Eternal Sunshine of the Spotless Mind - விமர்சனம்


Directed : Michel Gondry
Starring  : Jim Carrey, Kate Winslet, Kirsten Dunst, Mark Ruffalo, Elijah Wood
Music : Jon Brion
Language : English
Genre : Romantic Fantasy

பகுதி 1

இன்று ஜோயலுக்கு என்ன நிகழ்ந்ததென்றே தெரியவில்லை. ஆழ்ந்த கனவொன்றில் சிக்கி உயிர்பிழைத்து வந்ததைப் போல இருக்கிறது காலை. சில வருடங்களைத் தாண்டிவிட்டோமா அல்லது இழந்துவிட்டோமா? இந்த இரவு அவனிடமிருந்து பிடுங்கியது என்னவாக இருக்கும்?

ஜோயல் மொண்டாக் செல்லுகிறார் எதுவோ நிகழ்ந்து முடிந்துவிட்ட உணர்வோடு. சிலசமயம் நினைவிழப்பிலிருந்து மீளாதா என்ற குழப்பத்தோடும்.. நிகழ்ந்துவிட்டவைகளை விட நிகழ்பவைகளின் மீதுண்டான கவனத்தின் பாதையிலேயே வாழ்க்கை செல்லுமென்பதை அவர் மறந்துவிடவில்லை.. ஆனால் இவ்வாறான குழப்பங்களுக்கு மத்தியில் ஜோயல் ஏன் இவளை சந்திக்கவேண்டும்?

பெண்களின் கவனம் தன் மீது பட்டவுடனேயே ஜோயலுக்கு ஏன் காதல் கொள்ளத் தோணுகிறது? மொண்டாக் செல்லும் ரயிலில் க்ளமெண்டைன் தன்னை ஜோயலிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறாள்........ க்ளமெண்டைன்... என்ன பெயரிது? கேலிக்குரிய பெயர்தான்.எண்ணங்களிலிருந்து எதிர்புறம் செல்லும் ஜோயலும் க்ளமெண்டைனும் காதல் கொள்கிறார்கள். புத்தகசாலை, ஐஸ்கட்டி பாதை, கடற்கரை வீடு என்று காதலர்களின் குறியீட்டு இடங்களைச் சுற்றுகிறார்கள். காதல்.... அது மகத்தான ஒன்று!!!

பகுதி 2

இரண்டு வருடங்களாக ஜோயலும் க்ளமெண்டைனும் காதலிக்கிறார்கள். ஒரு சண்டை காரணமாக க்ளமெண்டைன் ஜோயலைப் பிரிந்து லகுனா எனும் நினைவுகளை அழிக்கும் நிறுவனத்தில் தனக்கும் ஜோயலுக்கும் உண்டான நினைவுகளை அழித்து புதுவாழ்க்கை வாழ்கிறாள். மேலும் அந்த புது வாழ்க்கையில் பேட்ரிக் என்பவரோடு காதலும் புரிகிறார். இதைக் கேள்விப்படும் ஜோயல் இடிந்து போய் ஒருகட்டத்தில் தானும் க்ளமெண்டைனின் நினைவுகளை அழித்துவிடக் கோரி அதே நிறுவனத்தை நாடுகிறார். க்ளமெண்டைனின் நினைவு தூண்டும் எந்த ஒரு விஷயத்தையும் எடுத்து வருமாறு நிறுவனத்தினர் கூறவே, ஜோயல் அவள் சம்பந்தமான எல்லா பொருட்களையும் தூக்கி வருகிறார். அதைக் கொண்டு க்ளமெண்டைன் - ஜோயல் சந்திப்பு நினைவுகளைத் தூண்டி மேப் போடுகிறார்கள். தூக்கத்திலிருக்கும் பொழுது ஆழ்மனது வெளிப்படும் என்பதால் ஜோயலின் வீட்டிலேயே சென்று அவர் தூங்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மீதான நினைவுகளை அழிக்கிறார்கள். இச்சூழ்நிலையில் லகுனா நிறுவனத்தின் டாக்டரைக் காதலித்து பின்னர் நினைவுகளை அழித்துக் கொண்ட மேரிக்கு தன் நினைவுகள் அழிக்கப்பட்ட விஷயம் தெரிந்து லகுனா நிறுவனத்தைச் சூறையாடி அங்கிருந்த பதிவுசெய்யப்பட்ட ஒலிநாடாக்களை சம்பந்தப்பட்ட நினைவுகளை அழித்துக் கொண்ட எல்லாருக்கும் அஞ்சல் அனுப்பிவிடுகிறாள்.

பகுதி 3

மயக்கத்திலிருந்து எழுந்த ஜோயலுக்கு இரவு நடந்தது என்னவென்றே தெரியவில்லை.. எதையோ இழந்துவிட்டதைப் போன்று உணர்ந்த ஜோயல் எப்பொழுதும் போல மொண்டாக் செல்லுகிறார். மொண்டாக் செல்லும் ரயிலில் க்ளெமெண்டைன் எனும் பெண்ணைப் பார்க்கிறார். அவளாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். இருவரும் நீண்டநாட்கள் பழகியதைப் போன்றும் அவர்களறியாத சொல்ல முடியாத உணர்ச்சியின் தூண்டுதலாலும் காதலிக்கிறார்கள். இருவரும் புத்தம் புதிய காதலர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் நினைவுகளை அழித்துக் கொண்ட பழைய காதலர்கள்........... இருவரின் கைக்கும் தாங்கள் நினைவுகளை அழித்துக் கொண்ட ரகசியம் அஞ்சலில் வருகிறது......


Eternal Sunshine of the Spotless Mind, ஜிம் கேரி மற்றும் கேய்ட் வின்ஸ்லெட் ஆகியோரின் அற்புதமான நடிப்பில் மைக்கேல் கோண்ட்ரி இயக்கத்தில் 2004 ம் வருடம் வெளிவந்தது. நவீன அறிவியலின் மூலம் உளவியல் கூறுகளை அழிக்கும் பொருட்டு ஏற்படும் நினைவுத் திறனின் உறவு சிதைவு பற்றி அழிபடுபவர் நினைக்கும் நினைவுகளின் மீட்சி வழியே சொல்லப்படும் மிகச்சிறந்த காதல் கதையே இந்த படம். நமது ஆழ்மனத்தைத் தோண்டியெடுத்து அதனோடு நிகழ் மற்றும் நினைவு ஆகியவற்றைப் பொருத்தி விளையாடும் கனவுகள் அல்லது ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் ரகசியங்களை அதனதன் தோற்றத்தின் வாயிலாகவே சொல்லப்படுகிறது. 

முறையற்ற கதைசொல்லும் முறையில் இயக்கப்பட்டிருக்கும் இக்கதை முழுக்க நினைவுகளின் குறியீடுகள் நிறைந்து கிடக்கின்றன. ஜோயலின் நினைவுகள் எப்படி நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் முடிச்சுப் போடுகின்றன என்பதிலிருந்து தொடங்கி, தன் மனதிற்குரிய க்ளமெண்டைன் தன்னைவிட்டு அழிந்து போகிறாள் என்பதை நினைவுகளின் வாயிலாகவே அறிந்து கொள்ளும் ஜோயலின் உணர்ச்சிகரமான காதலில் உண்மையில் கண்கலங்கியே போய்விடுகிறோம். ஒவ்வொரு முறையும் க்ளமெண்டைனை தன்னுள் நிறுத்திக் கொள்ள ஜோயல் போராடுகிறார். அதற்காக அவர் நினைவுகள் செல்லும் பாதையெங்கும் நம்மையே அழைத்துச் செல்லுகிறார். ஆழ்மனது ஒவ்வொரு புள்ளியாக க்ளமெண்டைனை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க, ஜோயல் முடிவாக மறந்தும் போகிறார். சிறிதும் கவனம் சிதறாமல் பார்த்தாலொழிய குறியீட்டுக் காட்சிகளையோ திருப்புமுனைக் காட்சிகளையோ புரிந்து கொள்ளமுடியாது. கதைப் போக்கு முறையற்று வருவதாலும் நிகழ் மற்றும் நினைவுகாலங்களைப் பிரித்து வேறுபடுத்தி காணும் உழைப்பு தேவைப்படுகிறது. பெரும்பாலும் அது எளிமையாகவே இருந்துவிடுகிறது....

படத்தில் எண்ணற்ற குறியீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் ஜோயலின் நினைவு அழிவதை காட்சிகளின் மூலமே சொல்லப்படுவது சிறப்பு. ஜோயல் காணும் முகமற்ற மனிதர்கள், மறைந்து போகும் கார், மற்றும் கட்டிடங்கள், இடிந்து விழும் கடற்கரை வீடு, முகம் தெரியாத பேட்ரிக்கின் உருவம், திரும்பிப் பார்க்க இயலாத மனிதன், எழுத்துக்களற்ற புத்தகசாலை, இருபுறமும் செல்லமுடியாமல் ஒரு எல்லையற்ற நிலையில் ஜோயல் உணருவது, என ஒவ்வொரு குறியீடுகளும் ஜோயலின் நினைவுகள் அழிப்பதை மிக அழகாகச் சொல்லுகின்றன.

நாம் சிலசமயம் அரை தூக்கத்தில் இருக்கும்பொழுது வெளியே நடக்கும் பேச்சுக்கள் யாவும் கனவிலும் கேட்கும். இதை பலரும் உணர்ந்திருப்பார்கள். அப்படியான காட்சிகள் ஜோயலுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. ஜோயலின் நினைவுகளை அழிக்கும் பேட்ரிக் (க்ளமெண்டைனின் காதலனேதான்) மற்றும் ஸ்டானின் உரையாடல்கள் ஜோயலின் நினைவுகள் வழியே க்ளமெண்டைனோடு இணைக்கிறது. ஒவ்வொரு காட்சியின் விளிம்பிலும் க்ளமெண்டைன் மறைவதாகவே இருக்கும்.

படத்தின் இசை பெரும்பாலும் நிசப்தத்தையே வழங்குகிறது. மெல்ல ஆரம்பிக்கும் பியனோ முதல் இசையற்ற ஹம்மிங் பாடல் வரை கதையைச் சிதைத்துவிடாமலேயே இருக்கிறது.

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்ற இப்படம் நான் பார்த்தவற்றில் மிகச் சிறந்த திரைக்கதை உத்தி படங்களில் ஒன்றாகவும், ஒரு உணர்ச்சிகரமான தூண்டுதலை வழங்கி மனதுக்குள் அசைபோடும் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவும் கருதுகிறேன்.

உங்கள் மனதில் உணர்ச்சிமயமான காதல் ஒன்று இருந்தால் நிச்சயம் இப்படத்தைப் பாருங்கள்!!

அன்புடன்
ஆதவா.

Comments

Popular Posts