Lampreave
Year 2006
Language    Spanish
Genre Drama, Family

பெண்கள் சந்திக்கும் பாலினம் சார்ந்த அகப்பிரச்சனைகள், நிகழ் வாழ்வில் எழும் சிக்கல்கள், குழந்தைகள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதம், சிதைந்த குடும்பங்களின் வாழ்நிலை போன்றவற்றைப் பற்றி பேசுகிறது வால்வர் (Volver) எனும் ஸ்பானியத் திரைப்படம். நடப்பு வாழ்வில் எழும் சுயபிரச்சனைகளின் ஊடாக கணவனின் இருப்பும், குடும்ப பிளவின் பின்னணியும் பின் சேருதலும் குடும்ப ரகசியங்களின் முக்கியத்துவம் குறித்தும் ஸ்பானிய இயக்குனர் பெட்ரோ அல்மதோவரால் இயக்கப்பட்டது இப்படம். அசாதாரணங்கள் நிறைந்தது ஒவ்வொருவருடைய வாழ்வும். அவை சாதாரணங்களோடே பயணிப்பதை படம் முழுக்கக் காணமுடிகிறது

PenelopeCruz003ராய்முண்டாவாக (Raimunda) நடித்திருக்கும் பெனுலுபி க்ரூஸ் (Penélope Cruz) தாய்மையின் அவஸ்தையையும் போராட்டத்தையும் சிக்கல்களிலிருந்து சுமூகமாக வெளியேறும் வெற்றியையும் மிக அழகான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். உலகின் மிக அழகான பெண்களில் ஒருவரான, ஆஸ்கர் விருது வென்ற முதல் ஸ்பானிய பெண்ணான பெனுலுபி க்ரூஸ் இந்த பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான பொருத்தமாவார்.

ராய்முண்டா மற்றும் சோலெ (Sole) இருவரும் சகோதரிகள், பெற்றோரை இழந்தவர்கள். தங்களது அம்மாவின் அக்காவாகிய தெய் பவ்லாவிடம் (Tía Paula) வாழ்ந்தவர்கள் ; தெய் பவ்லாவை அருகிலிருந்த அகஸ்டினா (Agustina) எனும் பெண் கவனித்து வருகிறாள். ராய்முண்டாவுக்குத் திருமணம் ஆகி, பவ்லா எனும் மகள் உண்டு. உடல் இச்சை காரணமாக ராய்முண்டாவின் கணவன் பேகோ (Paco) பவ்லாவை கற்பழிக்க முயலுகையில் அசந்தர்ப்பத்தால் கொலைசெய்யப்படுகிறான்.  அதனை மறைக்கும் ராய்முண்டா, பவ்லாவை இக்கட்டான மனச்சூழ்நிலையிலிருந்து வெளியேற்ற முயல்கிறாள். மேலும் தன் தந்தை பேகோ இல்லை என்பதையும் பவுலா தெரிந்து கொள்கிறாள். அருகில் இருக்கும் ரெஸ்டாரெண்ட் தற்காலிகமாகக் கைக்குக் கிடைக்கிறது. அங்குள்ள ஒரு குளிர்ப்பதனப்பெட்டியில் பிணத்தைக் கிடத்துகின்றனர் தாயும் மகளும். இதே சமயத்தில் ராய்முண்டாவின் ஆண்டி (பெரியம்மா) பவ்லா இறந்து போன தகவல் தங்கை சோலே மூலம் தெரியவருகிறது. சோலே மட்டும் சடங்குகளுக்குச் சென்று வீடு திரும்புகையில் எதிர்பாராதவிதமாக இறந்துபோன அவளது அம்மா ஐரின் (Irene) திரும்ப வருகிறாள். முதலில் ஆவி என்று நம்பும் சோலே பின்னர் உண்மையில் அம்மா இறந்து போகவில்லை என்று உணருகிறாள். ஆனால் இந்த விஷயத்தை அக்கா ராய்முண்டாவிடம் சொல்லாமல் மறைக்கிறாள்.

தற்காலிக ரெஸ்டாரண்டை உபயோகப்படுத்தி பணம் பண்ணுகிறாள் ராய்முண்டா.. இச்சூழ்நிலையில் அகஸ்டினாவுக்கு கேன்சர் இருப்பது தெரிய வந்து அவளை மருத்துவமனையில் சந்திக்கிறாள். அப்பொழுது அகஸ்டினா தன் தாய் ராயின் தந்தையோடு தொடர்பு வைத்திருந்ததாகவும் அவளின் மரணம்  பற்றிய ரகசியம் ராய்முண்டாவின் அம்மாவாகிய ஐரினுக்கு  மட்டுமே தெரியும் எனவும், ஆவியாக அலையும் அவளிடம் கேட்டுச் சொல் என்றும் கோரிக்கை வைக்கிறாள். கேன்சரால் பிதற்றுவதாக எண்ணி எரிச்சலைடைந்து அங்கிருந்து அகலும் ராய்முண்டா, சோலே வீட்டில் தன் அம்மா இருப்பதை எப்படியோ தெரிந்து கொள்கிறாள். தன் அம்மாவைக் கண்டதும் கோபத்தில் வெளியேறும் ராய்முண்டா, பிறகு சமாதானமாகி இணைகிறாள்.

அகஸ்டினாவின் அம்மாவுக்கும் ராய்முண்டாவின் அப்பாவுக்கும் இருந்த தொடர்பு என்னாயிற்று, பவுலாவின் தந்தை யார் ? ராய்முண்டாவின் அம்மா எப்படி உயிரோடு திரும்பி வந்தார்? அகஸ்டினாவுக்கு தன் தாய் பற்றிய உண்மை தெரிந்ததா என்பது எதிர்பாராததும் அதிர்ச்சியூட்டக்கூடியதுமான நிகழ்வுகளடங்கிய கிளைமாக்ஸில் காண்க…

Volver  என்றால் திரும்புதல் (to Return) இறந்ததாக எண்ணப்பட்ட தாய் திரும்பி வருதலைக் குறிக்கிறது..  இரு வேறு பாதைகளில் செல்லும் திரைக்கதை மெல்ல மெல்ல ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்து ரகசியங்களை வெளிப்படுத்துகிறது. தாய் –மகள் – தங்கை எனும் பாசங்கள், உறவுகள் மீதான அழுத்தமான நம்பிக்கையையும், அன்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது. பேகோவின் காமவெறியாட்டம் உறவின் நம்பிக்கையின்மையையும் மாற்றாந்தகப்பனின் துரோகத்தையும் ஓரளவு சொல்கிறது.

ஒருசில காட்சிகளின் அழுத்தம் குறிப்பிடத்தக்கது. ராய்முண்டா உடலுறவுக்கு ஒப்பாத நிலையில் எப்படியாவது தன் காமத்தைத் தீர்க்க முயலும் பேகோ சுயமைதுனம் செய்துகொள்வது, பேகோவை கொண்டு விட்டு ஒரு தாயிடம் எப்படி பேசவேண்டுமோ அப்படி பேசும் பவுலாவை எதிர்கொள்ளும் ராய்முண்டாவின் காட்சி, தாய் சொல்லிக் கொடுத்த பாடலை ரெஸ்டாரெண்டில் பாடும் ராய்முண்டாவை சந்திக்க முடியாமல் அவளது அம்மா காரில் இருந்தபடியே அழும் காட்சி, என நிறைய உண்டு. (அந்த பாடல் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது ; பெனுலுபியின் வாயசைவையும் உணர்ச்சியியலையும் கவனியுங்கள்…)

பெனுலுபிக்கு இணையாக ஐரினாக நடித்திருக்கும் கார்மென் மெளராவின் (Carmen Maura) நடிப்பு அபாரமானது. மகளை சந்திக்கத் தவிர்த்து தவிப்பதும், பின் நெகிழ்வதும், ராய்முண்டாவின் மகள் குறித்த ரகசியத்தை சொல்லவருமிடத்தில் இயல்பாக இருப்பதும், மிகச்சிறப்பான நடிப்பு.

மிகச் சிறப்பான திரைக்கதையும் ஐந்து பெண்களைச் சுற்றி நடக்கும் கதையும் நடிப்பும் படத்திற்கு மிகுந்த பலம். இயக்குனர் பெட்ரோ அல்மதோவரின் All About My Mother, மற்றும் Talk to Her படங்களைக் காட்டிலும் இப்படம் சிறப்பானது இல்லை, எனினும் 2006 கேனஸ் திரைப்படவிழாவில்  Palme d'Or விருதுக்கு போட்டியிட்ட படங்களில் ஒன்றாக இது இருக்கிறது.

2006 கேனஸ் திரைப்படவிழாவில்
சிறந்த நடிகைக்கான விருது பெனுலுபி க்ரூஸுக்கும்
சிறந்த திரைக்கதைக்கான விருது பெட்ரோ அல்மதோவருக்கும் வழங்கப்பட்டது

அகடமி மற்றும் கோல்டன் க்ளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் எந்த விருதும் இப்படம் பெறவில்லை.

படத்தின் பாத்திரங்கள்:

volver penelope_cruz7 tumblr_ldidcmuCNQ1qb34d0o1_500

சோலே, பவுலா, ராய்முண்டா           ஐரின், ராய்முண்டா                  அகஸ்டினா

Videos :

முன்னோட்டம்

பெனுலுபி க்ரூஸ் பாடிய பாடல்

Comments

நீங்க இணைத்திருக்கும் penelope cruz புகைப்படத்தை பார்த்தால் தாய்மையின் போராட்டம் போல தெரியவில்லையே... :)

http://www.philosophyprabhakaran.blogspot.com/
ஆதவா said…
:D :D
இதெல்லாம் சகஜம் பாஸ்

Popular Posts