Hable con Ella - விமர்சனம்

2002_Talk_to_Her

Direction

Pedro Almodóvar

Starring   

Javier Cámara, Darío Grandinetti, Leonor Watling, Geraldine Chaplin, Rosario Flores

Music  

Alberto Iglesias

Year

2002

Language   

Spanish

Genre

Drama, Romance

Warning : காமம், நிர்வாணம் - குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதல்ல.

காதலின் இழப்பினால் தள்ளப்படும் தனிமையின் இருப்பை, காதலின் மிக ஆழத்தை, அதீத காதலின் உச்சமான காமத்தின் புரிதலைப் பற்றி அழகாகவும் அமைதியாகவும் பேசுகிறது பெட்ரோ அல்மதோவரின் Hable con Ella (Talk to her) திரைப்படம்.

காதலியோடு பேசுதல் ஒவ்வொருவருக்கும் விருப்பமானது. ஆனால் காதலி அழிந்து போன நினைவில் சிக்கியிருக்கும் பொழுது (Coma), இன்னும் தன்னைப் பற்றி அவ்வளவாக அறிந்திராத பொழுது பேசுதல் எந்தவகையானது? நீங்கள், உங்கள் காதலி செயலற்ற சூழ்நிலையிலிருக்கும் பொழுது எவ்வாறு தாங்கிக் கொள்வீர்கள்? ஒரு தாயாக?, ஒரு செவிலியா?, ஒரு காதலனாக??

ஆண் செவிலியான பெனிகோ, (Benigno) பாலே நடன மாணவியான அலிசியாவை (Alicia) ஒருதலையாக விரும்புகிறார். ஒரு கார் விபத்தில் அடிபட்டு கோமாவில் கிடக்கும் அலிசியாவை சுயநலம் கலந்த கடமையோடு தினமும் கவனித்துக் கொள்கிறார் பெனிகோ.

பயண எழுத்தாளரான மார்கோ (Marco) ஒரு சந்தர்ப்பத்தின் கீழ் காளைச்சண்டை வீராங்கனையான லிடியாவைக்(Lydia) காதலிக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் முன்னரே, ஒரு காளைச்சண்டை விபத்தில் லிடியா சிக்கி கோமா நிலையில், அலிசியா இருக்கும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். talktoherபெனிகோ மற்றும் மார்கோ இருவரின் நட்பும் புரிதலும் கோமாவில் கிடக்கும் காதலியின் மீதுண்டான ஆழமான காதலுமாக நாட்கள் செல்ல, லிடியாவின் முன்னாள் காதலன் லிடியாவை கவனித்துக் கொள்வதாகக் கூறவே, அங்கிருந்து பயணமாக ஜோர்டானுக்குச் செல்கிறார் மார்கோ, அதேவேளையில் கோமாவில் கிடக்கும் அலிசியா கர்ப்பமாக இருப்பதாகக் கூறி பெனிகோ சிறையில் அடைக்கப்படுகிறார். சிலமாதங்கள் கழித்து லிடியா இறந்ததை அறியும் மார்கோ, சிறையில் பெனிகோ இருப்பதையும் அறிந்து அவரை வெளியே கொண்டுவர முயற்சி செய்கிறார். கர்ப்பமாக இருக்கும் அலிசியா என்னவானார்? சிறையில் இருக்கும் பெனிகோவுக்கு மார்கோ உதவி செய்தாரா? போன்றவை இறுதியில்.. (படத்தில்: பெனிகோ, மார்கோ, அலிசியா மற்றும் லிடியா)

கோமாவில் இருப்பவர்களை எப்படி பராமரித்துக் கொள்வார்கள் என்று இதுவரையிலும் நான் அறிந்து கொண்டதேயில்லை. கோமாவில் இருப்பவர்களுக்கும் மூளையின் ஒருசில அன்றாட கட்டளைகள், மூச்சுவிடுவது, சிலசமயம் உறங்கி விழிப்பது, பெண்களின் தனிப்பட்ட உபாதைகள் போன்றவை இயங்கிக் கொண்டுதானிருக்கும். talktoher3பெனிகோவாக நடித்திருக்கும் Javier Cámara, அலிசியாவாக நடித்திருக்கும் Leonor Watling எந்தவித தயக்கமுமின்றி பராமரிக்கிறார். படுக்கையில் இருந்தபடியே அவளை சுத்தம் செய்வது, மஸாஜ் செய்வது, போன்றவற்றோடு மட்டுமின்றி அவளோடு பேசவும் செய்கிறார். கோமாவில் இருப்பவர்களோடு பேசுதல் என்பது முட்டாள்தனமானதாக நினைக்கும் மார்கோவிடமும் லிடியாவிடம் பேசுங்கள் என்கிறார். இந்த சூழ்நிலைகளில் நாம் பேசுவது காதலியுடனா அல்லது காதலனுடனா என்பது சந்தேகத்திற்குரிய முரணாக இருக்கிறது. இயல்பாகவும் அந்த இயல்பின் மேல் காதலின் ஆழத்தைப் புரிந்து கொள்வதாகவும் ஜேவியரின் நடிப்பு அமைந்திருக்கிறது. (படத்தில் : தன் காதலிக்கு மிகவும் பிடித்த நடனக்கலைஞரிடமிருந்து கையெழுத்து வாங்கியதை அவளுடன் பேசும் காட்சி)

மார்கோவாக Darío Grandinetti. நடனநிகழ்ச்சிகளில் மனதைப் பறிகொடுத்து அழுவதிலிருந்து துவங்குகிறார். ஆண்களுக்கேயுரிய பார்வையும் இயல்பும் தனிமையின் வலியும் மிகுந்தவராக வருகிறார். லிடியாவைப் பற்றி மருத்துவர் சொல்லிக் கொண்டிருக்க, கண் கலங்கியவாறே  வெளியேறும் மார்கோ, அலிசியாவின் ஆடையற்ற உடலைக் கண்டு மனம் ஒப்பாமல் திரும்பவதிலும், பின் அவரே அலிசியாவின் மார்பகங்களைப் பார்த்தவாறே அமர்ந்திருப்பதும் ஆண்களை நோண்டிப் பார்க்கும் நிகழ்வுகளின் புரட்டல்களை நடிப்பில் கொண்டுவந்துவிடுகிறார். இறுதிக் காட்சியில் பெனிகோவின் முடிவைப் படிக்கும் பொழுது அவருடைய இயல்பான நடிப்பு மனதை உருக்கிவிடுகிறது. காளைச்சண்டை வீராங்கனை லிடியாவாக வரும் Rosario Flores சண்டைக்கேற்ற உடல்வாகுடன் வருவதோடு, சிறப்பான நடிப்பையும் தருகிறார். படம் முழுக்க கோமாவிலேயே கிடக்கும் அலிசியாவாக வரும் Leonor Watling ங்கின் அப்பாவித்தனமான முகம் கண்களின் ஒரு சில காட்சிகளில் கண்களின் வழியே ஒன்றும் தெரியாமையை நடிப்பால் காட்டிவிடுவது அபாரமானது.

அலிசியாவிடம் எல்லா விஷயங்களையும் பகிரும் பெனிகோ தான் Amante Menguante (Shrinking Lover)எனும் கருப்பு வெள்ளை சினிமாவுக்குச் சென்று வருவதைக் கூறுவார். காதலியின் வேதியல் ஆராய்ச்சியின் விளைவினால் காதலன் உயரம் குறைந்து கொண்டே வருவான். காதலியின் சந்தோஷத்திற்காக காதலன் அவளின் யோனிக்குள் வாழ்ந்துவருவானாக படம் முடியும். உண்மையில் காதலின் உச்ச சந்தோஷம் காமம் தானா? அல்லது வாழ்க்கையை அர்பணிக்கக்கூடிய அசட்டுத்தனமான வெளிப்பாடா?

படத்தை மூன்றுவிதமாக பிரிக்கலாம். மார்கோவுக்கும் லிடியாவுக்கும் உள்ள காதல், அலிசியாவின்மேல் பெனிகோவின் ஆழமான காதல், பெனிகோ – மார்கோ நட்பு. முடிவில் அலிசியாவுக்கும் மார்கோவுக்கும் ஏற்படும் பரிச்சயம் எங்கே கொண்டு போகும் என்று எழுத்தாலேயே காண்பித்திருப்பது சிறப்பு. விளைவுகளை மட்டுமே பேசும் இப்படத்தில் விளைவுகளுக்கான காரணிகளைக் காட்டுவதில்லை. அலிசியாவுக்கு விபத்து நேர்வதை, அலிசியா கர்ப்பமாவதை, பின் கோமாவிலிருந்து மீள்வதை, லிடியா இறப்பதை என எந்த ஒரு காரணிகளையும் காட்டாமல் அதன் பின்னர் விளையும் விளைவுகளை படம் முழுக்கச் சொல்லிவிடுகிறார்கள்.

அலிசியாவிடம் பெனிகோ பேசும் ஒவ்வொரு காட்சிகளும் கவிதையானவை. அவள் தன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறான். அதற்கு பதிலும் தருவதாக எண்ணுகிறான். அவனது காதலின் முடிவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லையெனினும் பெட்ரோ அல்மதோவரின் இப்படம் ஒரு இனம் புரியாத காதலின் விளைவுகளை அமைதியாகப் பேசுகிறது.. பார்க்கவேண்டிய பல படங்களில் இதுவும் ஒன்று!

Trailer

Comments

ஜீ... said…
அருமையான படம் பாஸ்! நன்றி உங்கள் பகிர்தலுக்கு!
Saravanakumar said…
ஹலோ ரவி பின்னுங்க...

Popular Posts