3 Iron - விமர்சனம்


Film : 3-Iron
Direction : Kim Ki-duk
Starring Jae Hee, Lee Seung-yeon
Year : 2004
Language : Korean
Genre : Romance, Drama

ஆழ்மெளனத்திலிருந்து கசியும் காட்சிகளைக் கொண்டே 3 iron படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கிம் கி டுக். இரு கோணங்களுக் கிடைப்பட்ட மெளனத்திலிருந்து மெல்ல துளிர்விடும் காதலை ஆழமாக, வார்த்தைகளற்ற காட்சிகளாக இவரால் சொல்லமுடிகிறது. படம் முழுக்க விவரிக்க இயலாத செயல்களின் தொடர்புகள், இசையற்ற ஊமைக்காட்சிகள் நகர்தலின் ஊடாக மனதைப் பரப்பி தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரசியங்களென படிப்பதற்கு நிறைய இருக்கின்றன. என்னுடன் இப்படம் பார்த்தவர்கள் ஏன் நாயகனும் நாயகியும் பேசிக் கொள்வதேயில்லை அல்லது அவர்கள் ஊமைகளா என்று கேட்கிறார்கள். உண்மையில் இப்படத்தில் அதிகம் பேசுவது அவர்கள் இருவர் மட்டுமே. பேசுதல் என்பது இலக்கணலட்சண ஒலிகளின் அசைவுகள்  மாத்திரமல்ல; அதோடு அசாதாரணமாகத் தெரியும் சாதாரணர்களையே படம் முழுக்க இயக்குனர் காட்டுகிறார்.

டே-சுக் ஒரு உணவகத்தின் டெலிவரி பாயாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். நாள்தோறும் உணவு விளம்பரம் அடங்கிய நோட்டீஸ்களை வீட்டின் கதவுகளில் ஒட்டிவிட்டு செல்வதே அவருடைய வேலை. இரவில் எந்த வீட்டின் கதவில் விளம்பர நோட்டீஸ் பிரிக்கப்படாமல் அப்படியே இருக்கிறதோ அந்தவீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று உறுதி செய்துகொண்டு அந்த வீட்டில் நுழைகிறார். ஆனால் டே-சுக் ஒரு திருடன் அல்ல. எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் அதனை தன் சொந்த வீடாகவே பாவித்து, அந்த வீட்டிலிருக்கும் பொருட்களை பயன்படுத்திக் கொள்கிறார். மேலும் அந்த வீட்டுக்காரர்களின் துவைக்கப்படாத துணிகளை துவைத்தும், வேலை செய்யாத பொருட்களை சரிசெய்தும், மறுநாள் எந்தவித அடையாளமுமின்றி வெளியேறிவிடுவார். கூடவே அந்த வீட்டில் தன்னை ஏதாவது ஒரு இடத்தில் வைத்து புகைப்படமும் எடுத்துக் கொள்வார்.

டே-சுக் ஒரு பணக்கார வீட்டில் முகத்தில் காயத்தோடிருக்கும் பெண்ணால் பார்க்கப்பட்டுவிட, மெளனமாக வெளியேறிவிடுகிறான். இருப்பினும் அந்த பெண்ணுக்கு ஏதோ பிரச்சனை என்றறிந்து மீண்டும் அதே வீட்டிற்குச் சென்று தோழமை ஏற்படுத்த முற்படும் நேரத்தில் அந்த பெண்ணின் கணவனால் எதிர்பாராதவிதமாகப் பார்க்கப்பட்டு கணவனை அடித்துவிட்டு அந்த பெண்ணோடு வெளியேறிவிடுகிறான். கணவனோடு வாழ விருப்பமில்லாதவள், டே-சுக்கின் வித்தியாச வாழ்விற்கு உடன்படுகிறாள். இருவருக்குள்ளும் மெல்ல மெல்ல காதல் சுரக்கிறது. வழக்கம்போல ஒரு வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழையும் இவர்களிருவரும் அந்த வீட்டில் பிணம் இருப்பதை அசெளகரியமாகப் பார்த்துவிடுகிறார்கள். இருவரும் இணைந்து முறைப்படி அந்த பிணத்தை அடக்கம் செய்துவிட்டு அதேவீட்டில் சாப்பிட அமர்கையில் வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்ட்டு போலீஸில் ஒப்படைக்கப்படுகிறார்கள். போலீஸ் விசாரணையில் மெளனத்தையும் புன்முறுவலையுமே பரிசாகக் கொடுக்கும் டே-சுக், எந்த வீட்டிலும் திருடியவனல்ல என்றறிகின்றனர். அந்த பெண்ணை உரியவரிடம் ஒப்படைக்கின்றனர். ஆனால் அந்த பெண்ணின் கணவனோ தன்னை அடித்தவனைப் பழிவாங்க போலிஸிடம் பணம் கொடுத்து டே-சுக்கை அடித்து காயப்படுத்திவிடுகிறான். அந்த பெண்ணோ, கணவனிடம் வாழ விருப்பமின்றி டே-சுக்கின் வருகைக்குக் காத்துக் கிடக்கிறாள்.

டே-சுக் இப்பொழுது சிறையில் வித்தியாசமான வாழ்வை வாழ்வதற்கு முற்படுகிறான், ஒருவருக்குத் தெரியாமல் அவர் பின்னேயே மறைந்து வாழும் உத்தியைத் தெரிந்து கொள்ள முற்படுகிறான். தன்னை தினமும் கவனிக்கவரும் போலிஸிடம் அதை செயல்படுத்தி வெற்றியும் காண்கிறான். டே-சுக்கின் கதி என்னாயிற்று அந்த பெண்ணோடு இணைந்தானா, கணவனது நிலையென்ன போன்றவை படத்தின் முடிவு.

படம் முழுக்க சிறு சிறு சம்பவங்களின் பெரிய காட்சியமைப்பு அல்லது விவரிப்பு கவனிக்கத்தக்கது. படத்தின் பெயர் போடப்படும் விதமே மிக அழகான விவரணை நிறைந்த காட்சி... மாடலாக இருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை அவள் கிழித்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் இணைக்கும் அந்த காட்சியே சட்டென நிமிரவைக்கும் காட்சி. தனது நிலையை மிக ஆழமாக, வார்த்தைகளின்றி அந்த செய்கையின் மூலம் அவள் தெரியப்படுத்துகிறாள். பின்னர் அதே புகைப்படம் ஓரளவு சரிசெய்யப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் பொழுது, அந்த பெண்ணின் நிலை ஓரளவு சரியாகிவிட்டது என்பதை உணர்த்துவதாக இருக்கும், முடிவில் அந்த புகைப்படம் டே-சுக்கால் மாயமாக களவாடப்படும்பொழுது அந்த பெண் டே-சுக்கின் மாயத்திற்கு உரியவள் என்பதை இயக்குனர் சொல்லிவிடுகிறார். அதேபோல கோல்ப் பந்தைக் கட்டி டே-சுக் அடிக்கும் காட்சி அவனது வன்முறையின் வடிகாலாக இருக்கிறது. அதனைத் தடுக்கும் பொருட்டு அவள் போய் நிற்பதும், பாராமல் கோல்ப் பந்தினால் ஒரு பெண்ணைக் காயப்படுத்துவதும் அவனது மனநிலையை எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த காட்சி. அங்கிருந்தே அவளுக்கும் டே-சுக்கிற்கும் காதல் பிறந்துவிடுகிறது.

படம் மூன்று தளங்களில் டே-சுக்கை வைத்து நகர்கிறது. முதலாவது டே-சுக் தனது அன்றாட வாழ்வை இக்கட்டுகளின்றி தொடருவது, இரண்டாவது டே-சுக்கிற்கும் அந்த பெண்ணுக்கும் உண்டான காதல் ; மூன்றாவது தன்னை அந்த காதலுக்காக மறைக்க அவன் தேர்ந்தெடுக்கும் உத்தி. அதேபோல, மூன்று பேரை மையமாகக் கொண்டு நகரும் இக்கதையில் மூன்று கோணங்கள் அல்லது முக்குறியீடுகள் படங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. டே-சுக் மூன்று வீடுகளில் பிரச்சனையால் மாட்டிக் கொள்வார், டே-சுக்கைப் பழிவாங்கவரும் பெண்ணின் கணவன் மூன்று கோல்ப் பந்துகளை எடுத்துவருவார். இவைகள் தற்செயலானதா அல்லது காரணங்களுண்டா எனத் தெரியவில்லை..
தன்னை மறைத்துக் கொள்ளும் டே-சுக், தானும் தன் காதலியும் இருந்த வீட்டிற்கெல்லாம் சென்று தடயத்தை ஏற்படுத்துவது சுவாரசியமான ஒன்று. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களைச் சுட்டுகின்றன. குறிப்பாக, குத்துச்சண்டைவீரன் போஸ்டரில் கண்களை மறைப்பது, தான் மறைந்திருக்கிறோம் என்பதாகவும், தங்களது காதல் கண்களுக்குப் புலப்படாதது என்பதாகவும், கண்மூடித் தனமானது உங்கள் வாழ்க்கை என்று சுட்டிக் காட்டுவதாகவும் (அந்த நேரத்தில் வரும் வசனங்களை வைத்து) இருக்கும். உண்மையில் படத்தில் காதல் பற்றிதான் பேசப்படுகிறதேயொழிய காதலர்கள் பற்றி பேசப்படுவதில்லை.

பெரும்பாலும் மெளனமே இசைப்பதால் ஒலிக்கருவிகள் மெளனமாகக் கிடக்கின்றன. ஒளிப்பதிவுவும் காட்சிக் கோணங்களும் பல கவிதைகளின் சங்கமம். ஒவ்வொரு இடத்திலும் கேமராவை சாதாரணமாக, வித்தியாசமாக, அசாதாரணமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு சிறந்த காதல்கதை... வித்தியாசமான தளத்தில்......

Comments

ஜீ... said…
நல்லா இருக்கு உங்க விமர்சனம்! டவுன்லோட் போட்டுட வேண்டியதுதான்! கிம் கி டுக்கின் Spring, Summer, Fall, Winter... and Spring பார்த்தீர்களா? எனது பார்வையில்,

http://umajee.blogspot.com/2010/06/spring-summer-fall-winter-and-spring.html
ஆதவா said…
கிம் கிடுக்குடனான முதல் அறிமுகமே அந்த படம் தாங்க ஜீ! இன்னொருமுறை பார்க்கவேண்டும்... விமர்சனமும் கொடுக்கவேண்டும்.. நன்றிங்க.
கிம் கி டுக்'ன் படங்களை பார்ப்பதா,வேண்டாமா என்ற தயக்கத்தில் இதுவரை தவிர்த்தே வந்திருக்கிறேன். கண்டிப்பாக இப்படத்திலிருந்தே துவங்குகிறேன்

Popular Posts