Little Miss Sunshine - விமர்சனம்



Film :Little Miss Sunshine
Direction : Jonathan Dayton, Valerie Faris
Starring: Greg Kinnear, Toni Collette, Abigail Breslin, Steve Carell, Paul Dano, Alan Arkin
Year : 2006
Language : English
Genre : Comedy - Drama

தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ வெற்றிகளைக் கடந்து செல்லுவது மட்டுமே வாழ்க்கையன்று. தோல்வியையும் தாங்கி அணைத்துச் செல்வதே வாழ்க்கை.. தோல்வி என்பது போட்டியில் பங்கேற்காததேயொழிய போட்டியிட்டு வருவதல்ல என்பதை அழகாகவும் நகைச்சுவையாகவும் ஒரு திரைப்படத்தில் சொல்லமுடியுமா? மனம் சார்ந்த குடும்பப் பிரச்சனைகளை இவ்வளவு அழகாக சொல்லமுடியும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஜோனதன் டேய்டன் மற்றும் அவரது மனைவி வெலரி ஃபாரிஸ். இது இவர்களது முதல் படமும்கூட.

Little Miss Sunshine எனும் சிறுமியர் அழகிப் போட்டிக்குத் தகுதி பெறும் ஆலிவின் குடும்பம் நெருக்கடியான சூழ்நிலைகளால் பிண்ணப்பட்டது. உணர்வுகளால் ஒவ்வொருவரும் தோல்வியின் விளிம்பில் இருப்பவர்கள். சிலர் விரக்தியின் காரணமாக மெளனித்தோ அல்லது பேசிக் கொண்ட்டோ இருப்பவர்கள். ஆலிவின் மற்றும் அவளின் தாய் ஷெரில் ஆகிய இருவருமே அவர்களது குடும்பத்தில் மிகமுக்கிய பாலமாக இருப்பவர்கள். ஆலிவ் சிறுமியாக இருப்பதால் அவளது ஆசைகளுக்கு இணங்க வேண்டி வேண்டா வெறுப்புடனும் ஷெரில் ஒரு தாயாக இருப்பதால் ஆலிவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு வேண்டும் விருப்புடன் அனைவரையும் கட்டி மேய்ப்பதும் படத்தில் மிக முக்கிய விஷயங்கள்.

ஆலிவுக்கு அழகிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அழகிப் போட்டி கலிபோர்னியாவில் நடைபெற இருப்பதால் அவளை பெற்றோர்களே அழைத்துச் செல்லவேண்டும். ஆலிவின் தந்தை ரிச்சர்ட் மனித வள மேலாண்மைப் பேச்சாளர். தோல்வியைப் பற்றி பாடமெடுக்கும் இவர் பலமுறை முயன்று ஒரு சிறப்பான இடம் கிடைக்காமல் துவண்டுகிடப்பவர். ஆலிவின் அழகிப் போட்டிக்குத் தயார்செய்யும் பொறுப்பு அவளது தாத்தாவாகிய எட்வினுக்கு உண்டு. எட்வின் ஒரு போதைமருந்து அடிமையும் கூட. ஆலிவின் அண்ணன் ட்வெயின் விமானியாக விரும்பும் கனவுடன் யாரிடமும் பேசாமல் மெளனத்தைக் கடைபிடிப்பவன்... குடும்ப வெறுப்பும் உண்டு. ஆலிவின் மாமா ஃப்ராங்க் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று மீண்டவர். ஓரினச்சேர்க்கையாளர். ஃப்ராங்க் பற்றி ஆலிவ் கேட்கும் விபரங்கள் குறிப்பிடத்தகுந்த பகுதி. ஆலிவ் சிறுமியாக இருந்தாலும் அவளுக்கு எல்லா விஷயங்களும் சொல்லப்படவேண்டும் என்பது அனுபவப்பயிற்சிக்காக என்பது நம்மிடையே பல விஷயங்களை மறைக்கும் பெற்றோர்களை நினைக்கையில் வெட்கமாகவே இருக்கிறது.



இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் ஆலிவ் ஜெயித்தே ஆகவேண்டும் எனும் மறைமுக கட்டாயத்தின் பேரில் எல்லாருமாக கலிபோர்னியா கிளம்புகிறார்கள். இவர்களது பயணப்பிரச்சனை வாடகைக்கு எடுத்த காரின் ஸ்டார்டிங் ட்ரபிலிலிருந்து தொடங்குகிறது. இவர்கள் ஒவ்வொருவரையும் மெல்ல மெல்ல நகைச்சுவையாக விவரிப்பதே திரைக்கதையின் மிகச்சிறப்பான அம்சம். எட்வினும் ஃப்ராங்கும் சண்டையிடுவதை ஆலிவ் கேட்டுவிடப்போகிறாள் என்று பதைக்கும் தந்தையை நினைக்கையில் ஒரு சில நினைவுகள் எழுகின்றன. நம் கண்ணருகே நமது பெற்றோர்கள் சண்டையிடுவது எத்தகைய பாதிப்புக்கு உண்டாக்குகிறது? எட்வின் ரிட்டயர்ட் ஆனவர் என்பதாலும் அவரது பிண்ணனி காரணமாகவும் விரக்தியடைந்து “ நிறைய பெண்களை அனுபவி” என்று அறிவுரை வழங்குவதிலிருந்து அவரது வாழ்க்கை எத்தனை வறட்சியான சூழ்நிலையில் இருந்தது என்று மேலோட்டமாக புரிந்து கொள்ளமுடிகிறது. நிறக்குருடு காரணமாக ட்வெயின் விமானியாக முடியாது எனத் தெரிந்தது முதல் அவர் மெளனமாக இருப்பதைக் கைவிடுகிறார். எட்வின் அன்றைய இரவு எதிர்பாராத விதமாக இறந்து போய்விடுகிறார். பிரச்சனைகள் என்பது இக்கட்டான சூழ்நிலைகளைப் பொறுத்துப் பார்த்து வருவதில்லை. திரைப்படம் முழுக்க பிரச்சனைகளைக் கையாள்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் இயக்குனர்

இவ்வகையான படங்களை ரோட் மூவி என்பார்கள். பயணத்தின் போது நிகழ்பவைகள். தோல்வி என்பது போட்டியில் கலந்து தோற்பதல்ல, போட்டியிலேயே கலந்து கொள்ளாமலிருப்பது. எட்வின் இறந்து போனாலும் போட்டியில் கலப்பதை நிறுத்திக் கொள்ளக்கூடாது என்பதற்காக பிணத்தோடேயே கலிபோர்னியா செல்கிறார்கள். எட்வின் இறந்த பிறகு அப்பிணத்தை கள்ளத்தனமாக மருத்துவமனையிலிருந்து எடுத்து வருவது நகைச்சுவையாகப் பிண்ணப்பட்டிருந்தாலும் அதற்குப் பின் மறைந்திருக்கும் வெற்றி பெறுதலுக்கான விருப்பமே முன்னுக்குத் தெரிகிறது. ஆலிவ் அந்த போட்டியில் கலந்து வெற்றிபெற்றாளா? அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதே படத்தின் இறுதிமுடிவு.

எட்வினாக நடித்திருக்கும் Alan Arkin இப்படத்திற்காக சிறந்த துணை நடிகர் அகடமி விருதைப் பெற்றார். திரைப்படத்தில் அவரது பாகம் சிறப்பானது. ஆலிவாக நடித்திருக்கும் சிறுமி அபிகெயிலின் நடிப்பு ஒரு அசாதாரண பாத்திரத்தை சாதாரணமாகக் கையாளும் சிறுமியைப் போன்றிருந்தது. தான் ஒரு அழகியில்லை என்று உணர்ந்து தனது தொந்தியை நீவிக்கொண்டிருக்கும் காட்சியொன்றே போதும் அச்சிறுமியின் மிக அழகான நடிப்புக்குச் சான்று. சிறந்த திரைக்கதைக்கான அகடமி விருது பெற்ற இத்திரைப்படம் நகைச்சுவையும் வாழ்வில் வந்து செல்லும் தோல்விகளை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதையும் கூறுகிறது. சிக்கலான குடும்பத்திலிருந்து ஒவ்வொருவராக மீளும் காட்சிகள் இயல்பாகவும் நாடகத்தனமற்ற திணிப்புகளற்றதாகவும் இருக்கின்றன. கதாநாயகக்குடும்பம் என்பதால் திறமைகள் மலிந்து கிடக்கும் என்று எண்ண வேண்டாம். ஒவ்வொருவருக்குள்ளும் அவர்களுக்கென்றே திறமைகள் இருக்கின்றன ; சிலருக்கு குறைந்தோ சிலருக்கு அதிகமாகவோ, ஆலிவ், அழகிப் போட்டிக்கான திறமைகளற்றவள் என்றாலும் கலந்து கொண்டது அவளின் வெற்றி. அவள் பெறும் தோல்வியை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வது அவளின் குடும்பத்தின் வெற்றி.

வெற்றி மட்டுமே வெற்றியல்ல ; தோல்வியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளுவதும் வெற்றியே....

பதிவு பிடித்திருந்தால் இண்ட்லியில் வாக்களியுங்கள்

Comments

Popular Posts