The Social Network - விமர்சனம்
Direction | David Fincher |
Starring | Jesse Eisenberg, Andrew Garfield, Justin Timberlake, Brenda Song, Rooney Mara, Rashida Jones, Armie Hammer, Max Minghella, Joseph Mazzello |
Music | Trent Reznor, Atticus Ross |
Year | 2010 |
Language | English |
Genre | Biography, Drama |
மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) எனும் 26 வயது மாணவனைப் பற்றி யாரும் அவ்வளவாக கேள்விப்பட்டிருக்க முடியாது. கடந்த ஆறுவருடங்களில் மிக சீக்கிரமாகவே கோடீஸ்வரனான இளைஞன். 2010 ம் வருடத்தின் சிறந்த மனிதராக டைம் இதழ் தேர்ந்தெடுத்திருக்கும் பில்லினியர்.. யாருக்குத் தெரியும்?? ஆனால் அவன் உருவாக்கிய facebook.com ல் இணையாத இணையவிரும்பிகளையோ, அல்லது கேள்விப்படாதவர்களையோ பார்ப்பது மிக மிக அரிது.
தகவல் பரிமாற்ற சேவைகளில் SMS க்கு அடுத்ததாக Facebook கருதப்படுகிறது. இன்று இந்நொடி நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை எனது status ல் என் நண்பர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்படி facebook.com வசதி செய்துதருகிறது இலவசமாகவே.. எனக்குக் கீழ் பலநூறு நண்பர்கள்… அவர்களின் Activities, அவர்களுக்குக் கீழ் பலநூறு நண்பர்கள்…. இப்படியே நீளும் இந்த பட்டியல், ஹார்வார்ட் பல்கலைக் கழக மாணவரான மார்க் ஜூக்கர்பெர்கிடமோ மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸிடமோ, அல்லது எதிர்வீட்டு ஃபிகர் மோனிகாவிடமோ போய் நிற்கும். Facebook பற்றி விவரித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. ஏனெனில் இதைப் படிக்கும் அத்தனை பேருக்கும் Facebook ல் கணக்கு இருக்கும். ஆனால் இதனை உருவாக்க மார்க் எத்தனை சிரமப்பட்டிருப்பார்… நமக்குக் கீழ், நமக்குக் கீழென 600 மில்லியன் நண்பர்களை அவர் இணைத்து வைக்க அவர் எத்தனை எதிர்களை சம்பாதித்திருப்பார்? The Social Network திரைப்படம் facebook நிறுவன ஆரம்பிப்பதில் தடுமாற்றத்தையும், சிரமங்களையும், அவையனைத்தையும் தாண்டி வெற்றிபெறுதலையும் பற்றி கூறுகிறது.
தன் காதலி Erica Albright உடனான பிரிவின் விரக்தியிலிருக்கும் மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவிகளின் புகைப்படங்களை இணையத்தின் வழியே திருடி Facemash.com எனும் தளத்தை உருவாக்கி ஒவ்வொரு மாணவிகளுக்கும் ரேட்டிங் போடும் முறையை ஆரம்பிக்கிறார். இதனால் ஹார்வர்ட் நெட்வொர்கே ஸ்தம்பித்து போகும் நிலையில் இந்த செயலுக்காக தண்டிக்கப்படுகிறார் மார்க். பின்னொரு நாளில் மார்க்கை இரட்டையர்களான கேமரன் மற்றும் டைலர் (Cameron, Tyler) அமெரிக்க வாழ் இந்தியரான திவ்யா நரெந்திரா (Divya Narendra) ஆகிய மூவரும் சந்தித்து நண்பர்களை இணைக்கும் இணையதளம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று பேசுகிறார்கள். அந்த ஐடியா வொர்கவுட் ஆகும் என்று அறிந்து கொண்ட மார்க், அவர்களை விட்டுவிட்டு தனது நண்பனான எடர்டோ சாவரைன் (Eduardo Saverin) உதவியுடன் தானே ஆரம்பிக்க, பிரச்சனை ஆரம்பிகிறது. மெல்ல மெல்ல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து மற்ற பல்கலைக் கழகங்களுக்கும், பள்ளிகளுக்கும் Facebook அனுமதி அளிக்க, ஐடியா கொடுத்த மூவரும் ஹார்வாட் பிரஸிடெண்ட்டை சந்தித்து முறையிடுகிறார்கள். ஆனால் பலனில்லை.
இதனிடையே, Napster எனும் தளத்தின் நிறுவனரான ஷான் பார்கரை (Sean Parker) சந்திக்கும் மார்க், அவரின் உந்துதலினாலும் உதவியினாலும் Facebook ஐ நிலைநிறுத்த, எடர்டோவுக்கு பொறாமை வளருகிறது. ஷான் பார்க்கரை வெறுத்து, மார்க்குக்கு தனது பண உதவியை நிறுத்திவிட, ஒரு பெறும் நிறுவனத்தின் முதலீட்டுடன் Facebookஐ வளர்க்கிறார் மார்க்.. Facebook ல் எடர்டோவின் பங்குகள், ஐடியா கொடுத்து அறிவாளித்தனமான திருட்டு என்று வழக்கு தொடர்ந்த மூவரின் கதி, ஷான் பார்க்கர் என்னவானார் போன்றவற்றோடு, தன் முன்னாள் காதலி எரிகாவுடன் மார்க் இணைந்தாரா என்பவற்றை சொல்லி முடிக்கிறது The Social Network.
ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம் ஆரம்பிப்பதிலுண்டான சிக்கல்கள் ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் நன்கு தெரியும். அதைவிட அந்நிறுவனத்தை சிக்கலின்றி நடத்திச் செல்ல தனித் திறமையே வேண்டும். தடைகளைத் தகர்த்து ஹாயாசமாக அமர்ந்து பதில் சொல்லும் மார்க் ஜூக்கர்பெர்க் ஒரு ஜீனியஸ் என்றே சொல்லத் தோணுகிறது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது எட்வர்டோவுக்கு இருந்த பதட்டம் துளிகூட மார்க்கிடம் இல்லாதது வியப்பாகவும் அவரது திறமையின் மேல் மதிப்பும் மிகுகிறது.
இயக்குனர் David Fincher மற்றும் திரைக்கதையாசிரியர் Aaron Sorkin இப்படத்தை எப்படி சலிப்பில்லாமல் கொண்டு சென்றார்கள் என்றே தெரியவில்லை. முழுக்க முழுக்க இண்டெலெக்சுவலாகவே செல்லும் இப்படத்தில் விசாரணை நடைபெறுமிடத்தில் கேள்விகளுக்குப் பதிலாக காட்சிகளை நகர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. Trent Reznor, மற்றும் Atticus Ross ன் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். என்றாலும் ரஹ்மானின் 127 Hours அளவுக்கு இல்லை என்பது என் கருத்து.
மார்க் ஜூக்கர்பெர்க்காக நடித்திருக்கும் Jesse Eisenberg பேசும் எந்த காட்சியையும் சப்டைட்டில் இல்லாமல் பார்த்துவிடாதீர்கள். ஒரு எழவும் புரியாது. அவ்வளவு வேகமாக பேசுகிறார். சிலசமயம் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் படம் செல்கிறதோ என்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. அலட்டிக் கொள்ளாத நடிப்பு. படம் முழுக்க மனதில் எதையோ மறைத்துக் கொண்டே வரும்படியான நடிப்பு எட்வர்டோவாக நடித்திருக்கும் Andrew Garfield ன் உடையது. மற்றும் ஷான் பார்க்கராக நடித்திருக்கும் Justin Timberlake (பாப் பாடகர்) மார்க்கின் முன்னாள் காதலியான எரிகாவாக நடித்திருக்கும் Rooney Mara இன்னும் பல பாத்திரங்களின் நடிப்பு படத்திற்கு பலம்!!
சிறந்த படம் – Drama பிரிவில் கோல்டன் க்ளோப் வாங்கிவிட்ட இப்படம் பல ஆஸ்கர்களை வெல்லும் என்பதில் சந்தேகமில்லை!!
மார்க் ஜூக்கர்பெர்க்
படத்தின் நாயகர்களோடு நிஜ உலக நாயகர்கள்
மார்க் ஜூக்கர்பெர்க்கின் முன்னாள் காதலி Erica Albright
Trailer
facebookல் என்னைத் தொடர.........
Comments
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html