Chicago - விமர்சனம்
Direction | Rob Marshall |
Starring | Renée Zellweger, Catherine Zeta-Jones, Richard Gere, Queen Latifah, John C. Reilly, Christine Baranski, Taye Diggs, Lucy Liu |
Music | John Kander (music) |
Cinematography | Dion Beebe |
Editing | Martin Walsh |
Year | 2002 |
Language | English |
Genre | Musical, Drama |
Warning : கடுமையான மொழி, கவர்ச்சியான உடை - குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்ற படமல்ல.
ஆங்கிலப்படங்கள் பலவற்றை நன்கு கவனித்தால் படங்களில் கதை ஒன்றும் பெரிதாக இருக்காது, ஆனால் அவர்களின் திரைக்கதை பாணி வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கும். திரைக்கதையை எவ்வளவு ஆழமாக அமைக்கிறார்களோ அழுத்தமில்லாத கதையாக இருந்தாலும் அவ்வளவு நன்றாக திரைப்படம் அமைந்துவிடும். சிகாகோவிலும் அப்படித்தான் நடந்திருக்கிறது.
வெல்மா கெல்லி (Velma Kelly) ஒரு மேடை நடன பாடகி, (Stage showgirl) அவளைப் போலவே தானும் ஒரு மேடைநடன பாடகியாகவேண்டும் என்பது ராக்ஸி ஹார்ட்டின் (Roxie Hart) விருப்பம். இதற்காக வெல்மாவுடன் ஆடும் ஃப்ரட்ஐ (Fred) கள்ளத்தொடர்பு கொண்டு விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறாள். ஆனால் ஃப்ரட் தனக்கும் மேடைநடனத்திற்கும் தொடர்பில்லை என்று கூறிவிட, ராக்ஸி அவனை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறாள். இதேநேரத்தில் வெல்மா, தனது கணவனையும் அவனோடு படுத்திருக்கும் தன் சகோதரியையும் சுட்டுவிடுகிறாள். இருவரும் பெண்களுக்கான சிறையில் அடைத்துவைக்கப்படுகிறார்கள். அங்கே மமா (Mama) என்றழைக்கப்படும் மமா மார்டனின் (Mama Morton) கீழ் கண்காணிக்கப்படுகிறார்கள். மமாவின் உதவியால் ராக்ஸி சிகாகோவில் சிறந்த வழக்கறிஞரான பில்லி ஃபிலினின் (Billy Flynn) உதவியை நாடுகிறாள்.
பில்லி ஏற்கனவே வெல்மாவின் லாயரும் கூட. இருவரும் இணைந்து கொலை நடந்த நிகழ்வை மாற்றி அமைக்கிறார்கள். தனது மற்றும் தன் வயிற்றில் வளரும் குழந்தையின் பாதுகாப்பிற்காகத்தான் சுடவேண்டி வந்தது என்று வழக்கை திசைதிருப்ப சிறையிலேயே ஒத்திகையும் பார்த்துவிடுகிறார்கள். பில்லி ஃப்லினின் லிஸ்டில் முதலிடத்தில் ராக்ஸி இருப்பதால் அவ்விடத்தைப் பிடிக்க வெல்மாவும் முயல்கிறாள்.
பத்திரிக்கையாளர்களிடையே பரப்பரப்பான செய்தியாகவும் பிரபலமாகவும் விளங்கும் ராக்ஸி பில்லியின் உதவியால் சிறையிலிருந்து வெளியே வந்தாளா? வெல்மாவுக்கும் ராக்ஸிக்குமிடையிலிருந்த உறவு என்னாயிற்று ராக்ஸி தனது விருப்பப்படி மேடைநடனப் பாடகியானாளா போன்றவை இறுதியில்…
ஒரு சின்னக் கதையை மிக அழகான பாடல்களின் மூலம் அழகாகக் கொண்டு செல்ல முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் Rob Marshall. ஒன்றரை மணிநேரப் படத்தில் ஒருமணிநேரம் பாடல்களாகவே செல்கிறது. பெரும்பாலும் Jazz இசைப் பாடல்கள். திரைக்கதையை பாடல்களோடு நகர்த்தியிருப்பது சிறப்பானது. நமது பழங்காலப் படங்களில் பாடப்படும் பாடல்கள் கதையை நகர்த்தி செல்வதற்காகப் பாடப்படுவதில்லை. இன்றும் கூட பல படங்களில் பாடல்கள் தேவையற்றே காணப்படுகின்றன. எல்லா பாடல்களையும் நடித்திருப்பவர்களே பாடியிருக்கிறார்கள்.
வெல்மா கெல்லியாக நடித்து ஆஸ்கர் துணைநடிகை விருது பெற்ற Catherine Zeta Jones ன் And All that Jazz எனும் Jazz பாடல் மூலமாகத் தொடங்குகிறது திரைப்படம். ராக்ஸியின் (Renée Zellweger)கணவனிடம் விசாரணை நடத்தும் பொழுதும், மமாவாக நடித்திருக்கும் Queen Latifahவின் அறிமுகத்தின் போதும் பில்லியின் அறிமுகம், விசாரணை, கோர்ட் வெல்மா, ராக்ஸியிடம் பேசுவது என ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பாடல்களே, குறிப்பாக, செல்மேட்கள் தனது குற்றத்தைப் பற்றிச் சொல்லும் Cell Block Tango மற்றும் மமாவின் When You're Good to Mama ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை, We Both Reached for the Gun எனும் பாடலின் பொம்மலாட்ட நடனம் குறிப்பிடத்தக்கது. பில்லியாக நடித்திருக்கும் Richard Gere கோர்ட்டில் பேசும் விவாதங்களையும் பாடல்களாகவே கொண்டு சென்றிருக்கிறார்கள். ராக்ஸியின் செல்மேட்டின் தூக்கு தண்டனை கூட ஒரு மேடைப் பாடல்காட்சியாகவே இருக்கிறது.
படத்தின் பாடல்களைப் போலவே ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இரவை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள், லைட்டிங் ஆகியவை அபாரம். ராக்ஸி பாடலின் பொழுது அமைக்கப்பட்டிருக்கும் ஒளி, பின்புலம் ஆகியவற்றிலிருந்து பல விஷயங்கள் தமிழ்சினிமா கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
சிறந்த படம் உள்ளிட்ட ஆறு ஆஸ்கர் விருதுகளையும் மூன்று கோல்டன் க்ளோப் மற்றும் கிராமி விருதுகளையும் இப்படம் வென்றிருக்கிறது. இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் விரும்பிகள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். அதன் சிறந்த நடன அமைப்பு, ஒளி மற்றும் பாடல்களுக்காகவே….
Trailer
Comments