Direction Darren Aronofsky Screenplay Mark Heyman Starring Natalie Portman, Vincent Cassel, Mila Kunis Music Clint Mansell Cinematography Matthew Libatique Year 2010 Language English Genre Psychological thriller
Warning :
காமம், குழந்தைகள் பார்க்கக்கூடாத காட்சிகள், மற்றும் கேட்கக்கூடாத வார்த்தைகள்
பிரபல பாலே (Ballet) நடனத்தில் ஸ்வான் லேக் எனும் கதையுடன் கூடிய நடனம் அரங்கேற்றப்படுவதுண்டு. வெள்ளை அன்னமாக, ஒரு மந்திரவாதியிடம் சாபம் பெற்ற இளவரசியைக் காதலிக்கும் இளவரசன் தவறுதலாக மந்திரவாதியின் சூழ்ச்சியால் கருப்பு அன்னத்தால் கவர்ந்திழுக்கப்பட, வெள்ளை அன்ன இளவரசி விஷயமறிந்து தற்கொலை செய்து கொள்வதாக முடியும் அக்கதை. இதனை மையமாகவைத்து எடுக்கப்பட்ட உளவியல் திகில் திரைப்படம் Black Swan. மனதினுள் எழும் அகவெளிப்பாடுகளை புறவெளிப்பாட்டுக் காட்சியகங்களாகப்படுத்தி எடுத்திருப்பது வியப்பையும் ஆச்சரியத்தையும் தருகிறது.
நினா (Nina) ஒரு பாலே நடனக்கலை பயிலும் மாணவி. ஸ்வான்லேக் (Swan Lake) எனப்படும் பாலே நடனத்தின் உயரிய அரங்கேற்றத்தில் இளவரசி பாத்திரத்தில் நடனமாடவேண்டும் என்பது அவரது லட்சியம். ஆனால் நினா ஒரு மிக மிதமான பெண். ஸ்வான்லேக் நடனத்தின் இரண்டாம் பகுதியில் Black Swan ஆக நடனமாட ஆக்ரோஷமும், வெறியும், மிதசுபாவத்தன்மையற்ற பெண் அன்னமாகவும் இருக்க வேண்டும். முன்பு கருப்பு அன்னமாகத் திகழ்ந்த பெத் (Beth) ஐ கழற்றிவிட்டு விட்டு புதியதாக ஒருவரை நியமிக்க முடிவெடுக்கிறார் பாலேநடன இயக்குனரான தாமஸ் (Thomas) வெள்ளை அன்னத்திற்கு மிகப்பொருத்தமாக இருக்கும் நினாவை ஒரு சின்ன நிகழ்வுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கும் தாமஸ், கருப்பு அன்னத்திற்காக நினாவின் மிதமான போக்கை மாற்ற முயலுகிறார். இதனிடையே ஒருசில மாற்றங்கள் நினாவின் உடலில் நிகழுகிறது. தந்திரமான காட்சிகள், உடல் காயம் போன்றவை அவ்வப்போது ஏற்பட்டுவிடுகிறது. நினாவுக்கு மாற்றாக லிலியை (Lily) தாமஸ் நியமிக்கிறார். லிலி கருப்பு அன்ன பாத்திரத்திற்கு சரியாக இருப்பதாக காட்டப்படுகிறது. தனது இடத்தை அடைய லிலி முயலுவதாக எண்ணும் நினா, லிலியிடம் பொறாமையும் கோபமும் கொள்கிறார்.
இறுதியில் யார் கருப்பு வெள்ளை அன்னமாக நடனமாடினார்கள், லிலிக்கும் நினாவுக்கு இறுதியில் என்னவாயிற்று? அவளுக்கு உடலில் ஏற்பட்டவைகள் என்னென்ன என்பது பரபரப்பான திகில் நிறைந்த இறுதிக் காட்சிகளில்……..
உளவியல் ரீதியான திகில் திரைப்படங்கள் நிறைய
பார்த்திருந்தாலும் Black Swan ல் மிகவித்தியாசமான கதையமைப்பு நம்மைக் கவர்கிறது. நினாவாக நடித்திருக்கும் நடாலி போர்ட்மனின் (Natalie Portman) நடிப்பு மிக அபாரமானது. குறிப்பாக White Swan என்று சொல்லப்படும் மிதமான முகபாவம் கொண்ட (இளவரசி) நடனத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஸ்வானாக தேர்ந்தெடுக்காத பொழுது தனக்கு வாய்ப்பு போய்விட்டதே என்று அழும் நடாலி, பின் வாய்ப்பு கிடைத்துவிட்டதை எண்ணி சிரித்துக் கொண்டே அதேசமயம் சிரிப்பை மழுப்பிக் கொண்டே அம்மாவிடம் பேசும் காட்சி சிறப்பான நடிப்பின் வெளிப்பாடு. தன் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றித் தெரியாமல், வெளியே சொல்ல முடியாமல் தவிப்பதும், காம இச்சை பழகுமிடத்தில் பயம், சந்தோஷம், கோபம், ஆகிய உணர்வுகளை அழகாகக் காட்டுவதும் சிறப்பு. நடாலியின் கேரியரில் மிகச்சிறந்த நடிப்பு இப்படத்திலுண்டு.
லிலியாக Mila Kunis, இவரும் நடாலியும் ஆறுமாதங்கள் பாலே நடனம் கற்று பின்னர் படத்தில் இறங்கியிருப்பது இப்படத்தின் கடும் உழைப்புக்குச் சான்று. நடாலிக்கு எதிரியாகவே வரும் மிலா குனிஸ், நடாலியின் கண்களில் ஒரு தாசியைப் போன்றே வலம்வருவதும், இருவருக்குமான போராட்டத்தைக் காண்பிப்பதும் உளவியல் ரீதியான காட்சிகள்!
ஒரு மிதமான, காமம் பற்றி தெரியாத சுபாவம் கொண்ட, அமெச்சூர் பெண்ணாகவே இருக்கும் நினா, மெல்ல மெல்ல மெச்சூர் ஆவதை, புறவெளிப்பாடுகளின் மூலம் காண்பித்திருப்பது வித்தியாசமான திரைக்கதை. நினாவுக்கு பின்முதுகில் காயம் ஏற்படுவது, கால்கள் அன்னத்தைப் போல ஒட்டிக் கொள்வது, கைகளில் இறக்கை முளைப்பது, கண்ணாடிகளில் நினாவின் உளமாற்றத்தைக் காண்பிப்பது போன்றவை அவளது அகத்தின் புறவெளிப்பாடுகளே.. பார்வையாளர்கள் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ளாமல் பார்த்தால் சந்தேகங்களும் குழப்பங்களும் மிஞ்சும்.
முழுக்க முழுக்க பாலே நடனமும் பாலே ஆர்கெஸ்ட்ரல் இசையுமாகவே செல்லும் இப்படத்தினை துளிகூட சலிப்பே இல்லாமல் திகில் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Darren Aronofsky. அடுத்தது என்ன என்று சீட்டின் நுனியில் அமரவைத்துவிடும் காட்சியமைப்புகள் பிரம்மிப்பூட்டுகின்றன. மிகச்சாதாரண கதைக்கு அசாதாரண திரைக்கதையமைத்து காட்சியகப்படுத்தியிருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. ![]()
(புற)உளவியல் மாற்றங்களின் வித்தியாசமான காட்சிப்படுத்தலுக்காகவே பார்க்கவேண்டிய படம்.
Trailer :


4 ஊக்கங்கள்:
ஆதவா இது நம்ம வரிசையில நாலாவது படம், இப்போதான் பார்த்துகிட்டு இருக்கேன். நல்லா இருக்கு, இன்னும் பாதிபடம் பார்க்கலை, இன்னைக்கு முடிச்சிடுவேன். பார்த்துட்டு வரேன்...
அனேகமா உங்களுக்கு புதுசா ஒண்ணு போட்டிருக்கேன், பாருங்க..
இதுவரை நான் கேள்விப்பட்டிராத படங்களை எல்லாம் அறிமுகப் படுத்துகிறீர்கள்.. நன்றி...
மிகவும் புதுமையாக இருந்தது.. அருமையுங்கோ...
சகோதரா, இனித் தான் இந்தப் படத்தை பார்க்கத் தொடங்குகிறேன். அருமையான விமர்சனம். இன்று தான் தங்களின் தளத்திற்கு முதன் முதல் வந்தேன். அருமை. அருமை.
Post a Comment